தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !


PUBLISHED ON : டிச 19, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏமாறும் இளைஞர்கள் !

என் கல்லூரி நண்பன், வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவன். ஒரு நாள் அவன், அதை பயன்படுத்தியிருக்க, நான் காரணம் கேட்டேன். அதற்கு அவன் சொன்ன விளக்கம், அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. 'பிரபல நிறுவனங்களின் வாசனை பூச்சுகளை பயன்படுத்தினால், இளம் பெண்கள் நம்மை தேடி வருவர்...' என்றான். நானும் அந்த விளம்பரத்தை பார்க்க, அதில் ஒரு இளைஞன் வாசனை திரவியத்தை பயன்படுத்தியவுடன், அரைகுறை ஆடைகளுடன் பல இளம் பெண்கள் தேடிவருவது போல் படமாக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு விளம்பரம் மட்டுமல்ல, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு விளம்பரம். ஆனால், அனைத்து விளம்பரங்களிலும், அரைகுறை ஆடையுடன் பெண்கள் தோன்ற தவறுவதில்லை. மற்றொரு நாள், பஸ்சில் பயணிக்கும் போது, கட்டட வேலை செய்யும் ஒரு இளைஞனிடம் இருந்து, 'பாடி ஸ்பிரே' வாசனை அதிகமாக இருந்தது. நான் அவனிடம், 'ஏன் இவ்வளவு அதிகமாய் உபயோகப் படுத்துகிறாய்?' என கேட்டதற்கு, 'விளம்பரத்தில் நிறைய அடிக்கிற மாதிரி காட்றாங்க. அப்படி அடிச்சாதானே பொண்ணுங்க கரெக்ட் ஆகும்...' என்றான். நிறுவனங்களின் வியாபார யுக்தியை கூட புரிந்து கொள்ளாத அந்த இளைஞன், வாரம் ஒருமுறை, தன் ஒருநாள் சம்பளத்தை செலவிட்டு,  'பாடி ஸ்பிரே' வாங்குவதாகவும் தெரிவித்தான். திரைப்படங்களை விட மக்களை அதிகம் சென்றடைவது தொலைக்காட்சி. அதில், இளைஞர்களிடம் சபலத்தைத் தூண்டி, அவர்களிடம் பணம் பார்க்கும் நிறுவனங்களின் பணத்தாசைக்கு முடிவே இல்லையோ!

— ம.செந்தில் குமார், மதுரை.

உதவத் துடிக்கும் உள்ளங்கள் !

என் மனைவியின் பள்ளித் தோழி ஒருவர், பல்கலைக் கழகத்தில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என் மனைவி, குடும்ப சூழ்நிலை காரணமாக பணியிலிருந்து நின்று விட்டார். சமீபத்தில், என் மகளின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க, மனைவியின் பால்ய தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பேசிக் கொண்டிருந்த போது, தோழி, என் மனைவியிடம், 'திருமணத்திற்கு எத்தனை ரூபாய் செலவழிக்கத் திட்டம்? பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டாயா?' எனக் கேட்டார். என் மனைவி வெளிப்படையாக, 'எல்லா செலவுகளுக்கும் தேவையான அளவு பணம் புரட்ட முடியவில்லை. இன்னும் 20 ஆயிரம் ரூபாய்க்கு பற்றாக்குறை உள்ளது. அதற்கு, ஏற்பாடு செய்ய வேண்டும்...' என கூறினாள். விடை பெற்று கிளம்பும் போது, தோழி என் மனைவியிடம், 'ஒரு நிமிடம் இரு...' என்று கூறி, உள்ளே சென்றார். பின் ஒரு தட்டில் பழங்களுடன் இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை வைத்து, என் மனைவியிடம் கொடுத்து 'பயமில்லாமல் திருமண வேலைகளைச் செய். வேறு உதவிகள் ஏதாவது இருந்தாலும் கேள்...' என்று கூறினார். திகைப்படைந்த என் மனைவி, பணத்தை பெற மறுத்து தோழியிடம், 'இத்தொகையை திருமணத்தன்று மணமேடையிலேயே கொடு. தற்போது நான் சமாளித்துக் கொள்கிறேன்...' என்று கூற, தோழியோ, 'என் (தோழியின்) மகளுக்கு செய்யும் அன்பளிப்பிற்கு நான் விளம்பரம் தேட விரும்பவில்லை...' என்று கூறி, இருபது ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த போது, நாட்டில் <உதவத் துடிக்கும் இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான், மனிதநேயம் வளர்ந்து கொண்டிருக் கிறது என எண்ணி பூரிப்படைந்தேன். 

— தி.சுந்தரேசன், கோவை.

கடுமையான தண்டனை வேண்டாம் !

நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது, நண்பர் மிகுந்த கோபமாக இருந்தார். ஏழாம் வகுப்புப் படிக்கும் அவரின் பையன் முகம், நீண்ட நேரம் அழுததின் அடையாளமாய் வீங்கிப் போயிருந்தது; காரணம் கேட்டேன். ஹோம்-ஒர்க் பண்ணாததற்கு பள்ளியில்  மகனுக்குக் கிடைத்த தண்டனையைப் பற்றி வேதனையுடன் சொன்னார். 'டாங்கி' என்று பெரிதாய் எழுதப்பட்ட போர்டை காலை பிரேயரில் எல்லா ஆசிரியர்களும் - மாணவர்களும் பார்க்கும் படி கழுத்தில் மாட்டி விடுவராம். பள்ளி நேரம் முடியும் வரை அந்த கழுதை போர்டு, கழுத்தில் தொங்கிய கோலத்தில் தான் வகுப்பில் இருக்க வேண்டுமாம். இதைக் கேட்டு, எனக்கு ஆக்ரோஷம். மறுநாள் நானும், நண்பரும் அப்பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து, எங்களின் கடுமையான அதிருப்தியையும், வருத்தத்தையும் முறையாக பதிவு செய்தோம்.  உடனே ரிசல்ட் கிடைத்தது. இனி, அந்த மாதிரியான தண்டனை கிடையாது என்று, உறுதி அளித்தனர். இளம் மாணவருக்கு ஆசிரியரின் கண்காணிப்பும், தண்டனையும் கண்டிப்பாக தேவைதான். ஆனால், அது அவர்களைப் பண்படுத்தும் மெல்லிய வழியில் இருக்க வேண்டுமேயொழிய, மனதைக் காயப்படுத்துகிற கடுமை வழியில் இருக்கக் கூடாது. — பி.ஜி.பி.இசக்கி,  திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us