PUBLISHED ON : டிச 26, 2010

''அரிசி''ன்னா அர்த்தம் தெரியுமா ?
சில மாதங்களுக்கு முன் நடந்த நண்பரின் மகன் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. கடந்த வாரம் ஓய்வு கிடைக்கவே, நன்பரின் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் மட்டும் வீட்டில் இருந்தார். 'மணமக்கள் எங்கே?' எனக் கேட்டதற்கு, அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய, பதிவாளர் அலு வலகத்திற்கு சென்றிருப்பதாகக் கூறினார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களும் வந்து விட்டனர். நான் கொண்டு சென்றிருந்த பரிசை கொடுத்து, மணமக்களை வாழ்த்தினேன். 'போன காரியம் என்னாச்சு? எவ்வளவு செலவாச்சு?' என்று நண்பர் கேட்க, 'சான்றிதழ் வாங்குவதற்கு அடுத்த வாரம் வரச் சொல்லி இருக்காங்க. பதிவுக் கட்டணம் 100 ரூபாய் தான்; அரிசிதான் மூவாயிரம் ரூபாய் ஆச்சு!' என மகன் கூறியதும், 'அரிசி மூவாயிரம் ரூபாயா?' என நண்பர் வியக்க, 'ஆமாம்பா... பதிவாளர் ஒரு பெண்தான். 'அரிசி' மூவாயிரத்துக்கு ஒரு பைசா குறையாதுன்னு கறாரா சொல்லிட் டாங்க...' என்றான் 'ம்... எல்லாத்துலேயும் சம உரிமை கேட்கிற பெண்கள், இதுல மட்டும் விட்டுக் கொடுத்துடுவாங்களா என்ன? சரி... ஒழியட்டும் போ!' என்றார் விரக்தியுடன். 'அரிசி மூவாயிரம்ன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே... எத்தனை கிலோ அரிசி...' என, அப்பாவித்தனமாக நான் கேட்க, வாய் விட்டுச் சிரித்த நண்பரோ, 'அரசு ஊழியர்களுக்கு கொடுக்கற லஞ்சத்தைத் தான், 'அரிசி'ன்னு குறிப்பிட்டோம். சொந்தக்காரங்க இறந்து விட்டால், அவர்களுக்கு, 'வாய்க்கரிசி' போடுவோம் இல்லையா... லஞ்சம் கொடுப்பதையும் நாங்கள் அப்படித்தான் குறிப்பிடுவோம்...' என, விளக்கம் அளித்ததைக் கேட்டு, ஆடிப்போய் விட்டேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லாரிடமும், எல்லாவற்றுக்கும் கை நீட்டும் அரசு ஊழியர்களே... எவ்வளவு வயிற்றெரிச்சலும், கோபமும் இருந்தால், உங்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சத்தை, 'வாய்க்கரிசி' என்று சொல்வர். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்... நீங்கள் லஞ்சம் வாங்குவதன் மூலம் உங்கள் குடும்பத்தினர், சந்ததியினர் அனைவருக்கும் பாவத்தையும், சாபத்தையும் சேர்க்கிறீர்கள் என்பதை உணருங்கள்.
— கு.கணேசன், பனங்கோட்டூர்.
வருமானவரி அலர்ஜியா ?
