PUBLISHED ON : ஜன 01, 2017

உறவுகள் மேம்பட...
எப்போதாவது, மொபைலில் அழைத்து, சில நிமிடங்கள் மட்டுமே பேசும் உறவினர் ஒருவர், திடீரென்று, மொபைலில் என்னிடமும், குடும்ப உறுப்பினரிடம் பேசியவர், 'இந்த வருஷத்திலிருந்து ஞாயிறுதோறும், ஒவ்வொரு உறவினர்களையும், மொபைலில் அழைத்து, அவர்களோடும், அக்குடும்ப உறுப்பினர்களோடும், மனம் விட்டு பேச முடிவு செய்துள்ளேன்; இது, உறவுகள் மேம்பட உதவும்...' என்று சொன்னார். அவரின் முயற்சி நல்ல பலன் தரும் என்றே தோன்றியது. குடும்ப உறவுகள் மேம்பட, உறவினரின் புது முயற்சியை, நாமும் கடைப்பிடிப்போம்!
— எஸ்.டேனியல் ஜூலியட், தாதன் குளம்.
எல்லாரும் நல்லவரே!
கல்லூரியில் படிக்கும் என் நண்பரின் மகனுக்கு, அக்கல்லூரியை சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, பலப்பட்டுள்ளது. இந்நிலையில், படிப்பில் நாளுக்கு நாள் அவனின் கவனம் குறைய, இதுபற்றி, மகனிடம் நேரடியாக கேட்டு, வேறு ஏதும் விளைவுகள் உண்டாகி விடக் கூடாதே என்ற பயத்தில், பொறுமை காத்துள்ளார், நண்பர். இந்நிலையில், ஒருநாள், அப்பெண்ணிடமிருந்து போன்... 'நான், உங்க பையனோட பிரண்ட்; கொஞ்ச நாளாகவே அவனோட போக்கு, சரியில்லாம இருக்கு. தினமும், மது குடிக்கிறான்; எவ்வளவோ, 'அட்வைஸ்' செய்தும், அவனை மாத்த முடியல. கோபப்படாம பேசி, அவன சரி செய்ய பாருங்க; இதுக்கு, என்னோட உதவி தேவைன்னா, நீங்க என்கிட்ட பேசலாம்...' என்று சொல்ல, நண்பருக்கு பயங்கர ஷாக்! ஆனாலும், சுதாரித்து, மகனிடம் தோழமையுடன், பழக ஆரம்பித்தார். அப்பெண்ணிடமும், அவ்வப்போது தொலைபேசியில் கலந்துரையாடினார். மகனின், மன உணர்வுகளை சரியாக புரிந்து, அதற்கு தகுந்தபடி, உடனுக்குடன் செயல்பட்டார். விளைவு... தற்போது நண்பரின் மகனின் நடவடிக்கையில், நல்ல முன்னேற்றம். சிறு வயதிலேயே, அப்பெண்னுக்கு, இந்த அளவுக்கு பக்குவம் வந்திருப்பது, ஆச்சரியமாக உள்ளது. பழகும் விதத்தில், பழகி பார்த்தால், எல்லாரும் நல்லவரே!
— பி.ஜி.பி.இசக்கி, பொட்டல்புதூர்.
இதுவா பெண் சுதந்திரம்?
சில வாரங்களுக்கு முன், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில், பெண் சுதந்திரம் தொடர்பாக, விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய ஒரு பெண், 'ஆண்களைப் போல, பெண்களும் திருமணத்திற்கு முன், விருப்பப்பட்டவருடன், உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதை தவறாக பார்க்கக் கூடாது...' என்று கூறினார். அவருக்கும், அதை ஒளிபரப்பிய தனியார் சேனலுக்கும், என் கேள்விகள் இதுதான்:
* கண்டபடி உறவு கொள்ளும் ஆண்களை, தவறாக பார்ப்பதில்லை என்று யார் சொன்னது?
* பெரும்பாலான குடும்பங்களில், ஆண்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமலும், அதை வெளியில் சொல்ல முடியாமலும் தவிக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா?
* நாம் எதை இழக்கக் கூடாது என்று விரும்புகிறோமோ, அதன்மீது தான் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்கிறோம். அதை, கட்டுப்பாடு என்று புரிந்து கொள்வது தவறில்லையா?
* எல்லாவற்றிற்கும் மேல், இது தான் பெண் சுதந்திரமா? அப்பெண் தெரிவித்த கருத்தை ஒளிபரப்பியதன் மூலம், ஒரு தவறான எண்ணத்தை விதைக்கிறோம் என்பது, ஏன் அந்த சேனலுக்கு தோன்றவில்லை?
ஏற்கனவே சீர்கெட்டிருக்கும் இளைய தலைமுறையினரை, மேலும் படு பாதாளத்தில் தள்ளாமல், ஓய மாட்டார்களோ!
— பி.கீதா சீனிவாசன், சென்னை.
