தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்கள், கண்கள் மாதிரி!

ஞாயிற்றுக் கிழமைகளில், அருகில் உள்ள என் தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் போகும் போதெல்லாம், அவள் தன், ஒன்பது வயது மகனிடம், பெண்களை உயர்த்தி பேசியபடி இருப்பாள். இதுபற்றி அவளிடம் கேட்ட போது, 'நான், என் மகனிடம், பெண்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்குறேன். 'பெண்கள் அனைவரும் அம்மாவை போன்றவர்கள். உடன் படிக்கும் மாணவியர், கூட பிறந்தவர்கள் மாதிரி; உனக்கு அக்கா, தங்கை இருந்திருந்தால், நீ எப்படி அவங்கள பத்திரமாய் பாத்துக்குவாயோ, அதேமாதிரி, உன்னுடன் படிக்கும் மாணவியரையும் பாத்துக்கணும். எந்த பெண்ணையும் கேவலப்படுத்தக் கூடாது; பெண்களை மட்டமாக பேசும் நண்பர்களுடன் சேரக் கூடாது. முடிந்தால், அவங்கள திருத்து. உன் நண்பர்களிடமும், நான் சொல்லும் கருத்துகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு புரிய வைக்கணும். எல்லா ஆண் பிள்ளைகளும், பெண்களை புரிந்து, மதிக்கணும்'ன்னு அடிக்கடி அவன் கிட்ட சொல்றேன். இதனால், 'டீன் -ஏஜ்' வயதில் அவர்களுக்குள் உண்டாகும் பிரச்னையை எளிதாக சமாளிக்க முடியும்...' என்றாள், தோழி.

இதேபோல், ஆண் பிள்ளையை பெற்ற அனைவரும் நடந்தால், பிற்காலத்தில், பாலியல் பிரச்னைகள் மற்றும் வன்கொடுமைகள் நிச்சயம் குறையும். இது, உளவியல் ரீதியான உண்மையும் கூட!

— பி.இந்துராணி, சென்னை.

நல்லதை மட்டும் பாருங்கள்!

சமீபத்தில், என் நண்பனை காண அவனது வீட்டிற்கு போயிருந்தேன்; அவன் வெளியே சென்றிருந்ததால், அவன் வரும் வரை, அவனது அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர், அந்த காலத்து பெருமை பேசி அறுக்க மாட்டார்; தேவையில்லாமல், 'அட்வைஸ்' செய்து, போரடிக்கவும் மாட்டார்; குறிப்பாக, யாரையும் குறை சொல்ல மாட்டார்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, தெருவில் எங்களை நோக்கி வந்த ஒருவரை, 'அதோ வர்றானே... அவன் என் கூட வேலை பார்த்து, 'ரிட்டையர்டு' ஆனவன்; ரொம்ப நல்லவன்...' என்று, புகழாரம் சூட்டினார்.

அவர் அருகில் வந்ததும், அவரிடம், 'குபீர்' ரென்று மதுவாடை வீசியது. அந்த நபர் சென்றதும், நண்பரின் தந்தையிடம், 'அவரை ரொம்ப நல்லவர்ன்னு சொன்னீங்க... அவரோ நல்ல போதையில இருக்காரே...' என்றேன்.

'நல்லவன் தான்ப்பா; எப்படியோ குடிக்கு அடிமையாயிட்டான்...' என்றார். 'அதெப்படி அங்கிள்... நீங்க, யாரையுமே விட்டுக்குடுக்காம பேசுறீங்க...' என்றேன்.

'தம்பி... இந்த உலகத்தில எவனும் யோக்கியன் இல்ல; எல்லாருக்குமே ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். அதுக்காக, அதையே சொல்லி, அவங்கள ஒதுக்கக் கூடாது; அவங்க கிட்ட இருக்கிற நல்ல விஷயங்கள தான் எடுத்துக்கணும். இந்தக் குணத்தை வளர்த்துக்கிட்டம்ன்னா, நமக்கு மற்றவங்க மீது கோபமோ, பகை உணர்ச்சியோ வராது; அதோடு, நமக்கும் தேவையற்ற மன உளைச்சல் இருக்காது...' என்றார்.

'நேர்மையாக சிந்தியுங்கள்; நட்பை வளருங்கள்; மனிதரை மதியுங்கள்...' என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, நம்முடன் பழகுபவரிடம் உள்ள நல்ல விஷயத்தை மட்டும் எடுத்து, நட்பு பாராட்டினால், எல்லாமே நன்மையில் முடியும் என்பதை அவரது பேச்சின் மூலம் உணர்ந்தேன்.

— எஸ்.வெங்கடேஷ் பிரசாத், சென்னை.

கடைசி ஆடி வெள்ளி, 'அவர்களுக்கு' மட்டும்!

ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் பிறந்தவுடன் கடைசி வெள்ளி தவிர, மற்ற வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை, பாக்குடன், புடவை மற்றும் ரவிக்கை துண்டு தருவாள், என் நாத்தனார்.

கடைசி வெள்ளி மட்டும், விவாகரத்தானவர்கள், விதவை, கணவனால் கை விடப்பட்டோர், கணவன் இருந்தும், அவனால் பயன்படாத அபலை பெண்கள் மற்றும் தன் வீட்டில் வேலை செய்யும் விதவை பணிப்பெண்கள் ஆகியோரை அழைத்து, அவர்களுக்கு சகல மரியாதையுடன், வெற்றிலை பாக்கு மற்றும் ரவிக்கை துணியுடன், 500 ரூபாய் வைத்து, தாம்பூலம் தருவாள். அதுமட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்கு, 1000 ரூபாய் தருவாள்.

இதுபற்றி அவளிடம் கேட்டதற்கு, 'இவர்களுடன், மற்ற சுமங்கலிகளையும் அழைத்தால், அபசகுனம், அது இது என்று சர்ச்சை செய்வர். நாம் செய்ய நினைக்கும் நல்ல காரியங்களில், அதை விரும்பாதவர்கள் இடம் பெறாமல் இருந்தால், நம் எண்ணத்தை நிறைவேற்ற முடியும். ஏற்கனவே, ஒருமுறை கசப்பான அனுபவம் ஏற்பட்டது. அதனால், இந்த வழிமுறையை பின்பற்ற துவங்கி விட்டேன்...' என்றாள்.

எனக்கும், அவள் சொல்வது சரி என்று தோன்றியது; அவள் செய்து வரும் நற்செயலை மனதார பாராட்டினேன்.

சி.எஸ்.ராஜேஸ்வரி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us