அரசுப் பணியாளரான என் நண்பர், வீட்டுக்கடன் வாங்கி சொந்த வீடு கட்டியுள்ளார். தற்போது, சம்பள கமிஷன் பரிந்துரையால், நல்ல சம்பளம் பெற்று வரும் அவரிடம், 'சம்பளம் தான் கூடியுள்ளதே... வீட்டுக்கடனை அடைத்து விடலாமே!' என நான் கேட்க, 'வீட்டுக்கடனுக்காக வங்கிக்கு கட்டும் தவணைத் தொகைக்கு வருமான வரிக்கழிவு உள்ளது. அதனால்தான், வீட்டுக்கடனை அடைக்காமல் உள்ளேன்...' என்று, தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினார் நண்பர். இந்த வருடம் 14 ஆயிரம் ரூபாய் வருமான வரி வந்தாகவும், வீட்டுக்கடன் தவணைத் தொகையால் அது ஏழாயிரம் ரூபாயாக குறைந்துள்ளதாகவும் கூறினார் அவர். அவரது வீட்டுக்கடன் தவணைக்கான வங்கி ஸ்டேட்மென்ட்டை வாங்கிப் பார்த்தேன். அவர் கட்டியிருந்த 62 ஆயிரம் ரூபாயில், 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டியாக கட்டியிருப்பது தெரிந்தது. அதைச் சுட்டிக்காட்டி, ஏழாயிரம் ரூபாய் அரசாங்கத்துக்கு வருமான வரி கட்டுவதை தவிர்க்க, வங்கிக்கு 49 ஆயிரத்திற்கு மேல் வட்டி கட்டி இருக்கிறார் என்பதை உணர்த்தினேன். நண்பரும் இந்த உண்மையை அறிந்து திகைத்தார். வருமான வரி என்றாலே பலருக்கும், 'அலர்ஜி'யாக உள்ளது. நாம் செலுத்தும் வரியைக் கொண்டுதான் அரசாங்கம் நடக்கிறது. வரி செலுத்துவதை தவிர்க்க, மூளையைக் கசக்கி, 'கால்குலேஷன்' போடுவதையும், வரியைக் தவிர்க்க வட்டி கட்டுவதையும் விடுத்து, உரிய வரியை செலுத்தலாமே! — ஜே.சூரியன், திருநெல்வேலி.
ஆணாதிக்கத்தின் விஸ்வரூபம் ....
தோழியின் தங்கைக்கு திருமணமாகி மூன்று மாதம் கூட ஆகவில்லை. அதற்குள், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு. விளைவு... இருவரும் பணி நிமித்தமாக சென்னையில் இருந்தும், தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். காரணம், பர்ஸ்ட் நைட்டில், 'என் நண்பர்களையெல்லாம், 'அண்ணன்' என்று தான் நீ கூப்பிட வேண்டும்...' என்று அதிகார தொனியில் ஆணையிட்டிருக்கிறார் அவரது கணவர். அவரின் இந்த அநாகரிக அணுகுமுறையில், முதல் நாளே மனம் வெறுத்துப் போய் விட்டாள் தோழியின் தங்கை. ஆனாலும், மறுப்பேதும் கூறாமல், நாசூக்காக மவுனம் காத்து நழுவியிருக்கிறாள்.
ஒரு நாள் வீட்டுக்கு வந்த கணவரின் நண்பரிடம் பழக்க தோஷத்தில், 'சார்' போட்டு பேச, அவள் கையைப் பிடித்து தரதரவென்று சமையல் அறைக்கு இழுத்துச் சென்று, 'ஏய், முட்டாக் கழுத... எத்தனை தடவ தான் உனக்கு சொல்றது... அவனை அண்ணன் என்று கூப்பிட்டால், 'சைட்' அடிக்குற மூடு வராதுன்னு... இந்தாப்பாரு... இப்பவே என் முன்னால அவனை அண்ணன்னு சொல்லல... நடக்கிறதே வேறு...' என்று எச்சரித்து, மிரட்டியிருக்கிறார். இந்த மாதிரியான அரை வேக்காட்டு சம்பவங்கள் தொடர, பொறுக்க முடியாமல் ஊரிலுள்ள பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து விட்டாள். அவர்களிடம், 'இனியும் என்னால் ஹிஸ்டீரியா பேஷன்ட்டோடு வாழ்க்கை நடத்த முடியாது!' என, தீர்மானமாய் தெளிவுபடுத்தி விட்டாள். ஆண்டாண்டு காலமாய் இந்த மண்ணில் புரையோடிப்போன ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு, எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது பார்த்தீர்களா?
— எஸ்.பி.ஜெயசுதா, அம்பாசமுத்திரம்.
