தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொந்த வீடு ஆசையால்...

சென்னை புறநகரில், தனி வீடு ஒன்று, மலிவு விலைக்கு வருவதாக ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் தகவல் கூறினார். சொந்த வீடு, அதுவும் தனி வீடு வாங்க வேண்டும் என்ற என் நீண்ட கால கனவு, நனவாக போகிறது என்ற ஆர்வத்தில், 30 வருடம் சம்பாதித்த பணம் முழுக்க இதில் போட முடிவெடுத்தேன். புரோக்கர் கூறிய ஒரு நல்ல நாளில், பணத்தை எடுத்துக் கொண்டு, பதிவு அலுவலகத்துக்கு ஆட்டோவில் சென்றேன். அலுவலக வாசலில் இறங்கி, ஆட்டோ கட்டணம் கொடுத்தபோது, ஆட்டோ டிரைவர் அழுது விட்டார். என்ன, ஏது என்று விசாரிக்க, பெண்ணின் திருமணத்துக்காக இந்த சொந்த ஆட்டோவை விற்க இருப்பதாகவும், இதுவே கடைசி சவாரி என்றும், அந்த வருத்தத்தில் அழுது விட்டதாக கூறி, மன்னிப்புக் கேட்டார். மனதை என்னவோ செய்ய, அலுவலகத்தினுள் சென்றேன். அங்கு, வீட்டு உரிமையாளர் என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் புரோக்கர். அவர் முகத்தை பார்த்த போது, '15 வருடம் வாழ்ந்த வீட்டை விற்க வேண்டியுள்ளதே...' என்ற எந்த வருத்தமும் இல்லாமல், புன்முறுவலோடு

காணப்பட்டார். அப்போதுதான், எனக்குள் சிறு சந்தேகம் ஏற்பட்டது. உடனே, புரோக்கரை தனியாக அழைத்து, பணம் கொஞ்சம் குறைவதாகவும், நண்பனை எடுத்துவரச் சொல்லி இருப்பதாகவும் கூறி, வெளியில் வந்து, எனக்கு தெரிந்த போலீஸ் ஆபிசருக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தேன். 'அவர்கள் ஏமாற்று பேர்வழியாக இருக்கக் கூடும். அவர்களிடம் இருக்கும் டாக்குமென்ட் கூட போலியாக இருக்கலாம். எதற்கும் அவர்களுடன் பேச்சுக் கொடுத்து, அங்கேயே நிறுத்தி வையுங்கள். வந்து விசாரிக்கிறேன்...' என்று கூறினார். நானும், அவர்களுக்கு போக்குக் காட்டி கொண்டிருந்தேன். போலீஸ் ஆபிசர் வந்து விசாரித்ததும், அவர்கள் ஏமாற்று ஆசாமிகள்தான் என்பது நிரூபணமாயிற்று. தக்க சமயத்தில், தன் வருத்தத்தை வெளிப்படுத்தி, என்னை உஷார் படுத்திய அந்த ஆட்டோக்காரரை தேடிக் கண்டுபிடித்து, அவர் பெண்ணின் திருமணத்திற்கு முன்கூட்டியே பரிசு கொடுத்து, அவருக்கு நன்றி கூறிவிட்டு வந்தேன். ஒருவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும், அங்க அசைவுகளையும் கூர்ந்து கவனித்தால், அவருடைய சொல்லும், செயலும், அசலா, நகலா என்பதை ஓரளவு எடை போட்டு விடலாம் என்பதை, இதன் மூலம் அறிந்து கொண்டேன்.

— எஸ்.ராமன், சென்னை.

எஸ்.எம்.எஸ்.,சால் வந்த வினை!

என் நெருங்கிய அலுவலகத் தோழி ஒருத்திக்கு, சக ஊழியர்கள் பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது வழக்கம். நேரமின்மையால் எதையும் அவள் அழிக்கவில்லை. இப்படியே, நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.,கள் மொபைல் போனில் சேர்ந்து விட்டன. அவள் கணவன், இந்த எஸ்.எம்.எஸ்.,களை யதேச்சையாகப் பார்க்க, சிலவற்றில் இரட்டை அர்த்தங்கள் தெரியவர, அது பெரிய பிரச்னையாகி, தோழிக்கும், அவள் கணவருக் கும் சண்டை வலுவடைந்தது. தோழி, ஏன் இதற்கெல்லாம் இடம் கொடுக்கிறாள் என்பது அவள் கணவரின் வாதம். தன் கணவன், தன்னை நம்பவில்லையே என்று தோழிக்கு வருத்தம். எப்படியோ விஷயம் வெளிவந்து, எஸ்.எம்.எஸ்., வருவது நின்று விட்டது. பொழுதுபோக்காக அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்.,சால் வீண் விபரீதம். நெடுநாட்கள் கழித்து, தோழியும், கணவரும் சமாதானம் அடைந்தனர். இருப்பினும், ஆண்-பெண் இணைந்து வேலை செய்யும் இடங்களில், சக ஊழியர் களுடன் பெண்கள் சரியான இடைவெளி விட்டுப் பழகி, பிரச்னைகளைத் தவிர்க் கலாமே! — கலா ஜெயக்குமார், சென்னை.

அறுவை சிகிச்சை எதற்காக ?

என் நண்பரின் மனைவியை, ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்தனர். கருத்தரித்தது முதல், தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தான் பரிசோதித்து வந்திருக்கின்றனர். 'பிரசவ தேதி வந்து விட்டது; அறுவை சிகிச்சை மூலம், நாளை பிரசவம் வைத்துக் கொள்ளலாம்...' என்று டாக்டர் சொன்னார். 'முதல் குழந்தை, சாதாரண பிரசவம் மூலம் தான் பிறந்தது; எனவே, இந்த இரண்டாவது குழந்தையையும், சாதாரண பிரசவத்தின் மூலம் பிறக்க வைக்க முயற்சியுங்களேன்...' என்று நண்பர் குடும்பத்தார் சொல்லி உள்ளனர். ஆனால், 'அறுவை சிகிச்சை மூலம் தான், பிரசவம் பார்க்க முடியும்...' என்று டாக்டர் தெரிவித்து விட்டார். நண்பர் குடும்பத்தார், அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி, பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அவளை சேர்த்தனர். அங்கே அவளை, 'ஸ்கேன்' எடுத்துப் பார்த்தனர். 'பிரசவ காலத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளது. சாதாரண பிரசவம் மூலம் குழந்தை பிறக்கும்...' என்று கூறினர். அதே போல, நான்கு நாட்களில், சாதாரண பிரசவம் மூலம் குழந்தை நலமாக பிறந்தது. தானாக கனியும் கனியை, தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா? காசு பிடுங்கு வதற்காக அறுவை சிகிச்சை பிரசவத்தை கையாளும் மருத்துவர்கள் மனம் மாறுமா? - கு.அருணாசலம், தென்காசி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us