
திருமண, 'ஆல்பம்' முகம் சுளிக்க வைக்கலாமா?
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன்; அங்கு, அவர்களது மகனின் திருமண, 'ஆல்பம்' பார்த்தேன். அதில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, முத்தக் காட்சிகள் உட்பட பல போஸ்களில் மணமக்களை போட்டோ எடுத்து, ஆல்பத்தில் சேர்த்திருந்தார், புகைப்பட கலைஞர். முன்பெல்லாம், ஆல்பத்தில் திருமண சடங்குகள், மணமக்களுடன் சேர்ந்து உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ்ந்திருப்பதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கும்.
திருமண ஆல்பம் என்பது, பெரியவர்கள் முதல் சிறியவர் வரை மட்டுமல்லாது, நம் சந்ததியினரும் ஆர்வமாக பார்க்கக்கூடிய ஒரு பொக்கிஷம். அதை, இப்படியா பார்ப்பவர் முகம் சுளிக்கும் அளவுக்கு தயாரிப்பது... 'ஹனிமூன்' செல்லும் இடங்களுக்கும், புகைப்பட கலைஞர் உடன் சென்று, காட்சிகளை சுட்டுத் தள்ளி, ஆல்பத்தில் சேர்ப்பதை, 'டிரண்ட்' என்று கூறினர்.
புகைப்படக் கலைஞர்களே... இத்துறையிலும், 'சென்சார்' செய்யும் அளவுக்கு போட்டோ எடுக்காதீர்கள்; மணமக்கள் என்ன, 'மாடலிங்' செய்யவா போகின்றனர். மணமக்களே... இத்தகைய, 'போஸ்'களில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், தயவுசெய்து, அவற்றை தனி ஆல்பம் போட்டு வாங்கி, தனிமையில் ரசியுங்கள்; அனைவரும் பார்க்கும் திருமண ஆல்பத்தில் இணைத்து, சங்கடப்படுத்தாதீர்கள்!
— பெயர், ஊர், வெளியிட விரும்பாத வாசகி.
காவி கட்டிய பாவிகள்!
கடந்த வாரம், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். வடக்கு சித்திரை வீதியில், காவி வேட்டி கட்டிய, மூன்று சாமியார்கள் நடந்து வந்தனர். பக்தர் ஒருவர், அவர்களுக்கு, 10 ரூபாயை கொடுத்து, 'மூன்று பேரும் எடுத்துக்கோங்க...' என்று கூறினார். அந்த, 10 ரூபாயை பங்கு பிரிப்பதில், மூன்று பேருக்கும் தகராறு ஏற்பட்டபோது, அதில் ஒரு சாமியார், 'நீ காலையிலேயே ஒரு குவாட்டர் அடிச்சிட்டே; நாங்க ரெண்டு பேரும் இன்னும் ஒரு, 'கட்டிங்' கூட அடிக்கல. அதனால, இந்த, 10 ரூபாய நாங்க ரெண்டு பேரும் வச்சிக்கிறோம். நீ ஒதுங்கிக்கோ...' என்று சொல்லி, அவர்களுக்குள் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டனர்.
இவர்களின் செயல்பாட்டைக் கண்டு அருகில் உள்ளவர்கள், அருவருப்பாக பார்த்தனர். 'கட்டிங்' அடிக்க, கஞ்சா புகைக்க காசு தேத்துவதற்கு, காவி வேட்டியை ஆயுதமாக பயன்படுத்தும் இதுபோன்ற பாவிகளிடம், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
— வைகை தென்றல், மதுரை.
வித்தியாசமாக அமைந்த, 'கெட் டு கெதர்' பார்ட்டி!
என் உறவினரின் மகன், பொறியியல் இறுதியாண்டு முடித்த போது, தன் நண்பர்களுடன், 'கெட் டு கெதர்' பார்ட்டி கொண்டாடிய விதத்தை பற்றி கூறினான். அது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு சிறிது பணம் போட்டு, அவர்களே அசைவம் சமைத்து, உடல் ஊனமுற்ற, 30 பேருக்கு பரிமாறியதாகவும், அதோடு, அருகில் உள்ள கோவிலில், அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறினான். இதை கேட்டு, அவனை மனதார பாராட்டினேன்.
கல்லூரி மாணவர்களே... நீங்களும், உங்கள் சந்தோஷத்தை பிறருக்கு பயன்படும் முறையில் பயன்படுத்தினால், பிறருக்கு சேவை செய்தோம் என்ற மன திருப்தியும், அவர்களது ஆசியும் கிடைக்குமே!
— அ.அருண்குமார், பெரியகுளம்.

