தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : பிப் 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புலி வருது... புலி வருது!

'புலி வருது... புலி வருது...' என்று, விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த சிறுவனை, நிஜமாகவே புலி வந்து தாக்கிய போது, உதவிக்கு யாரும் வராமல், உயிரை விட்ட கதையை, சிறுவயதில் நாம் படித்திருக்கிறோம்தானே!

முக்கியமான விஷயங்களை, சுருக்கமாக பேசுவதற்குத்தான் மொபைல் போன். என் தோழி ஒருத்தி, தேவையில்லாமல் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மணிக்கணக்கில் வறுத்தெடுப்பது வழக்கம். அவளது அழைப்பு என்றாலே, வீட்டிலுள்ளோர் என்னை வேடிக்கையாகப் பார்க்கும் அளவுக்கு, என் நிலைமை பரிதாபமானது. ஒரு ஞாயிறன்று, இரவு ஒன்பது மணிக்கு, அவளது அழைப்பு வர, குடும்பத்தோடு, 'டிவி'யில் படம் பார்த்துக் கொண்டிருந்த நான்,

அலட்சியப்படுத்திவிட்டு, அமைதியாக இருந்தேன். அவளது கணவனுக்கு திடீரென மாரடைப்பு வர, ஆம்புலன்சுக்குப் போன் போட்டுவிட்டு, உதவிக்கு என்னை அழைத்திருக்கிறாள் என்பது, அடுத்த நாள் தான் அவளது தாயார் மூலம் தெரிய வந்தது. அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. தேவையில்லாமல் பேசும் வம்பு பேச்சுக்கள், தேவையான சமயங்களில் கிடைக்க வேண்டிய உதவிகளுக்கும், 'உலை' வைக்கும் என்பதை, என் தோழியைப் போன்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.— ஜெயா அய்யர், சென்னை.

இதுவல்லவோ மனிதாபிமானம்!

தோழியின் அழைப்பால், பொங்கல் அன்று, அவள் வீட்டிற்குச் சென்றேன். நான் சென்ற நேரம், புதுத் துணிமணிகள் அணிந்து, தலைவாழை இலை போட்டு, வடை, பாயசம், பொங்கலோடு, ஒரு குடும்பத்தினர் தடபுடல் விருந்து

சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடிந்தவுடன் வெற்றிலை, பாக்கு, பூ, பழங்களுடன் சன்மானமும் வைத்து கொடுத்து, அவர்களை வழியனுப்பி வைத்தாள் தோழி. அவளிடம், 'யாருடி அவர்கள்?' என்று நான் கேட்டதற்கு, அவள் கூறிய பதில், என்னை திகைக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தது. தோழியின் வீட்டில் வேலை செய்பவளின் குடும்பமாம் அது. 'வருடம் முழுவதும் வேலை செய்யும் அவர்களுக்கு மிச்சம், மீதி, பழையது என்று மட்டுமே தருகிறோம். நாள் கிழமைகளில் பலகாரங்கள் கூட, நாம் சாப்பிட்டது போக மிச்சம் மீதியைத்தான் தருகிறோம். அவர்கள் மனசையோ, உணர்வுகளையோ பற்றி நாம் சிந்திப்பதேயில்லை. வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கருதித்தான், இந்த ஏற்பாட்டை செய்தேன். சந்தோஷமாக, மகிழ்ச்சி பொங்க அவர்கள் சாப்பிட்டுப் போனது எனக்கும், என் கணவருக்கும், என் குழந்தைகளுக்கும் மிகுந்த மன நிறைவைக் கொடுத்தது...' என்றாள். அனைவரும் சிந்தித்து, செயல்படுத்த வேண்டிய விஷயம்தான் இது!— ஆர்.அனுராதா, சேலையூர்.

தோழியின் சபாஷ் பழக்கம்!

அரசு அலுவலகம் ஒன்றில் பணி யாற்றும் என் தோழியைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் போன போது அவள், 'சிறுவர் மலர்' புத்தகத்தை ஊன்றி படித்துக் கொண்டிருந்தாள். எனக்கு வியப்பாக இருந்தது.

'என்னடி... இருபத்தேழு வயசில் படிக்க எத்தனையோ விதமான புத்தகங்கள் இருக்க, நீ, 'சிறுவர் மலர்' படித்துக் கொண்டிருக்கிறாயே...' எனச் சிரித்தேன்.

அவளோ, 'இரவில் தூங்கப்போகும் போது, என் நான்கு வயது மகனுக்கு கதை சொல்லி, தூங்க வைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் புதுப்புது கதை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், பண்பை வளர்க்கக் கூடிய நல்ல கதைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவும் தான், நான் இதைப் படிக்கிறேன். நல்ல நீதிக் கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைகள், பண்போடு வளருவர் அல்லவா?' என்று கூறினாள்.

தோழிக்கு ஒரு சபாஷ் போட்டேன். குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம், பெற்றோரிடம் விட்டுப் போய் விட்டது. வேலைக்குச் சென்று வருவதும், 'டிவி' சீரியல் பார்ப்பதும் நேரத்தை தின்றுவிட, குழந்தைகளுக்கு நல்ல பழக்க, வழக்கங்களையும், நற்குணத்தையும், நீதியையும் போதிப்பது இப்போது நடைமுறையில் பெரும்பாலும் இல்லை எனலாம். எனினும், குழந்தைகளுக்கு இவற்றை கதை மூலம் போதிப்பது அத்தியாவசியம். பெற்றோரே... உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இனியேனும் கதை சொல்லுங்கள்.— அ.பாரதி, நெல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us