PUBLISHED ON : ஏப் 08, 2018

காலி மனை வைத்திருக்கிறீர்களா?
என் நண்பருக்கு, போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில், 1 ஏக்கர் அளவில் காலி மனை உள்ளது. தன் நிலத்தை, யாராவது ஆக்கிரமித்து விடுவரோ என்ற பயத்தில், செய்வதறியாது புலம்பிக் கொண்டிருந்தார்.
அவரிடம் நான், 'மனையை சுற்றி, 'ஹாலோ பிளாக்' கற்களால் சுவர் எழுப்பி, மேற்கூரை போட்டு, கார் பார்க்கிங்கிற்கு வாடகைக்கு விட்டால், நல்ல வருமானம் வரும்; ஆக்கிரமிப்பு பயமும் இருக்காது. 'ஹாலோ பிளாக்' கல்லுக்கு, அதிக பணம் செலவாகாது; தேவைப்பட்டால், வங்கியில் கடன் பெற்று கூட செய்யலாம்...' என்றேன்.
முனைப்புடன் அதை செயல்படுத்திய நண்பர், அண்மையில் என்னை சந்தித்து, 'அருமையான யோசனை சொன்னீர்... ஊருக்குள் நிறைய பேரிடம் இப்போது கார் இருக்கிறது. ஆனால், கார் பார்க்கிங் வசதி இல்லாததால், என் பார்க்கிங் ஷெட் உடனே, 'புக்' ஆகி விட்டது; நன்றி...' என்று மன மகிழ்ந்து கூறினார்.
முக்கிய இடத்தில், காலி மனை வைத்திருப்போர், இதைப் பின்பற்றலாமே!
— மா.நாராயணன், கோவில்பட்டி.
வித்தியாசமான வீட்டு உரிமையாளர்!
என் நண்பர், பணி மாறுதலாகி, குடும்பத்துடன், திருநெல்வேலி சென்றார். வாடகைக்கு வீடு பார்க்க, அவருடன் நானும் சென்றேன். ராணுவத்தில் பணியாற்றிய ஒருவரின் வீடு பிடித்திருந்தது. அட்வான்ஸ், 30 ஆயிரம் ரூபாய்; வாடகை, ஆறாயிரம் ரூபாய் எனக் கூறினார், வீட்டு உரிமையாளர். வாடகையை குறைக்க சொல்லி எவ்வளவோ கேட்டும், மறுத்து, 'அக்ரிமென்ட்' போட்டுக் கொள்ளலாம் என்றார். வீடு பிடித்திருந்ததால், 'அக்ரிமென்ட்' போட்டு, அவ்வீட்டில் குடியேறினார், நண்பர்.
சில ஆண்டுகளில், மீண்டும் வேலை மாற்றல் உத்தரவு வரவே, வீட்டு உரிமையாளரிடம் விவரம் சொல்லி, அட்வான்சை கேட்டுள்ளார், நண்பர். 'நாளைக்கு வாங்க...' என்றவர், மறுநாள், அட்வான்ஸ் தொகை, 30 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் சேர்த்து, 80 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
நண்பருக்கோ அதிர்ச்சி... 'அட்வான்ஸ், 30 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தேன்...' எனக் கூறியபோது, 'ஆமாம்... வாடகை, 5,500 தான்; உங்களுக்கு எவ்வளவோ கஷ்டம் இருக்கலாம்; சேமிக்க முடியாது. அதனால் தான், எங்கள் வீட்டுக்கு குடியிருக்க வருவோரிடம், கறாராக, 500 ரூபாய் சேர்த்து வாங்கி, அவர்கள் வீடு காலி செய்யும்போது, ஆண்டுக்கு, நான்கு சதவீத வட்டியுடன், குடியிருந்த நாள் வரை கணக்கிட்டு கொடுப்பது வழக்கம். நீங்க குடியிருந்த எட்டு ஆண்டுக்கு, 48 ஆயிரம் ரூபாயுடன், வட்டி, 1920 ரூபாய் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாயாக தர்றேன். இது, உங்களை போன்றோருக்கு உதவியாக இருக்குமே...' எனக் கூறி, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.
இப்படிப்பட்ட நல் உள்ளம் கொண்ட வீட்டு உரிமையாளரும் உள்ளனரே என எண்ணி, வியந்தேன்!
— உ.சோமசுந்தரம், பெங்களூரு.
குரங்குகளுக்காக பழ மரம்!
குடியிருப்பு பகுதியில் வலம் வரும் குரங்குகளை பிடித்து, அருகில் உள்ள காட்டில் விடுவதும், மீண்டும் அவை குடியிருப்பு பகுதிக்குள் வருவதும் தொடர்கதையாகி விட்டது. காட்டில் இயற்கையாக வளரும் செடி, கொடிகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை நடுவதால், குரங்குகள் உண்பதற்கு தேவையான காய் கனிகள் இல்லாததே இதற்கு காரணம்.
காப்பு காடுகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை நட்டு வளர்க்கும் வனத்துறை, ஆங்காங்கே பழ மரக் கன்றுகளை நட்டு வளர்த்து, வனத்தை நம்பி வாழும் குரங்கு முதலான உயிரினங்களை காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மேலும், மரங்களை நட்டு பராமரித்து வரும் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்களும், பொது இடங்களில், பழ மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் பல உயிரினங்களின் ஒருவேளை உணவுக்காவது வழிவகுக்கும்.
— எழிலரசி ஜெயமுருகன், ரிஷிவந்தியம்.
