
பெண் வீட்டாரே, உஷாரா இருங்கள்!
திருமண தகவல் மையத்தில், பதிவு செய்து, மணமகன் தேடுபவர்கள், உஷாராக இருக்க வேண்டும். என் தங்கைக்கு நடந்த துயர சம்பவம் இது:
தங்கை, விதவை. ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். அவள் சம்மதத்துடன், இரண்டாம் திருமணத்திற்கு, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தோம். அதை பார்த்து, ஒருவர், 'நான் விவாகரத்து ஆனவன்; தாய் - தந்தை இல்லை. உங்கள் தங்கையையும், குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வேன்...' என்றார்.
நாங்களும் அதை நம்பினோம். தங்கையும் நாளடைவில், அந்த நபரோடு பேசுவதும், சந்திப்பதுமாக இருந்தாள்.
ஒருநாள், வழக்கம்போல் அவரிடம் பேச, அலைபேசியில் அழைத்திருக்கிறாள். அப்போது, ஒரு பெண் போனை எடுக்க, 'நீங்கள் யார்...' என்று கேட்டுள்ளாள், தங்கை.
'அவரின் மனைவி; பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று, இப்போது குழந்தையுடன் வந்துள்ளேன்...' என்று கூறியுள்ளார்.
இதை கேட்டதும், தங்கைக்கு இடி விழுந்தது போல் ஆகி விட்டது.
மனைவி பிரசவத்திற்காக சென்றபோது, விவாகரத்தானவர்கள், விதவைகள் போன்றோரை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று, 'மேட்ரிமோனியல்' பகுதியில் வலை வீசியுள்ளான், அந்த கயவன். இந்த செய்தி அறிந்ததும், தங்கையின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினோம்.
கட்டிய மனைவியையும் ஏமாற்றியிருக்கிறான். அவன் பெற்றோரும் உயிரோடு தான் இருக்கின்றனர்.
நம் வீட்டில் இளம் விதவைகள் அல்லது விவாகரத்தான பெண்கள் இருந்தால், அவர்களுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைத்து தரும் அவசரத்தில், சரிவர விசாரிக்காததால், வந்த வினை இது. முக்கியமாக, திருமண தகவல் மையத்திலிருந்து வரும் வரன்களை நன்கு விசாரித்த பின், பெண் கொடுங்கள்.
பி. விஜயலட்சுமி, பொள்ளாச்சி.
சபாஷ்... நல்ல முயற்சி!
சமீபத்தில், தோழியின் ஒரே மகனுக்கு திருமணம் நடந்தது. அவனுக்கு, சென்னையில் பணி என்பதால், திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் வந்து விட்டான். தோழியும், அவரது கணவரும் உள்ளூரில் தனிமையில் தவிக்க வேண்டிய நிலை.
வசதியான வீடு, வேளா வேளைக்கு சாப்பாடு, பொழுதுபோக்க, 'டிவி' மற்றும் பேசிக்கொள்ள மொபைல் போன் என்று இருந்தாலும், பெற்றோரின் தனிமை வேதனையை உணர்ந்தான், தோழியின் மகன். அவர்களுடன் பேசி, உள்ளூர் வீட்டின் முகப்பில், 'ஸ்டேஷனரி' கடை ஒன்றை வைத்து தந்தான்.
வீட்டிற்கு அருகில், மேல்நிலை பள்ளி இருப்பதால், காலை முதல் மாலை வரை, கடைக்கு, மாணவர்களின் வருகையால் கலகலப்பாகியது. அவர்களுடன் பேசியபடி வியாபாரம் செய்வதில், தோழி மற்றும் அவர் கணவரின் தனிமை ஏக்கம் மறைந்து, உற்சாகமாயினர்.
கடை வருமானத்தில் தங்கள் குடும்ப செலவு போக குறிப்பிட்ட தொகையை, மாதா மாதம் சேமித்து வருகின்றனர்.
பணி நிர்ப்பந்தத்தில் வெளியூரில் வாழ்ந்தாலும், உள்ளூரில் பெற்றோரின் தனிமை துயரை போக்கவும், வயதான காலத்தில் சொந்த காலில் நிற்கவும் வழி செய்த, தோழியின் மகனை பாராட்டினோம்.
- எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
'தை பிறந்தால், வழி பிறக்கும் தங்கமே தங்கம்...'
மார்கழி மாதத்தில், வாசலில் கோலம் போட்டு, மாட்டு சாணத்தில், பிள்ளையார் வைக்கும் பழக்கம், கிராமங்களில், இன்னமும் பல வீடுகளில் நீடித்து வருகிறது.
மார்கழிக்கு அடுத்து, தை பிறப்பதால், இந்த மாதத்தில் தான், திருமணங்கள் நிச்சயிக்கப்படும். ஒரு வீட்டில், திருமண வயதில், பெண்ணோ, பையனோ இருக்கின்றனரா, இல்லையா என்று தெரிந்து கொள்ள, நம் முன்னோர், மிக எளிய முறையை கடைப்பிடித்தனர்.
வீட்டு வாசலில், சாணி பிள்ளையாரில், அருகம்புல் வைத்திருந்தால், அந்த வீட்டில், திருமணமாகாத இளைஞர் இருக்கிறார் என்று பொருள். சாணி பிள்ளையாரின் தலையில், பூசணி பூ வைத்திருந்தால், திருமணமாகாத இளம் பெண் உள்ளதாக பொருள்.
அருகம்புல்லும், பூசணி பூவும் இணைந்து வைத்திருந்தால், அந்த வீட்டில், திருமணத்திற்கு, மணமகனும் - மணமகளும் இருக்கின்றனர் என்று பொருள்.
வெறும் சாணி பிள்ளையார் மட்டும் வைத்திருந்தால், அந்த வீட்டில், திருமணத்திற்கு காத்திருப்போர் யாரும் இல்லை என்று அர்த்தம்.
காலையில், அந்த வீட்டை கடந்து செல்வோர், வாசல் கோலத்தில், சாணி பிள்ளையார் தலையில் இருக்கும் பூவை வைத்தே, திருமண பேச்சு பேசலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வர்.
இப்படி, மார்கழி மாதத்திலேயே தயாராகி விட்டால், அடுத்து வரும், தை மாதத்தில், திருமணம் முடிவு செய்ய, உதவியாக இருக்கும். அதனால் தான், கிராமங்களில், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும், பழமொழி உருவானது.
-சங்கமித்ரா நாகராஜன், கோவை.