தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழையது பயனுள்ளது!

நானும், என் மனைவியும், சமீபத்தில், என் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது, நண்பர், அவரது மற்றும் மகனின் பழைய சட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார். 'என்ன பழசைப் போட்டு, பாத்திரம் வாங்க போறீங்களா...' என்று கேட்டேன். 'இல்லை...' என்றவர், அந்த உடைகளை எடுத்துக் கொண்டு, அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றார்.

அங்கு, கட்டட வேலை செய்யும் ஒரு நபரிடம் கொடுத்து விட்டு வந்தவர், 'வறுமையில் கஷ்டப்பட்டு, பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள இவங்க, கிழிந்த ஆடைகளை அணிந்து வேலை செய்றாங்க; அதையும் சிலர், கேலி பேசுறாங்க. அதனால் தான், இந்த துணிகளை எல்லாம் கொடுத்திட்டு வந்தேன்...' என்றார்.

இதைக் கேட்ட போது, எனக்கு சந்தோஷமாக இருந்தது. நமக்கு பயன்படாதவை, மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நிஜம் தானே!

— ரஜினி செந்தில், கோவை.

வழக்கத்துக்கு மாறாக...

புறநகர் விரிவாக்கப் பகுதியில், புதிதாக வீடு கட்டி, குடியேறியுள்ளோம். அருகில் நான்கைந்து வீடுகள் மட்டுமே உள்ள நிலையில், அவசர உதவிக்காக, மொபைல் போன் எண்களை, ஒருவருக்கொருவர் பரிமாறியுள்ளோம்.

ஒருநாள் நள்ளிரவு, எனக்கு மொபைல் போன் அழைப்பு வந்தது. வெளியூர் சென்றுள்ள என் கணவர் தான் கூப்பிடுகிறார் என நினைத்து, மொபைலை எடுத்துப் பார்த்தால், பக்கத்து வீட்டு பெண்ணின் அழைப்பு. 'என்னம்மா... இந்த நேரத்தில, வீட்டுல யாருக்கும் உடம்பு சரியில்லையா...' என்று கேட்டேன்.

அதற்கு அவள், 'அதெல்லாம் ஒண்ணுமில்ல... நான் சொல்றத கவனமா கேளுங்க; பாத்ரூம் போகும் போது, எதேச்சையாக பாத்ரூம், 'சிலைடு' ஜன்னல் வழியா பார்த்தேன். உங்க வீட்டு பின்புறம், யாரோ ஒரு ஆள் நுழைந்து, கொல்லை புற குழாயை திறந்து விட்டான். தண்ணீர் விழுகுற சத்தம் கேட்குதா...' என்று கேட்டாள். 'ஆமா கேட்குது...' என்றேன், பதற்றத்துடன்!

'சரி டென்ஷன் ஆகாம அமைதியா இருங்க; எந்தக் காரணத்தைக் கொண்டும் கதவைத் திறந்துடாதீங்க. நான் பக்கத்து வீடுகளுக்கு தகவல் சொல்லி எழுப்புறேன்; எல்லாருமாக ஒரே நேரத்தில், 'லைட்'டை போட்டு, அவனை கையும், களவுமா பிடிச்சிடுவோம்...' என்றாள்.

ஜன்னல் வழியாக பார்த்த போது, யாரோ சுவரேறி குதித்து, பக்கத்து வீட்டிற்குள் நுழைவதும், பின், அங்கிருந்து தெருவிற்கு தாவி ஓடுவதும் தெரிந்தது.

உடனே எல்லாரும், லைட்டை போட்டு கூச்சலிட, ஆள் எப்படியோ தப்பி, பைக்கில் ஏறி பறந்து விட்டான்.

ஆண் துணையில்லா வீடுகள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவோர் வீடுகளில் இருக்கும் பெண்கள், இரவில் வழக்கத்துக்கு மாறாக சத்தம் கேட்டால், உடனே கதவை திறக்காதீர்கள்; கதவை திறக்க வைக்க, கொள்ளையர்கள் செய்யும் யுக்தி இது. ஜாக்கிரதை!

— ஏ.காயத்திரி, மதுரை.

நேரத்தை பயனுள்ளதாக்கலாமே!

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அது மதிய நேரம் என்பதால், அவள், 'டிவி' பார்த்துக் கொண்டிருப்பாள் என நினைத்தேன். ஆனால், அவள், பழைய நாளிதழ்களை வெட்டி, பேப்பர், 'கவர்' செய்தபடி இருந்தாள். நான் வியப்புடன் பார்ப்பதை பார்த்து, 'பொழுது போக்க, 'டிவி'யே கதியென்று கிடக்காமல், உருப்படியா ஏதாவது செய்யலாம் என நினைத்து, பேப்பர், 'கவர்' செய்து, அருகில் உள்ள கடைகளுக்கு விற்று வருகிறேன். நாளிதழ்களை எடைக்கு போட்டால் கிடைக்கும் பணத்தை விட, இதில், அதிகப் பணம் கிடைக்கிறது. அதோட, பிளாஸ்டிக், 'கவர்' புழக்கத்தில் வராமல் இருக்க, என்னால் முடிந்த சிறு உதவி...' என்றாள்.

வீட்டிலேயே சிறு தொழில் செய்ய முற்படும் என் தோழியைப் போன்று, பொழுது போகவில்லை என புலம்பும் மற்ற பெண்களும் உருப்படியாக ஏதாவது செய்ய, முன் வரலாமே!

என்.உஷாதேவி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us