PUBLISHED ON : ஆக 18, 2019

ஆட்டோ ஓட்டும், மாணவர்!
என் நண்பருக்கு, அடிக்கடி முதுகு வலி வரும். மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில், மருத்துவமனை செல்ல, ஆட்டோ ஏறியுள்ளார். ஆட்டோ டிரைவரின் மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும், நண்பரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையை அடைந்ததும், ஆட்டோ கட்டணத்தை கொடுத்துள்ளார். அப்போது, தன் இருக்கைக்கு அருகில் இருக்கும், ஒரு பெட்டியை காட்டி, 'இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர்.
அதுமட்டுமல்லாமல், ஆட்டோ டிரைவரை பார்த்த, மருத்துவமனை காவலாளி, அன்பாக விசாரித்துள்ளார்.
காவலாளியிடம், அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி விசாரித்திருக்கிறார், நண்பர்.
'ஆட்டோ ஓட்டுனர், இந்த மருத்துவ கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்; ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு, மருத்துவ படிப்புக்கு உதவும் பொருட்டு, ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார், மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர்...
'மேலும், தன் படிப்பு செலவுக்கு போக, மீதமுள்ள பணத்தை, இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்து விடுவார்...' என்றார், காவலாளி.
அந்த வருங்கால மருத்துவரை வாழ்த்தி, பெட்டியில் தாராளமாகவே பணத்தை போட்டு வந்துள்ளார், நண்பர்.
முரட்டுதனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுனர்களை பார்த்து பழகிப் போன எனக்கு, நண்பர் கூறியதை கேட்டதும், வித்தியாசமாக இருந்தது.
மருத்துவம் பயிலும், அந்த ஆட்டோ ஓட்டுனரை, மனதார பாராட்டினேன்.
மாலா உத்ஸ், நெய்வேலி.
உனக்கு புடவை, எனக்கு புத்தகம்!
திருச்சியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு, மனைவியுடன் சென்றேன். அங்கே ஓரிடத்தில், மேஜை, நாற்காலி போட்டு அனைத்து வார, மாத இதழ்களும், தினசரி நாளிதழ்களும் வைத்திருந்தனர்.
மனைவி, புடவை பகுதிக்கு போய் விட்டபடியால், காத்திருக்க வேண்டி இருந்தது. இதை மனதில் வைத்தோ என்னவோ, ஆண்களுக்கென்று, இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்தனர், நிர்வாகத்தினர்.
பொழுதை போக்க, நானும், ஒரு மணி நேரம், வார இதழ் மற்றும் நாளிதழ் படித்து மகிழ்ந்தேன். இதனால், காத்திருந்த சலிப்பு தெரியவில்லை. கிளம்பும் முன், கடைக்காரரின் வியாபார யுக்தியை, பாராட்டி வந்தேன்.
டி.என். ரங்கநாதன், திருச்சி.
சேமிப்பின் பலன்!
சமீபத்தில், கோவையில் இருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். சாதாரண வேலையில் இருக்கும் அவர், மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
'பணத்துக்கு என்ன செய்வாய்...' என, கேட்ட போது, அவர் சொன்ன விஷயம், என்னை ஆச்சரியப்படுத்தியதோடு, யோசிக்கவும் வைத்தது.
நண்பருக்கு திருமணம் நிச்சயமானபோது, அவரது வீட்டாரிடம், 'ஒரு நாள் கூத்துக்காக, ஏன் சேமிப்பை வீணாக்க வேண்டும்... அந்த பணத்துக்கு, வீட்டுக்கு அருகிலேயே, மாப்பிள்ளை பெயரில் ஒரு கிரவுண்டு இடம் வாங்கி தருகிறேன்... திருமணத்தை கோவிலிலும், விருந்து, விசேஷங்களை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்...' என்று கூறியிருக்கிறார், மாமனார்.
அதன்படி, கோவிலில் திருமணத்தை முடித்து, விருந்து, விசேஷங்களை வீட்டில் வைத்துள்ளனர். வீட்டிலேயே திருமண விழா நடந்ததால், உறவும், நட்பும் சந்தோஷத்தில் மிதந்துள்ளனர்.
நண்பருக்கு, திருமணம் ஆகி, 23 ஆண்டுகள் ஆகிறது.
'மண்டபத்தில் திருமணம் நடந்திருந்தால், கூடுதல் செலவாகி இருக்கும். மேலும், அப்போது வாங்கிய இடம், இப்போது, நல்ல விலைக்கு போவதால், இடத்தை விற்ற பணத்தில் தான், திருமணம் நடத்த போகிறேன். சேமிப்பு பணத்தில், என் மகள் பெயரில், ஒரு இடம் வாங்கி கொடுத்துள்ளேன்...' என்றார்.
சேமிப்பின் வலிமையையும், சிக்கனத்தின் அருமையையும் நினைத்து வியந்தேன்.
கி. ரவிக்குமார், நெய்வேலி.
