
அதிக செல்லம் கொடுக்காதீர்!
என் உறவுக்கார பெண்ணிற்கு ஒரே மகன்; நடுத்தரக் குடும்பம். ஆண் பிள்ளை என்பதால், அவன் மீது கண்மூடித்தனமான பாசம். அதே தெருவில், வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவள் இருந்தாள். அவளுக்கும் இதே வயதுடைய மகன் ஒருவன் இருந்தான். அவர்களுக்கு தங்க வீடு இல்லை; படிக்க ஆசைப்பட்ட அந்த பையனுக்கு, வீட்டில் தங்க இடம் கொடுத்து, வீட்டு வேலைக்கும் பயன்படுத்தி, படிக்கவும் வைத்தார், உறவுக்கார பெண்மணி.
அவர், வேலைக்கார பையனிடம் பிரியமாக இருந்தாலும், தன் மகனை துரும்பை கூட தொட விடவில்லை. அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, எதை செய்தாலும் கண்டிக்காமல், மற்றவர்கள் கண்டித்தால், அவர்களை திட்டுவது, எந்த வேலையாக இருந்தாலும் வேலைக்கார பையனையே செய்யச் சொல்வது... இப்படியே காலம் சென்றது. இன்று, நிலைமை என்ன தெரியுமா?
கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட வேலைக்கார பையன், வீட்டு வேலை செய்தபடியே பத்தாம் வகுப்பு முடித்து, 'டிரைவிங்' கற்று, ஒரு நல்ல இடத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டான். அத்துடன், எல்லா வேலையையும் எடுத்து செய்யக்கூடிய அளவுக்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டு விட்டான். அவன் திறமையை பார்த்து, வலிய வந்து பெண் கொடுத்தனர். இப்போது, அரசின் உதவியோடு, தனக்கென்று, வீடு கட்டிக் கொண்டான்.
ஆனால், வெறித்தனமான பாசத்துடன் வளர்க்கப்பட்ட உறவுக்கார பெண்மணியின் பையனோ, படிக்காமல், எந்த வேலைக்கும் லாயக்கில்லாமல், சோம்பேறியாக, வெட்டியாய் ஊர் சுற்றுகிறான். தன் பையன் திருந்த மாட்டானா என ஏங்கிறார், இப்போது, அப்பெண்மணி.
பெற்றோரே... பாசம் என்பது வேறு; கண்டிப்பு என்பது வேறு. குறைந்தபட்சம், தனக்குத்தானே உபயோகம் உள்ளவர்களாக குழந்தைகளை வளருங்கள். அதுதான், அவர்களுக்கும், உங்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லது!
— வி.உஷா, சிதம்பரம்.
மாத்தி யோசி!
புறநகரில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதியில், டூ - வீலர் மெக்கானிக் கடை ஒன்றை ஆரம்பித்தார், நண்பரின் மகன். காலை, 9:00 மணிக்கு கடையை திறந்தால், இரவு 8:00 மணிக்கு தான் மூடுவார். ஆனாலும், ஆறு மாதங்கள் ஆகியும், எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள் வரவில்லை. இத்தனைக்கும், எங்கள் ஏரியாவில் டூ - வீலர் இல்லாத வீடுகளே இல்லை.
இந்நிலையில், என்னிடம் யோசனை கேட்டார், நண்பரின் மகன். 'ஒர்க் ஷாப் திறந்திருக்கும் நேரத்தை மாற்றிப் பார்; நல்ல பலன் கிடைக்கும்...' என்றேன்.
அதன்பின், மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 8:00 மணி வரை ஒர்க் ஷாப் வேலை நேரத்தை மாற்றினார். இதற்கு நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், மாலையில் வீடு திரும்பும் போது, அவரிடம் டூ - வீலரை விட்டு சென்று, காலையில் வேலைக்கு செல்லும் போது, எடுத்துச் செல்வர். இதனால், டூ - வீலர் வைத்திருப்போருக்கு, அதன் பயன்பாடு எவ்விதத்திலும் பாதிக்கப் படவில்லை.
தற்போது, மிகவும் பிசியாகி விட்டார், நண்பரின் மகன். அத்துடன், மூன்று பேரை வேலைக்கும் அமர்த்தியுள்ளார்.
நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி... மாற்றி யோசித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!
— எஸ்.கார்த்திகா, கோவை.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்?
என் வீட்டருகே, டிபார்ட்மென்ட் ஸ்டோர் இருக்கிறது. அங்கு பணிபுரியும் பெண், கடைக்கு வருவோரிடம் கலகலப்பாக பேசுவாள். சமீபத்தில், ஒரு நாள், மளிகை பொருட்கள் வாங்கி, கிரெடிட் கார்டை அப்பெண்ணிடம் கொடுக்க, அவளும், கிரெடிட் கார்டை தேய்த்து, கார்டையும், பில்லையும் என்னிடம் கொடுத்தாள்.
வழக்கமாக, பில்லை பார்க்க மாட்டேன்; அன்று, எதேச்சையாக பில்லை பார்த்த போது, தூக்கி வாரி போட்டது. காரணம், நான் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து, பில் போட்டிருந்தாள். இதுகுறித்து, அப்பெண்ணிடம் கேட்டவுடன், மன்னிப்பு கேட்டு, அதிகப்படியான தொகையை, திருப்பி கொடுத்தாள்.
சில நாட்களுக்கு பின், அந்த கடைக்கு சென்ற போதும், மீண்டும் அதே கசப்பான அனுபவம் ஏற்பட்டது. இதுகுறித்து நண்பர் ஒருவரிடம் பேசிய போது, அவர், 'கடைக்காரர்கள் சிலர், அழகான பெண்களை வேலைக்கு அமர்த்தி, கடைக்கு வருவோரிடம் நன்றாக பேசுமாறு அப்பெண்களை கட்டாயப் படுத்துகின்றனர். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துவோர் தான் இவர்களது இலக்கு. நம்மிடம் ஒரு மோசமான மனோபாவம் இருக்கிறது... அது, பணம் கொடுத்து பொருட்கள் வாங்கும் போது, பில்லை சரி பார்க்கிறோம்; ஆனால், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தும்போது, பில்லை பார்ப்பதில்லை. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர், கடைக்காரர்கள்...' என்றார்.
வாசகர்களே... நீங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர் என்றால், உஷாராக இருங்கள்!
—பெயர், ஊர் குறிப்பிட விரும்பாத வாசகர்.