PUBLISHED ON : மே 07, 2017

'டி.வி' தொடர் தயாரிப்பாளர்களே...
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான, 'இரு மின்மினி பூச்சிகளின் கதை' என்ற தலைப்பில், குழந்தைகளின் சுட்டித்தனங்களை, ஒலிபரப்புகிறது. இத்தொடரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வமாக பார்க்கின்றனர்.
இத்தொடரில், குழந்தை கதாபாத்திரம் ஒன்று, பள்ளி செல்ல பிடிக்காமல், விடுமுறை எடுப்பதற்காக, வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற பல காரணங்களை சொல்லியும், பெற்றோர் விடுப்பு எடுக்க சம்மதிக்காததால், மின்சார, 'பியூஸ்' கட்டையை பிடுங்கி ஒளித்து வைத்து விட்டு, 'தண்ணீர் வரவில்லை; குளிக்க முடியவில்லை... அதனால், பள்ளிக்கு செல்லவில்லை...' என்று கூற, குழந்தையின் அம்மாவும், 'சரி... விடுப்பு எடுத்துக் கொள்...' என சம்மதிக்கிறாள்; குழந்தையும், மகிழ்ச்சியாக பள்ளி செல்லாமல், வீட்டில் விளையாடுகிறது.
இத்தொடரை பார்த்த என் உறவினர் வீட்டுக்குழந்தை, விடுப்பு எடுப்பதற்காக, மின்சார, 'ப்யூஸ்' கட்டையை பிடுங்கி, கையில் வைத்திருந்ததைக் கண்ட பெற்றோர், அதிர்ச்சி அடைந்து, குழந்தையிடம் இருந்த கட்டையை வாங்கி, அறிவுரை வழங்கினர்.
குழந்தைகள் மூலமாக என்ன கருத்துகளை கூறினாலும், மற்ற குழந்தைகளுக்கு, விரைவில் சென்றடையும். இக்காலத்தில், பெரியவர்களை விட, குழந்தைகள் மிக கூர்மையாக இருப்பதால், சீக்கிரம் அந்த செயல்களை செயல்படுத்தி பார்ப்பர்; இது, பல இன்னல்களை ஏற்படுத்தும்.
இதுபோன்ற தேவையற்றவைகளை தவிர்த்து, பயனுள்ள தொடர்களை தயாரிக்குமாறு, பெற்றோராகிய நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
— சி.கே.மரகதம், பீளமேடு.
குறிப்பறிந்து உதவுங்கள்!
என் தோழிக்கு, நான்கு பெண் குழந்தைகள்; கணவனை இழந்த அவள், மூன்று பெண்களுக்கு எப்படியோ கஷ்டப்பட்டு திருமணத்தை நடத்தி முடித்தாள். நான்காவது மகளுக்கு திருமணம் செய்ய போதுமான நிதி இல்லாததால், திருமணம் தள்ளிக் கொண்டே சென்றது.
இந்நிலையில், தன் பெண்ணுக்கு நல்ல வரன் வரவே, திருமணம் நிச்சயித்து இருந்தாள்; ஆனால், பெரிய அளவில் சீர் செய்ய முடியாத நிலையில், திணறிக் கொண்டிருந்தாள்.
அவளின் கஷ்டத்தை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, 'எப்படி இருந்தாலும், திருமண பரிசு கொடுக்கத் தான் போகிறோம்; அது, தோழிக்கு உதவும் வகையில் இருக்கட்டுமே...'என்று தீர்மானித்து, நாங்களே பாத்திரங்களில் இருந்து, பர்னிச்சர் வரை, மணப்பெண், குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களையும், வாங்கினோம்.
மண்டபத்தில், அந்த சீர்வரிசை அடுக்கப்பட்டிருந்த போது, சந்தோஷத்தில் என் தோழிக்கு வார்த்தைகளே வரவில்லை.அனைவருக்கும், கண்ணீர் மல்க, கைகூப்பி நன்றி தெரிவித்தாள்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, பரிசுப் பொருட்களை வழங்க இருப்போர், குறிப்பறிந்து கூடிப்பேசி உதவலாமே!
— இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.
வார்த்தை விளையாட்டு!
சமீபத்தில், ஒரு விடுமுறை நாளில், என் தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவளது பிள்ளைகள் இருவரும் வீட்டு வராண்டாவில் அமர்ந்து, 'யானை பூனையா... தேரு வருதே... மாலா போலாமா... மாவடு போடுவமா...' என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லியும், எழுதியும் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததும், ஒன்றும் புரியாமல் விழித்தேன்.
அவர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'இது, 'பேலின் ட்ரோம்' விளையாட்டு...' என்றனர். நான், அப்படி ஒரு விளையாட்டை கேள்விப்பட்டதே இல்லை. பின், தோழி தான் சொல்லி, புரிய வைத்தாள்.
மற்ற பாடங்களில், பிள்ளைகள், நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், தமிழில் மட்டும் பின்தங்கி விடுகின்றனராம். மொழி பாடத்தில், ஆர்வம் ஏற்படுத்த தான், இந்த விளையாட்டை சொல்லிக் கொடுத்தாளாம்.
நேராக வாசித்தாலும், பின்னே இருந்து வாசித்தாலும், ஒரே மாதிரி வரும் சொற்களை, ஆங்கிலத்தில், 'பேலின் ட்ரோம்' என்பர். தமிழிலும், அது போன்று, 'விகடகவி' போன்ற சொற்கள் உண்டு. அம்மாதிரி சொற்களை கண்டுபிடித்து சொன்னால், ஒவ்வொரு சொல்லுக்கும், ஒரு சாக்லேட் வாங்கித் தருவதாக உறுதி கூறியிருக்கிறாள். பிள்ளைகளும், இனிப்புக்கு ஆசைப்பட்டு, வீடியோ கேம் விளையாடுவதை குறைத்து, பாட புத்தகத்தை புரட்டி, வார்த்தைகளை தேட ஆரம்பித்து விட்டனர்.
மொழி பாடத்தில், விளையாட்டை கலந்து கொடுத்து, குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் தோழியின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்தேன்.
சும்மாவா சொன்னார்கள்... 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவதாவதும், தீயவதாவதும் அன்னை வளர்ப்பதிலே...' என்று!
— எஸ்.ரீனு, சென்னை.
