தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் பார்க்க போகிறீர்களா...

ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.

ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், 'உனக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் இப்படி என்னையும், என் குடும்பத்தாரையும் அவமானப்படுத்தினே... உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டு தானே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஏன் இப்படி எல்லார் முகத்துலயும் கரியை பூசுன...' என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளான்.

அதற்கு அவள், 'எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, சித்தின்னு எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்டீங்க... வாழப் போற என்கிட்ட நீங்களோ, உங்க பெற்றோரோ ஒரு வார்த்தை கேட்டீங்களா... அப்படி கேட்டிருந்தால், என் கண்ணீரைக் காட்டி, சூசகமாகவாவது என் நிலையை உணர்த்தியிருப்பேனே..' என்று கூலாக சொல்லி, போய் விட்டாள்.

அதன்பின் தான், அவனுக்கு தன் தவறு உறைத்துள்ளது. பெண் பார்க்க செல்வோர், இதை கவனத்தில் கொள்வது அவசியம்!

— ஆர்.பிரபு, கோவை.

அடிக்கடி, 'சிம்' மாற்றினால் ஆபத்து!

மொபைல்போன் எண்ணை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவர், என் நண்பர். ஒவ்வொரு கம்பெனியும், 'மூன்றிலிருந்து, ஆறு மாதங்கள் இலவசமாக பேசலாம் அல்லது 'ரேட் கட்டர்' இல்லாமலேயே, குறைந்த கட்டணத்தில் பேசலாம்...' என, சலுகை தருவதை பயன்படுத்தி, மொபைல் எண்களை மாற்றுவார். குறிப்பிட்ட கால அளவு முடிந்ததும், அதை, எறிந்து விடுவர்.

சமீபத்தில், இவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, தகவல் தெரிவிக்க, நண்பரை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. காரணம், அதற்கு முதல் நாள் தான், புதிய எண்ணுக்கு மாறி இருந்தார். வீட்டில் யாருக்கும் புதிய எண் தெரியவில்லை. பின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன், அக்குழந்தை காப்பாற்றப்பட்டது.

நீண்ட நேரம் கழித்து, நடந்த விஷயம் எதுவும் தெரியாததால், யாருடனோ போனில் சிரித்து பேசியபடி, வீட்டுக்கு வந்த நண்பருக்கு, மனைவி மற்றும் உறவினர்கள் என, அனைவரும் அர்ச்சனை செய்ய, அப்போது தான் தன் தவறை உணர்ந்தார்.

இப்படி சலுகையை பயன்படுத்தும் நபர்கள், எப்போதும் நிலையான ஒரு எண்ணுடன் இருப்பது அவசியம்.

தற்போது, சாதாரண விலையில் கிடைக்கும் மொபைல்போனில் கூட, இரண்டு, 'சிம்' பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. ஒரு, 'சிம்' சலுகைக்கும், மற்றொரு, 'சிம்' நிரந்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவசரத்துக்கு பயன்படும்!

— எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

பஸ் ஸ்டாப் அறிவிப்பு!

சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர். இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?

— எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

திறமையுள்ள திருநங்கை!

சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, பக்கத்து அப்பார்ட்மென்டில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டவரை பார்த்து, ஆச்சரியமடைந்தேன். காரணம், அவர் திருநங்கை!

அதுபற்றி அவரிடம் விசாரித்த போது, 'தினமும் கடை கடையாக ஏறி, இறங்கி, காசு வசூல் செய்ய, மனம் இடம் தரவில்லை. வேலை பார்த்து, கவுரவமாக பிழைக்கலாம் என்று எண்ணி, ஒருவரிடம் வேலை கேட்டேன். அவர், அப்பார்ட்மென்ட் மற்றும் கடைகளின் வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் வேலையை வாங்கி கொடுத்தார். சில வீடுகளில், கார் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து சம்பாதிக்கிறேன்...' என்றார்.

இக்காலத்தில், வேலை செய்வதை சுமையாக கருதும் ஆண்கள் - பெண்களுக்கு மத்தியில், உழைத்து வாழ நினைக்கும் திருநங்கையை, அப்பகுதி மக்கள் பாராட்டி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். திருநங்கை மீது அக்கறை கொண்டு, கவுரவமாக வாழ வழிவகை செய்த அந்த நல்ல மனதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

கே.முருகேஸ்வரி, காரைக்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us