தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவர் பூங்காவில்...

எங்கள் வீட்டருகில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு, சிறுவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சிக்காக வருவது வழக்கம்.

சமீபத்தில், பூங்காவிற்கு சென்றிருந்த போது, 20 வயது மதிக்கதக்க, ஆணும் - பெண்ணும் நடந்து கொண்ட விதம், அருவருக்கதக்க வகையில் இருந்தது. நடை பயிற்சி சென்றோரும், அவர்களை பார்த்தும், பார்க்காதது போல் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த மூதாட்டி ஒருவர், 'ஏம்பா தம்பி... உனக்கே இது நல்லா இருக்கா... குழந்தைக விளையாடுற இடம்ன்னு கூட பார்க்காம, இப்படி நடந்துக்கறியே... இதுவே, உன் அக்கா - தங்கச்சி பொது இடத்துல ஒருத்தன் கூட இப்படி கூத்தடிச்சா, சந்தோஷமா பார்த்திட்டு இருப்பியா...' என உரத்த குரலில் கேட்க, வெட்கி, தலைகுனிந்தான், இளைஞன்.

அப்பெண்ணிற்கும் இதமாக அறிவுரை கூற, அவள் கண்ணில் நீர் ததும்ப, பாட்டியிடம் மன்னிப்பு கேட்டாள்.

'இங்கு இத்தனை பேர் இருந்தும், யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை; 'பளீச்'சென்று கேட்டு, அவர்களுக்கு புரிய வைத்து விட்டீர்களே...' என்று அங்கிருந்த அனைவரும் பாட்டியை பாராட்டினோம்.

பொது இடங்களில் நடக்கும் இது போன்ற தவறுகளைப் பார்த்து, தனக்கென்ன என்று நில்லாமல், தம் குழந்தைகளாக நினைத்து, நாசூக்காக சொல்லி, அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இல்லையெனில், நம் நாட்டின் கலாசாரம் சீர்குலைந்து விடும்.

— விமலா நடராஜ், கவுண்டம்பாளையம்.

நல்லதொரு அறிவிப்பு!

சமீபத்தில், கோவை உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றேன்; உணவகத்தின் அறிவிப்பு பலகையில், 'பார்சல் வாங்க வருவோர், துணி பை கொண்டு வந்தால், போண்டா அல்லது டீ இலவசம்...' என, இருந்ததை கண்டு வியந்தேன்.

இதுபற்றி, கடைக்காரரிடம் கேட்டபோது, 'பிளாஸ்டிக்கின் தீங்கு பற்றி படித்து, அதிர்ச்சி அடைந்தேன். ஆதலால், இப்படி ஒரு அறிவிப்பை போட்டிருக்கிறேன். இப்போது, என் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை; கடைக்கு வருவோர் துணி பை எடுத்து வருகின்றனர். என் அறிவிப்பால், மற்ற இடங்களிலும், பலர் துணி பைகளையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்...' என்றார்.

இவரை போன்று மற்ற கடைக்காரர்களும், சமூக அக்கறையுடன், ஏதாவது ஒரு வழியில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்கு முயற்சி எடுத்தால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு வெகு விரைவில் குறையும். செய்வீர்களா?

— மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.

நண்பனின் உயர்ந்த உள்ளம்!

நண்பனைக் காண, அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன்; வரவேற்பறையில் ஒரு முதியவருக்கு சிற்றுண்டியும், தேனீரும் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தான். அவர் உண்டு முடித்ததும், அவர் கையில் ஒரு கவரைக் கொடுத்து, 'அடுத்த மாசம் வாங்க...' என்று சொல்லி வழியனுப்பி வைத்தான். 'யார்றா அது... டீ குடுத்தே, கையில ஒரு கவரையும் கொடுத்து வழியனுப்பி வெச்சிட்டு, அடுத்த மாசம் வாங்கன்னு வேற சொல்றே...' என்று கேட்டேன்.

ஆழ்ந்த பெருமூச்சு விட்டு, 'அவர் சினி பீல்டுல, ஹேர் டிரஸ்ஸரா இருந்தவரு... நல்லா வசதியா வாழ்ந்தவரு. இப்போ, 'லேட்டஸ்ட் ட்ரெண்டா' நடிகைகள் எல்லாம் கொண்டை போடுறத தலை முழுகி, தலை முடிய விரிச்சுப் போட்டு நடிக்கறாங்க. அதனால, இவர் மாதிரி சிகை அலங்காரக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாம போச்சு. முன்பு, நாங்க குடியிருந்த வீட்டுகிட்ட இருந்தாரு; நல்ல பழக்கம். நல்லா வாழ்ந்தவரு; இப்ப, சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறத பாக்க மனசு கேட்கல. அதான், எங்கப்பா மாதிரி நெனச்சு, ஏதோ என்னால முடிஞ்ச உதவியா, மாசம் மூவாயிரம் ரூபாய் கொடுத்துட்டு இருக்கேன்...' என்றான்.

தன்னை பெற்று வளர்த்தவர்களையே கவனிக்காமல், முதியோர் இல்லத்திற்கு வழி அனுப்பி வைப்போர் நிறைந்த உலகில், அண்டை வீட்டில் வசித்தவரின் நிலை கண்டு உதவும் நண்பனின் உயர்ந்த உள்ளம் என்னை பிரமிக்க வைத்தது.

'அடுத்த மாதம் அவர் வரும்போது, இதையும் சேர்த்து கொடுத்துடு...' என்று சொல்லி என் பங்காக, ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு வந்தேன்.

— ஆர்.எம்.கேசவன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us