PUBLISHED ON : மே 08, 2011

காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வரா!
கடந்த சில நாட்களுக்கு முன், வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் சப்ளை செய்வதற்காக, காஸ் ஏஜென்சி வேன் மூலம் சிலிண்டர் இறக்குவதைப் பார்க்க நேர்ந்தது. வேனில் மேலே ஏறி நின்று, சப்ளை செய்வதற்கான சிலிண்டரை, வெற்றுத்தரையில் தூக்கிப் போட்டனர். பாதுகாப்பாக, முறைப்படி இறக்க வேண்டிய சிலிண்டரை, தூக்கிப் போடுவதை பார்க்கும் போது, பயமாக இருந்தது.
சில இடங்களில், வாகனங்களின் பழைய டயரைப் போட்டு, அதன் மேல் இறக்கிப் போடுவர்; இவர்கள் அப்படியும் செய்யவில்லை. இதன் பின்தான், சிலிண்டரின் அடிப்பகுதி சேதமடைய காரணம் இவர்கள் தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
முறைப்படி இறக்கி, சப்ளை செய்யாமல், இப்படி செய்தால், விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வீட்டில் பயன்படுத்தும் போது, சிலிண்டரில், 'காஸ்' லீக்காகவும் வாய்ப்பு உண்டு.
நல்ல சிலிண்டர்களை, காஸ் ஏஜென்சி சப்ளை செய்யும் ஊழியர்களே சேதப்படுத்துவது ஜீரணிக்க கூடியதல்ல. காஸ் ஏஜென்சி நிர்வாகிகள், உரிமையாளர்கள் சப்ளை செய்யும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி, வழிகாட்டுதல், உபகரணங்கள் கொடுக்க வேண்டும். சிலிண்டரை சேதப்படுத்தும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.
முன் உதாரணம்!
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்; அவருக்கு ஒரே மகன்தான். தற்போது, பி.காம்., முடித்து, வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். வேலை கிடைக்காவிட்டால், சுயதொழில் செய்யவும் வங்கி லோனுக்கு விண்ணப்பித்துள்ளான். சமீபத்தில், நண்பரை சந்தித்த போது, அவர் மகனைப் பற்றி விசாரித்தேன். நண்பர் மனம் நெகிழ்ந்து, கண் கலங்க கூறிய தகவல், என்னையும் நெகிழ வைத்து விட்டது.
அவர் கூறியது... 'காலையில் எழுந்தவுடன், நாளிதழ்களைப் பார்க்கிறான். அதன்பின், எனக்கும், வீட்டிற்கும் தேவையானவற்றை வாங்கி வருவான். பிறகு குளித்து, டிபன் முடித்தவுடன், 10:00 மணியளவில் தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று, அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை அனுப்பி விட்டு, ஒரு மணி நேரம், அங்கு வருபவர்களுக்கு மணியார்டர் மற்றும் படிவங்களை நிரப்பிக் கொடுத்து உதவுகிறான்.
'அதன்பின், வட்டாட்சியர் அலுவலகம் சென்று, மாலை, 5:00 மணி வரை, அங்கு வருபவர்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுக்கிறான். மாலையில் வீடு திரும்பும் போது, மறுநாளைக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவான். அத்துடன், அவன் அம்மாவிடம், குறைந்தது, நூறு ரூபாயாவது கொடுத்து விடுவான். ஒரு நாள் கூட, அவன் சோர்ந்து போனதே கிடையாது.
'இப்படி ஒரு மகன் எனக்கு கிடைத்தது, நான் செய்த புண்ணியம் என்றே நினைக்கிறேன்...' எனச் சொன்னவர் கண்களில் நீர் வடிந்தது.
இன்றைய வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு, இந்த இளைஞனை முன்னுதாரணமாக கொள்ளலாம் தானே!
— ந.பொன்னுசேகரன், சிவகாசி.
எல்லாருக்கும் புரியும்படி தமிழில் பேசலாமே!
மக்கள் தொடர்பு சாதனங்களில், முக்கியப் பங்கு வகிக்கும் தொலைக்காட்சியின் தமிழ் அலைவரிசைகளில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும், நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் நேயர்களும், ஆங்கிலத்தில் பேசுவதையே, நாகரிகமாகச் கருதுகின்றனர்.
இதை விட வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், சமையல் குறிப்பு சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் இல்லத்தரசிகள் கூட, 'பொட்டேட்டோவை நல்லா ஸ்மாஷ் பண்ணுங்க... வெஜிடபிள்சை பொடிசா சாப் பண்ணுங்க... சீசன் பண்ண ஜீரா சேர்க்கலாம்...' என, 90 சதவீதம் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர்.
இந்நிகழ்ச்சிகளைப் பார்க்கும் அனைவருக்கும், ஆங்கிலத்தில் சிறந்த புலமை இருக்கும் எனக் கூற முடியாது.
மொழி என்பதே, நம் கருத்துக்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவும் கருவி தான். அந்த மொழியே, மற்றவருக்குப் புரியாதபட்சத்தில், நம் கருத்துக்களால், அவர்களுக்கு என்ன பயன்?
ஆங்கிலக் கலப்போடு, தமிழ் பேசுவதில் பெருமை கொள்வோரே... நம் தாய்மொழியாகிய தமிழை, பிறமொழிக் கலப்பின்றி, சரியான உச்சரிப்புடன் பேசுவதே பெருமை என்பதை எப்போது உணர்வீர்?
— ஜெ.ஈஸ்டர் ராணி, மதுரை.
