
வாழ்க்கைக்கு உதவாத பொறியியல் பட்டம்!
என் உறவுக்கார பெண், மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்று, வேலைக்கு முயற்சி செய்து வருகிறாள். சமீபத்தில், அவளுக்கு பிரபல நிறுவனத்திடமிருந்து, பி.பி.ஓ., பணிக்கு, நேர்காணல் அழைப்பு வந்தது.
மென்பொருள் துறையில், வேலை கிடைக்காததால், பி.பி.ஓ., வேலைக்காவது முயற்சி செய்வோம் என்று, அப்பெண் நேர்காணலில் கலந்து கொண்டாள். அவளுக்கு துணையாக, நானும் சென்றிருந்தேன். அங்கு, எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
மென்பொருள் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற பலர், அந்த நேர்காணலுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது, தாங்கள் படித்த துறையில் வேலை எதுவும் கிடைக்காததால், இந்த நேர்காணலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
'பி.பி.ஓ., வேலையும் கிடைக்காவிட்டால், என்ன செய்வீர்கள்...' என்ற என் கேள்விக்கு அவர்களிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.
மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்றால், அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில், ஏதோ ஒரு சுமாரான கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெற்று, இன்று வேலைக்காக அல்லாடும் இவர்களின் நிலையை கண்டு, மிகவும் வருந்தினேன்.
சில நாடுகளில் குடும்பத்துக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுவர். இன்று, நம் நாட்டிலோ, குடும்பத்திற்கு ஒருவர், பொறியியல் பட்டதாரி!
மாணவர்களே... பொறியியல் மோகத்திலிருந்து வெளியே வாருங்கள்!
— ஜெ.கண்ணன், சென்னை.
சின்ன வேலையோ, பெரிய வேலையோ...
கோடிகளில் ஒப்பந்தம் எடுத்து, வீடுகள் கட்டித்தரும் ஒப்பந்ததாரர் அவர். சமீபத்தில், ஒரு இடத்தில், துணைக்கு ஒரு ஆளை வைத்து, சிறிய வேலையை செய்தபடி இருந்ததை. ஆச்சரியமாக பார்த்தேன்.
'உடைஞ்சு போன, பழைய, 'ஸ்லாப்'பை எடுத்துட்டு, புதுசு போடணும்ன்னாங்க. இம்மாதிரி சின்ன சின்ன வேலைகளுக்கு, 'பிட்' வேலைன்னு பேரு. 3,000 முதல், 10,000 ரூபாய் வரைக்குமான, 'பட்ஜெட்'ல நடக்கும். ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் அரை நாளில் முடிந்து விடும். 'மெட்டீரியல்' மற்றும் ஆள் கூலி போக, நமக்கு, 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
'பெரிய வாய்ப்பு எப்போதாவதுதான் வரும்; சின்ன வேலைகள் எப்போதும் இருக்கும். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலைன்னு எதுவும் கிடையாது. வேலை செய்துக்கிட்டிருக்கணும்; பணம் சம்பாதிச்சிட்டிருக்கணும்; அதுதான் முக்கியம்...' என்று, உழைப்பின் மகத்துவத்தை கூறினார்.
எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய மனோபாவம்; கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையும் கூட!
செய்வோமா?
—எஸ்.ஆனந்த், சென்னை.
ஓட்டுப் போட கை நீட்டினால்...
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஜூன் மாதம் சம்பளம் வாங்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், தேர்தல் அன்று விடுமுறை அளித்ததற்கு, சம்பளத்தை, 'கட்' செய்திருந்தனர்.
எங்கள் நிறுவன மேனேஜரிடம், 'அரசு, சம்பளத்தோடு தானே விடுமுறை அளித்தனர்; ஏன் சம்பளம் தரவில்லை?' என்று எல்லாரும் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா...
'நானும் முதலாளியிடம் கேட்டேன். அவர், எல்லாரும் இலவசமாகவா ஓட்டு போட்டாங்க... ஆயிரம் ஆயிரமா பணத்தை வாங்கிட்டு தானே ஓட்டு போட்டாங்க. அரசியல்வாதிகள் தரும் பணம் எல்லாம், எங்களைப் போன்ற தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி தானே... தேர்தலில் லாபம் அடைஞ்சிட்டு, சம்பளம் வேறு கேட்கின்றனரா...' என்றாராம் முதலாளி.
அவர் கூறிய பதில், செருப்பால் அடித்தது போல இருந்தது. ஓட்டு போட கை நீட்டி காசு வாங்கினால், இப்படியெல்லாம் அசிங்கமும், அவமானமும் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கடைசி வரை போராடியும், சம்பளம் தரவில்லை எங்கள் முதலாளி.
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

