PUBLISHED ON : ஜன 09, 2011

'பலே' இளைஞர்கள்!
சமீபத்தில் ஒருநாள், பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். வள்ளுவர் கோட்டம் தாண்டி, பெரியார் ரோடு நிறுத்தம் வருவதற்குள் சரியான போக்குவரத்து நெரிசல். வாகனங்கள் இடைவெளி இல்லாமல், சாலையை அடைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல போட்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த நெரிசலில், ஒரு ஆம்புலன்ஸ் போக வழியில்லாமல் சைரனை அலறவிட்ட படி ஊர்ந்து கொண்டிருந்தது. அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, எதிர்ப்பக்க டீக்கடையில், டீ குடித்துக் கொண்டிருந்த மூன்று லுங்கி கட்டிய இளைஞர்கள், கையில் சிறு தடிகளை எடுத்துக் கொண்டு, நெரிசலுக்குள் புகுந்து, அடைத்தபடி நின்று கொண்டிருந்த வாகனங்களை, சத்தம் போட்டு மிரட்டி, சாலையின் இடதுபுறமாக ஓரங்கட்ட வைத்து, அந்த ஆம்புலன்சுக்கு வழி கிடைக்கச் செய்தனர். மிக எளிதாக, சில வினாடிகளில் அந்த ஆம்புலன்ஸ், கோடம்பாக்கம் மேம்பாலத் தில் ஏறிப் போய் விட்டது. பலநாள் தாடியும், அழுக்கு லுங்கியுமாக இருந்த அந்த இளைஞர்களின் சமுதாய அக்கறை, மெத்தப் படித்து, கார்களில் சென்று கொண்டிருந் தவர்களுக்கு வரவில்லை என்பது வேதனைக்குரியது. பஸ்சில் இருந்தபடியே மானசீகமாக அந்த இளைஞர்களுக்கு நன்றி சொன்னேன். இதுபோன்ற இளைஞர்களின் பொருட்டால் தான், மழை பெய்கிறது போலும்!
— கே.எம்.பாருக், சென்னை.
மாணவர்களை பிச்சையெடுக்க தூண்டலாமா?
சமீபத்தில், நான் வேலைக்கு செல்லும் போது, வழியிலுள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியின் வாசலில், அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளில் சிலர், உண்டியல் குலுக்கிக் கொண்டிருந்தனர். நிதி வசூல் செய்யக்கூடிய அளவுக்கு இப்போது என்ன நேர்ந்தது எனக் கருதி, நானும் பத்து ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு, ஒரு மாணவரிடம் காரணம் கேட்டேன். பணியிலிருந்து ஓய்வு பெறும் ஆசிரியர் ஒருவருக்கு, வாழ்த்து பேனர் வைக்கவும், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கவும், அவரவர் வீட்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு வீட்டிலிருந்து பணம் கொண்டு வர இயலாத மாணவர்கள், வீதியில் வசூல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாகவும் அம்மாணவர் கூறினார். தனிப்பட்ட ஒரு ஆசிரியருக்கு பரிசு வழங்க விரும்பினாலோ, பேனர் வைக்க விரும்பினாலோ, பள்ளி கட்டணத்தில் இருந்து இதற்கென சிறு நிதியை ஒதுக்கலாம் அல்லது சக ஆசிரியர்கள், தங்கள் கைக் காசை போட்டு செலவு செய்யலாம்! அதை விட்டு விட்டு, இப்படி கல்வி பயில வந்த சிறார்களை பிச்சையெடுக்க வைப்பது என்ன நியாயம்?
- சுமதி பாபு, கோவூர்.
நண்பருக்கு ஜே!
எங்கள் குடும்ப நண்பர், வீட்டுக்கு வரும் போதெல்லாம் பிள்ளைகளிடம் ஒரு கருத்தைத் தவறாமல் சொல்வார். 'எதைச் சாப்பிட்டாலும் உமிழ்நீரை செழிக்க கலந்து உண்ணுங்கள்.... ஜீரணத்துக்கு மட்டுமல்ல... உள் உறுப்புகளுக்கும் நல்லது!'என்று இதை, திரும்பத் திரும்ப அவர் கூறக் கேட்டு, எங்களுக்கு அனிச்சை செயலாகி விட்டது. உமிழ்நீரை அதிக அளவு வாயில் கூட்டி, நிதானமாய் சாப்பிடும் பழக்கம் வீட்டில் எல்லாருக்குமே வசப்பட்ட சந்தோஷத்தில் இருக் கிறோம். இதில், இன்னொரு வேடிக்கை... அந்த நண்பருக்கு எங்கள் பிள்ளைகள் சூட்டியிருக்கும் பட்டப்பெயர், 'எச்சில் அங்கிள்!' இது தெரிந்தவுடன், 'அப்படியா... ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் சுரக்கும், 'எச்சிலின்' அளவு என்ன தெரியுமா? ஒன்பது போட்டு, அதற்கு பின்னால் எட்டு பூஜ்ஜியம் போட்டு (தொண்ணூறு கோடி) கொள்ளுங்கள்...' என்று சிரித்தார். சின்ன விஷயம் தான் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் உதவும் தகவலை, எல்லாரும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எண்ணுகிற, நம்புகிற அந்த நண்பருக்கு ஒரு, 'ஜே' சொல்லலாமே!
- எஸ்.பி.ஜெயசுதா, அம்பாசமுத்திரம்.
