
பிள்ளைகளை அவமானப்படுத்தாதீர்!
என் மகளுக்கு, அரையாண்டு தேர்வு முடிந்து, 'ஓபன் டே' என்று, பெற்றோரை வரச்சொல்லி இருந்தனர்.
ஒரு மாணவனின் மதிப்பெண்ணை காட்டி, 'உங்கள் மகனால் இங்கு தொடர்ந்து படிக்க முடியாது... இங்கு, 'சிலபஸ்' ரொம்ப கஷ்டம். 'பாஸ்' போட்டு தருகிறோம்; வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
'இங்கேயே எனில், அடுத்த ஆண்டும், இதே வகுப்பு தான் படிக்க வேண்டும். உங்களிடம் வசதி இருந்தால், பணம் செலுத்தி, மீண்டும் அதே வகுப்பில் சேருங்கள்...' என்று, மிரட்டாத குறையாக பேசினார், வகுப்பு ஆசிரியர்.
எல்லா மாணவ - மாணவியருக்கும், இதே முறையில் தான் பதில் வந்தது. அக்குழந்தைகளின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. மற்ற பிள்ளைகளின் முன்னிலையில் அவமானப்படுத்தவே, பெற்றோரும் கூனி குறுகி நின்றனர்.
என் முறை வந்தவுடன், 'நீங்க, இன்னும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். முடியவில்லை என்றால், ஒன்பதாம் வகுப்பு வரை, இங்கு படிக்க வையுங்கள்; வேறு பள்ளியில், 10ம் வகுப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
'கடந்த, 10 ஆண்டுகளாக, என் மகள், உங்கள் பள்ளியில் தான் படிக்கிறாள். நான்காவது அல்லது ஐந்தாவது படிக்கும்போதே, இதை நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் அவளின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாத நீங்கள், எட்டாவது படிக்கும்போது மட்டும், இப்படி நடந்து கொள்வது ஏன்...
'பத்தாம் வகுப்பில் முழு தேர்ச்சி காண்பிக்க வேண்டுமென்றால், சிறு வயது முதலே நல்லமுறையில் பயிற்சி அளிக்க வேண்டும். அதை செய்யாமல், பெரிய வகுப்பு வந்தவுடன், நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற பிள்ளைகளை, இதுபோன்று அவமானப்படுத்தி, படிப்பில் நாட்டமில்லாமல் செய்து, அவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போடாதீர்...
'அப்படியே அறிவுரை சொல்ல வேண்டும் என்றாலும், தனித்தனியாக அழைத்து பேசுங்கள்; உங்கள் பள்ளிக்கு நல்ல பெயராவது கிடைக்கும்...' என்று சத்தம் போட்டு வந்தேன்.
பெற்றோர்களே... குழந்தைகளின் படிப்பு திறன் அறிந்து, அவர்களை, நல்ல பள்ளியில் சேருங்கள். கவுரவத்திற்காக, பிள்ளைகளையும் அவமானப்படுத்தி, நீங்களும் மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்.
கலை, சென்னை.
நல்ல சேவை!
சமீபத்தில், அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கே, சேமிப்பு படிவம், பணம் எடுக்கும் படிவம் மற்றும் ஆர்.டி., படிவத்தை பூர்த்தி செய்து, அவற்றின் மாதிரியை, அங்குள்ள, 'நோட்டீஸ் போர்டில்' ஒட்டி வைத்திருந்தனர்.
மேலும், அஞ்சல் அலுவலக சம்பந்தப்பட்ட பலவிதமான சேமிப்பு திட்டங்களையும் விளக்கமாக வைத்திருந்தனர்.
அதைப் பார்த்து, கவுன்டரில் இருந்தவரிடம் கேட்டேன்.
'ஆமாம் சார்... படிக்காத, விபரம் தெரியாத பெண்கள் - ஆண்கள், இங்கே வருகின்றனர். படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாமல், எல்லாரிடமும் போய் கேட்கின்றனர். சிலர் மறுத்து, ஒதுங்கி விடுகின்றனர். எங்களாலும் செய்ய முடியாது; செய்யவும் கூடாது.
'அதனால் தான், இதுபோன்ற மாதிரி படிவங்களை பூர்த்தி செய்து, எங்கே கையெழுத்து போட வேண்டும் என குறிப்பிட்டு, அதை ஒட்டி வைத்துள்ளோம். அதை பார்த்து, பூர்த்தி செய்து விடுகின்றனர்...' என்று விளக்கமளித்தார்.
பாராட்டி வந்தேன்.
ஜி. குப்புசாமி, சென்னை.
தாத்தாவின் தமிழ் வளர்ப்பு!
சமீபத்தில், தோழியை காண சென்றிருந்தேன். வீட்டிற்குள் நுழைந்ததும், ஹாலில் அமர்ந்திருந்த அவளின், 10 வயது மகன், என்னை பார்த்ததும், 'மொபைலில்' விளையாடிய படியே, 'வணக்கம் அத்தை, வாங்க...' என்றான்.
சிறுவனின் செயல், என்னை ஆச்சரியப்படுத்தினாலும், பதிலுக்கு, நானும் வணக்கம் தெரிவித்தேன். அதன்பின், என்னுடன் அவன் எதுவும் பேசவில்லை.
'இன்றுள்ள பிள்ளைகள், எப்ப பாரு, 'மொபைல் போன்'லயே இருக்குங்க... யாரோடயும் பேச மாட்டேங்குதுங்க...' என்றேன்.
'அப்படியில்ல... 'வாட்ஸ் - ஆப்'ல, என் மகனுக்கு, தமிழ் சொல்லி குடுத்துட்டு இருக்கிறார், மாமனார்...' என்றாள், தோழி.
அப்போது தான், தோழியின் மகனும், அவள் மாமனாரும் மொபைலில், 'வாட்ஸ் ஆப்' மூலம், தமிழில், 'டைப்' செய்து, ஒருவருக்கு ஒருவர், குறுஞ்செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்ததை பார்த்து, ஆச்சரியமடைந்தேன்.
திருக்குறளின் ஒரு பாதியை, மாமனார் அனுப்ப, அதை சத்தமாக படித்து, மீதியை, 'டைப்' செய்து அனுப்பினான், மகன். அவ்வப்போது, 'வாய்ஸ் மெசேஜ்'களும் அனுப்பிக் கொண்டனர். அதிலிருந்த தவறுகளையும், உச்சரிப்பு பிழைகளையும் குறிப்பிட்டு திருத்தினார், தோழியின் மாமனார்.
மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின், தமிழின் மீதான பற்று காரணமாக, அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தரும் நோக்கில், சுற்றியிருக்கும் வீடுகளில் உள்ள, மாணவ - மாணவியருக்கு, 'வாட்ஸ் - ஆப்' மூலம் தமிழை, இலவசமாக சொல்லித் தருகிறார்.
அவரது முயற்சியை பாராட்டினேன்.
'இதுக்கு எதுக்கும்மா பாராட்டு... நம் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பதை கடமையாகவும், இன்றுள்ள, 'டெக்னாலஜி' முறையிலும் கற்பிக்கிறேன். தமிழை இப்படியும் கற்றுக் கொள்ளலாம் தானே...' என்றார்.
அதை ஆமோதித்து, என் மகனுக்கு, குறுஞ்செய்திகளை, இனி, தமிழிலேயே அனுப்ப முடிவு செய்தேன்.
எஸ். சசிகலா, சென்னை.