PUBLISHED ON : பிப் 18, 2018

முதல் குழந்தைக்கும் பரிசு கொடுக்கலாமே!
சமீபத்தில், என் உறவினர், தனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருப்பதாக கூறி, அவர் வீட்டிற்கு அழைத்தார். அதனால், நானும், என் மனைவியும் பிறந்த குழந்தைக்கு பரிசு பொருள் வாங்க சென்றோம். அப்போது, என் மனைவி, உறவினருக்கு மூத்த மகன் இருப்பதை நினைவுபடுத்தி, 'இக்காலத்து குழந்தைக, தங்களோட தங்கை, தம்பிக்கு கிடைக்கிற பொருட்கள் தனக்கும் வேணும்ன்னு ஆசைப்படுவாங்க. அப்படி கிடைக்கலன்னா, அந்த கோபத்தை அவங்க மீது, காட்டுவாங்க. அதனால, உங்க உறவினரோட ஐஞ்சு வயசு மூத்த மகனுக்கும் ஏதாவது ஒரு பரிசு பொருளை வாங்குங்க...' என்றாள். அதேபோன்று, அவனுக்கும் பரிசுப் பொருள் வாங்கி, உறவினர் வீட்டுக்கு சென்றோம்.
பிறந்த குழந்தைக்கு வாங்கி வந்திருந்த உடை மற்றும் பொம்மைகளை உறவினரின் மனைவியிடம் கொடுத்த பின், அவர்களுடைய, மூத்த மகனிடம் நாங்கள் அவனுக்கு வாங்கி சென்றிருந்த பரிசு பொருளை கொடுத்து, 'இது உனக்கு...' என்று கூறினோம். அதை வாங்கியதும், அந்த குழந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை, எல்லாரிடமும் காண்பித்து, சந்தோஷப்பட்டான். நாங்கள் கிளம்பும் வரை, அந்த பரிசு பொருளை கீழே வைக்கவே இல்லை.
இந்நிகழ்ச்சி மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், எதற்காவது பரிசுப் பொருள் வாங்கும் போது, அவ்வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும், 'கிப்டு' வாங்கி செல்வது என்று முடிவு செய்தோம்.
— தி.பிரபு, பெங்களூரு.
பயன் தரும் சமையல் வகுப்பு!
என் நண்பனின் மனைவி இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருக்கிறார். அவரிடம், 'ரிட்டையர்மென்ட் வாழ்க்கைய எப்படி அமைச்சுக்கப் போறீங்க..' என்று கேட்டேன்.
'கல்லுாரி மாணவியருக்கு பாரம்பரிய சமையலை சொல்லித்தரலாம்ன்னு இருக்கேன். திருமணத்திற்கு பின், அது, அவங்களுக்கு உதவியாக இருக்கும். முறுக்கு, ஜாங்கிரி, நார்த்த இலை பொடி, பொரிவிளங்காய் உருண்டை போன்றவற்றோடு, பருப்பு ரசம், மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் வேப்பம் பூ ரச வகைகளையும், பலவகை குழம்பு மற்றும் துவையல் வகைகளையும் கற்றுத் தரலாம்ன்னு இருக்கேன். ஆண் பிள்ளைகள் கற்று கொள்ள வந்தாலும், சொல்லித்தர தயார்...' என்றார்.
பணி ஓய்வு நாட்களை, பயனுள்ளதாக ஆக்க நண்பரின் மனைவி தீர்மானித்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருந்தது!
—என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
பிடித்ததை செய்ய வயது தடையில்லை!
என் தோழிக்கு, எழுத்துத் திறமை உண்டு. ஆனால், பல காரணங்களால், நேரம் ஒதுக்கி, எழுத முடியாமல் போயிற்று. இப்போது, பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்டாள். குழந்தைகளும் செட்டிலாகி விட்டனர். கணவரும், வீட்டு வேலைகளில் உதவி புரிவதால், இப்போது, எழுத ஆரம்பித்து விட்டாள்.
