PUBLISHED ON : செப் 25, 2016

குழந்தைகள் முன் சண்டை போடலாமா?
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் நண்பரின் மகன், திடீரென காணாமல் போய் விட்டான். ஒரு மாதமாக, ஊர் ஊராக தேடி அலைந்த போது, 'தான் ஒரு அனாதை...' என்று கூறி, ஒரு ஓட்டலில், 'டேபிள்' துடைக்கும் பையனாக வேலை செய்தவனை கண்டுபிடித்தோம். பெற்றோரை பார்க்கவே, அவனுக்கு பிடிக்கவில்லை; சமாதானம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்து காரணம் கேட்டேன்.
'எங்கம்மாவும், அப்பாவும் சண்டை போடுறது சகஜம் தான். ஆனா, என் கூட படிக்கும் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் வீட்டிற்கு வந்திருந்த போது, அம்மாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர், அசிங்கமாக திட்டி, கேவலமாக நடந்துக்கிட்டாங்க.
'அத, அவனுங்க வகுப்புல எல்லாரிடமும் சொல்ல, அனைவரும் என்னை கேலி செய்து, பட்டப் பெயர் வைச்சுட்டாங்க. அதனால் தான் ஸ்கூலுக்கு போக பிடிக்கல...' என்றான்.
பெற்றோரே... உங்கள் பிள்ளைகள், அவர்கள் முன் நீங்கள் சண்டையிடுவதைக் கூட தாங்கிக் கொள்வர். நண்பர்கள் முன், சண்டையிட்டு, அநாகரிமாக பேசுவதை அவமானமாக கருதுவர். அதனால், அச்சமயத்தில், சண்டையிடுவதை தவிருங்கள் அல்லது அநாகரிகமாக பேசாதீர்கள். இல்லையேல், இதுபோன்ற விபரீதங்கள், உங்கள் குடும்பத்திலும் நேர வாய்ப்புள்ளது.
ஆசிரியர்களும், 'சக மாணவரின் குடும்பத்தை பற்றி பேசி, நோகடிப்பது பாவம்...' என, மாணவர்களுக்கு அறிவுறுத்துவது நல்லது!
— எல்.ஜீவா, சென்னை.
தவிர்க்க வேண்டிய கேள்விகள்!
ஒரு காலத்தில், நட்பை உருவாக்க, வளப்படுத்த, பயன்படுத்தப்பட்ட கேள்விகள், இன்று, எதிர்மறை விளைவை ஏற்படுத்துவதாக மாறி விட்டன. புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடம், கீழ்க்கண்ட கேள்விகளை கேட்பதை தவிர்ப்பது தான் இன்றைய நாகரிகம்.
பொதுவாகவே, யாரிடமும், 'திருமணம் ஆகி விட்டதா...' என்று, எடுத்த எடுப்பில் கேட்காதீர்கள். மாறி வரும் சமுதாயச் சூழலில், பெரும்பாலும் தாமத திருமணங்கள் தான் நடக்கின்றன; திருமணம் ஆகாதோருக்கு, இக்கேள்வி, வருத்தத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும்.
மேலும், 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்... இரண்டும் பெண் குழந்தைகளா, பையனை எப்போ பெத்துக்க போறீங்க... உங்கள் கணவர் என்ன செய்கிறார், உங்களுக்கு எவ்வளவு சம்பளம், சொந்த வீடா, வாடகை வீடா... இந்த பைக்கை, 'ரெடி' கேஷில் வாங்கினீர்களா, லோனில் எடுத்தீர்களா, உங்க பையனுக்கு, பெண்ணுக்கு எப்போ திருமணம்...'
இதுபோன்ற கேள்விகளை தவிர்த்தால், உங்கள் நட்பு சுமூகமாக இருக்கும். தூய்மையான அன்பு, உதவி செய்யும் மனப்பான்மை, அக்கறை மற்றும் அனைவரையும் மதிக்கும் தன்மையும் இருந்தாலே, நட்புறவு மலரும்; நட்பு வட்டம் பெரிதாகும்!
— சி.ஸ்ரீதர், திருப்பூர்
கண் திருஷ்டியால் மாறிய பார்வை!
தன் ஒன்றரை வயது குழந்தைக்கு, மாறுகண் அறிகுறி தென்பட, கண் டாக்டரை அணுகியுள்ளாள், என் தோழி. குழந்தையை பரிசோதித்த மருத்துவர், 'குழந்தைக்கு புட்டிப்பால் குடுக்கும் போது, புட்டியை அப்படியே கொடுப்பீங்களா, துணியால் மூடி மறைத்து தருவீர்களா...' என்று கேட்க, 'என் மாமியார் புட்டியை துணியால் மூடி தரச் சொல்வாங்க; நான் தான் அதை மூடநம்பிக்கைன்னு சொல்லி, செய்ய மாட்டேன்...' என்று கூறியுள்ளாள், தோழி.
'அதனால் வந்த வினை தான் இது...' என்று சொன்ன மருத்துவர், 'பசி வேகத்தில் குழந்தை பாலைக் குடிக்கும் போது, புட்டியில், நிறைய நுரை நுரையாக நீர்க்குமிழ் எழும்; அதை உற்றுப் பார்தவாறே குடிப்பதும் மாறுகண் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாகி விடுகிறது. இனிமேலாவது, புட்டியை துணியால் மூடி கொடுங்க...' என்று சொல்லியுள்ளார்.
இளம் தாய்மார்களே... பெரியவர்கள் சொல்வதை எல்லாம், மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விடாதீர்கள். போதிக்கும் போது புரியாதது, பாதிக்கும் போது தான் புரியும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்!
— என்.சக்தி, வேப்பங்குளம்.
