PUBLISHED ON : அக் 07, 2018

புத்தகம் இருக்க, சாக்லேட் எதற்கு?
சமீபத்தில், பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள ஓட்டலுக்கு சென்றேன். டீ, டிபன் அனைத்தும் நியாயமான விலையில் கிடைத்ததுடன், சுவையாகவும் இருந்தது. சாப்பிட்டு முடித்து பணம் செலுத்தியபோது, 'சரியான சில்லரை கொடுத்து உதவவும்...' என்ற அறிவிப்பு, கண்ணில் பட்டது. சரியான சில்லரை என்னிடம் இல்லாததை உணர்ந்து, தயங்கியபடி நின்றேன்.
பணம் பெறுபவர், என் நிலை அறிந்து, 'உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில், இதில் ஒன்றை தேர்வு செய்து கொள்கிறீர்களா?' என்றார். அப்போது தான் கவனித்தேன்...
தினசரி நாளிதழ், 1 ரூபாய், வார இதழ், 2 ரூபாய், மாத இதழ், 3 ரூபாய் என, குறிப்பிட்டு பழைய இதழ்களை அடுக்கி வைத்திருந்தனர். இது தவிர, சமையல் மற்றும் பொது அறிவு நுால்கள் சிலவும் அங்கிருந்தன.
மீதி சில்லரைக்கு மட்டுமின்றி, கூடுதலாக பணம் செலுத்தி, சில வார, மாத இதழ்களையும் வாங்கிக் கொண்டேன்.
மீதி சில்லரைக்கு சாக்லெட் தந்து, காசு பார்ப்பவர்கள் மத்தியில், ஓட்டல் உரிமையாளரின் வித்தியாசமான முயற்சி பாராட்டும்படி இருந்தது. மற்றவர்களும் இதை பின்பற் றலாமே!
— ர.ஐவண்ணம், திருவண்ணாமலை.
மண் குவளையால் மனம் மகிழ்ந்தேன்!
உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். மண மக்களை வாழ்த்தி, உணவு அருந்த சென்றேன். வாழை இலைகளை வைத்து, பந்தியை துவங்கினர். இலையை வைத்தவரின் பின்னால் ஒருவர், மண் குவளைகளை இலையின் ஓரத்தில் வைத்தபடி சென்றார்; அதை கண்ட அனைவரின் முகமும் மலர்ந்தது.
பின், ஒருவர், அந்த மண் குவளைகளில் தண்ணீர் ஊற்றினார். மண் குவளைகளில் தண்ணீர் குடித்தது, புது அனுபவமாக இருந்தது.
பாயசம் மற்றும் காபிக்கு, தனித்தனி மண் குவளைகளை வைத்தனர்.
பந்தியின் முடிவில், அனைவருக்கும் ஒரு துணி பையை கொடுத்து, தாங்கள் உபயோகித்த மண் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறினர். இதனால், அனைவரும் உணவை வீணாக்காமல், முழுவதும் உண்டு, மண் குவளைகளை எடுத்துச் சென்றனர்.
பிளாஸ்டிக் கப்களுக்கு, பதிலாக, மண் குவளைகளை கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது என, பலரும் பாராட்டினர்.
— சோ. சங்கீதா, திண்டுக்கல்.
பயனுள்ள சொற்பொழிவு!
அண்மையில், ஒரு ஆட்டோவில் பயணித்தபோது, ஒரு சொற்பொழிவாளரின் பேச்சை ஒலிக்க விட்டார், ஆட்டோக்காரர்.
சிந்தனையை துாண்டும் குட்டி கதைகள் அடங்கிய அந்த சொற்பொழிவு, என்னை மிகவும் கவர்ந்தது.
ஆட்டோவிலிருந்து இறங்கியதும், இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'என் வண்டியில் ஏறுபவர்களுக்கு, பயணம் போரடிக்காமல் இருக்கவும், வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை தெரிஞ்சுககவும், 'யூ-டியூப்'ல் இதுபோன்ற நல்ல விஷயங்களை தேடி தேடி, 'பென் டிரைவில் டவுன்லோடு' செய்து, ஆட்டோவில் ஒலிபரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளேன்...' என்றார்.
சினிமா பாடல்களை சத்தமாக ஒலிக்க விடும் பிற ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து, மிகவும் வித்தியாசமானவராக தெரிந்த இவரது முயற்சியை, அகமகிழ்ந்து பாராட்டினேன்!
இது போல் பஸ் ஓட்டுனர்களும் செய்யலாமே!
— மு.கோவிந்தன், மம்சாபுரம்.