இது, அவளோடு அரட்டையடிக்கும் பெண்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், அவள் எழுத முற்படும்போதெல்லாம்,'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... இந்த வயசுல எழுதி, மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சுடுவியா... எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டாற்போல் இருக்கிறது உன் கனவு...' என கூறி, கிண்டலடித்துள்ளனர்.
ஆனால், அதை, காதில் போட்டு கொள்ளாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பல்வேறு பத்திரிகைகளுக்கு எழுதி, மாதம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள், தோழி.
இதைப் பார்த்ததும், அவளை கிண்டலடித் தவர்களுக்கு, 'பொட்டிலடித்தாற்போல்' இருக்கவே, இப்போதெல்லாம் வீண் அரட்டை, வெட்டிப் பேச்சுகளை நிறுத்தி, தாங்கள் இளம் வயதில் செய்ய விரும்பிய கிராப்ட் ஒர்க், படம் வரைதல், சமையல் கலை, டியூஷன் எடுத்தல், தோட்ட பராமரிப்பு என்று ஜமாய்க்கின்றனர்.
தோழியின் விடாமுயற்சியும், அக்கறையும், எல்லாரையும் திருத்தி, உருப்படியான செயல் செய்ய வைத்ததில், மனமகிழ்ந்து போனேன்.
— இந்திராணி தங்கவேல், சென்னை.
மருத்துவமனைக்கு செல்லும்போது...
நோயாளி உறவினரை காண, மருத்துவமனை செல்ல நேர்ந்தது. வழக்கமாக பழங்கள், ஹார்லிக்ஸ் எடுத்துச் செல்லவில்லை. ஒரு ஹாட் பேக்கில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி, காய்கறி கூட்டு மற்றும் வெங்காய சட்னி எடுத்துச் சென்றேன். இதைப் பார்த்த நோயாளியுடன் இருந்த உறவுக்கார பெண்மணி, 'அம்மாடி... உப்பு சப்பு இல்லாத கேன்டீன் உணவு சாப்பிட்டு, நாக்கு செத்துப் போச்சு. வீட்டிற்கும் போக முடியாது; இங்குதான் இருக்க வேண்டிய நிலை. இந்த சப்பாத்தியும், சட்னியும் அமிர்தமாய் இருக்கு...' என்று கூறி சாப்பிட்டார்.
பெரிய பிளாஸ்கில், மணக்க மணக்க கொண்டு சென்ற காபியை, அருகில் இருந்த உறவினர்கள், ஆளுக்கு ஒரு மடக்கு குடித்து, என்னை கொண்டாடி விட்டனர்.
நோயாளிக்கு, மருத்துவமனையிலேயே உணவு கிடைக்கும். உடன் இருக்கும் உதவியாளருக்கு, நாம் உணவு கொண்டு செல்வது நல்ல உதவி தானே!
— சீனு சந்திரா, சென்னை.
நம்மூரிலும் வருமா?
அரபு நாடுகள், சிலவற்றின் மருத்துவ மனைகளில், பிரசவம் என்பது நேச்சுரலாக, சுகப் பிரசவமாகத்தான் நடத்தப் பட வேண்டும்; எக்காரணம் கொண்டும், 'சிசேரியன்' செய்யக் கூடாது. அவ்வாறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக, அம்மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமாம்.
இந்த விஷயத்தில், அந்நாடுகளின் அரசு நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரணம், நம் நாட்டில், ஆயிரம் பிரசவங்கள் நடைபெற்றால் அதில், 990 பிரசவங்கள் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது. பல கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது உறவினர்களும் கூட, பணத்தாசை பிடித்த ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு, அதன்படி, பிரசவ நேரத்தை, மருத்துவமனைகளில் குறித்துக் கொடுத்து, அந்த நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க வைக்க வற்புறுத்துகின்றனர். அதனால், பெண்களின் உடலில் ஏற்படும் பின் விளைவுகளையும், பாதிப்புக்கள் குறித்தும் கொஞ்சமும் கவலைப்படுவதேயில்லை.
அரபு நாடுகளின் நடைமுறையை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க, அரசு ஆவன செய்யலாமே!
— எம்.பக்தவத்சலம்,கோபாலபுரம், சென்னை.
