தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 23, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முட்டாள் பெற்றோராக இருக்காதீர்!



என் தோழியின் மூத்த மகள், 10ம் வகுப்பு படிக்கிறாள்; இன்னும், பூப்படையவில்லை. சமீபத்தில், தோழியின் ஆறாம் வகுப்பு படிக்கும் இளைய மகள் பூப்படைந்தாள். உடனே தோழி, மூத்த மகளை பார்த்து, 'நீ பிறந்ததே வீண்... என்ன பாவம் செய்தியோ, இன்னும் வயசுக்கு வராம இருக்குற... உன்னால, நான் என்னென்ன கஷ்டங்களை படவேண்டியிருக்குமோ தெரியலயே...' என்று, வாய்க்கு வந்தபடி, கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறாள்.

இதனால், மனமுடைந்த சிறுமி, தற்கொலைக்கு முயல, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சரியான நேரத்தில், மருத்துவமனையில் சேர்த்து, பிழைக்க வைத்தனர். விஷயம் கேள்விப்பட்டு, உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும், தோழியை கடுமையாக திட்ட, தன் தவறை உணர்ந்து, அழுதாள், தோழி.

பெற்றோரே... மாறி வரும் உணவுப் பழக்கம் மற்றும் ஹார்மோன்கள் காரணமாக, குழந்தைகள் பூப்பெய்யும் காலம் மாறுபடலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதைவிடுத்து, பிள்ளைகளை திட்டி, அவர்களை தவறான முடிவெடுக்கச் செய்யும், முட்டாள் பெற்றோராக இருக்காதீர்கள்!

— என்.அன்னலட்சுமி, ராஜபாளையம்.

திருந்துவரா சீரிய(ஸ்)ல் வில்லிகள்!



கடந்த வாரம் துணிக்கடைக்கு சென்றிருந்த போது, பெண்கள் பிரிவில், ஏகப்பட்ட கூட்டம். எனக்கு அருகில் இருந்த நடுத்தர வயதுடைய இரு பெண்கள், மெகாத் தொடர்களில் வரும் கதாநாயகி, மாமியார் மற்றும் மருமகள் உடுத்துகிற சேலைகளை ஒப்பிட்டு பேசி, ஒவ்வொரு சேலையையும், ஏதாவது ஒரு குறை கூறி, ஒதுக்கி வைத்தனர்.

அத்துடன், விற்பனையாளரிடம், ஒரு குறிப்பிட்ட சீரியலைக் கூறி, அதில், கதாநாயகி உடுத்தியது போன்ற சேலையை கேட்டனர். அவரும், அவர்கள் கூறிய நிறத்தில், ஒரு சேலையை காண்பிக்க, 'இது, அவ கட்டுன சேலை மாதிரி இல்லயே... நீங்க, அந்த சீரியலை பார்த்ததில்லையா...' எனக் கேட்க, விற்பனையாளர் கடுப்பாகி, 'ஏம்மா, நாங்க வேலையை விட்டுட்டு சீரியலா பாக்க முடியும்... சேலையோட நிறம், டிசைனை சொல்லுங்க... எடுத்து போடுறேன்; அத விட்டுட்டு, சீரியலில் நடிகைங்க கட்டுற மாதிரியே வேணும்ன்னா, எங்கம்மா போறது...' என்றார்.

உடனே, இருவரும் கோபித்து, கடை மேலாளரிடம் சென்று, 'நாங்க சொல்ற கலர்ல, விற்பனையாளர் புடவையே காண்பிக்கல...' என்று புகார் கூறி, சென்று விட்டனர். கடையின் மேலாளரும், விற்பனையாளரிடம், காரணம் கேட்காமல், திட்டி விட்டார்.

சீரியல் மோகம் பிடித்த பலர், பகல் பொழுதெல்லாம், 'டிவி'யே கதியென்று இருக்கின்றனர் என்றால், எல்லாருமா அப்படி இருப்பர்; இல்லை அந்த விற்பனையாளர் தான், வேலையை விட்டு விட்டு, சீரியல் பார்க்க முடியுமா?

இனிமேலாவது, இம்மாதிரியான சீரியல் பைத்தியங்கள் திருந்தினால் சரி!

— கா.ஜெயசுதா காசிநாதன், ஒட்டன்சத்திரம்.

ஆட்டம், பாட்டம் அவசியமா?



வழக்கமாக, எங்கள் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழாவில், இன்னிசை கச்சேரி மற்றும் குத்தாட்டம் போன்ற நிகழ்ச்சிகளே நடைபெறும். இதனால், செலவு அதிகமாவதோடு, சண்டை சச்சரவுகளும் ஏற்படும்.

இதை தவிர்க்க, இம்முறை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், 'மேஜிக்' ஷோ, இளைஞர்களுக்கான பொது அறிவு போட்டி, பெரியவர்களுக்கான பட்டிமன்றம், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் பெண்களுக்கான சமையல் போட்டி என, வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

ஆர்பாட்டம் இல்லாமல், அதேசமயம், அமைதியாகவும், ஆனந்தமாகவும், நடந்து முடிந்தது, விழா. திருவிழாவில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் வெறுமனே பொழுதுபோக்காய் இல்லாமல், பயனுள்ளதாக இருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை, மற்ற இடங்களிலும் நடத்தினால், திருவிழா மேலும் சிறக்குமே!

— தேவகன்னிகா காந்தி, உசிலம்பட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us