sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 12, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்...



உறவினர் இல்ல திருமணத்திற்கு, நானும், மனைவியும் இரு சக்கர வாகனத்தில் சென்றோம். செல்லும் வழியில், வாகனம் பழுதாகி நின்று விடவே, அருகில் நின்றிருந்த பள்ளி மாணவனிடம், 'எங்களுக்கு உதவ முடியுமா...' என்று கேட்டோம்.

சிறிதும் யோசிக்காமல், இரு சக்கர பழுது நீக்கும் பணிமனைக்கு வாகனத்தை எடுத்துச் சென்று, பழுதை சரி செய்து கொடுத்தான், அந்த மாணவன்.

'தம்பி... இந்த தொழிலை, நீ எங்கே கற்றுக்கொண்டாய்...' என, கேட்டேன்.

'எங்கள் ஊரில், ஒரு 'மெக்கானிக்' உள்ளார். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தவறியவர்களை, தன் பணிமனைக்கு அழைத்து வந்து, தொழில் கற்றுக் கொடுக்கிறார்...

'இவரிடம் தொழில் பயின்ற பலர், இன்று, நகரங்களில், புதிய பணிமனைகளை துவக்கி, நல்ல நிலையில் வருமானம் ஈட்டுகின்றனர். நானும், அவரிடம் தான் தொழில் கற்றேன். தேர்வில் தவறி விட்டோம். இனி, எதிர்காலமே இல்லை என்று, விரக்தி அடைந்தவர்களை, துாக்கி விடும் கடவுள், இவர் ஒருவரே...' என்றார்.

இவ்வுலகில், சத்தமே இல்லாமல் சாதனை படைப்பவர்களும் உள்ளனர் என்பதை நினைத்து, மகிழ்ந்தேன்!

வேத. புருஷோத்தமன், ஆதிச்சபுரம், திருவாரூர்.

பெண்களே மாறுவோமா!



சமீபத்தில், தோழி ஒருவரின், புது வீடு கிரஹப்பிரவேசத்துக்கு சென்றிருந்தேன். எல்லாரும் கலகலவென்று இருந்தாலும், ஒரு பெண் மட்டும் எளிமையாகவும், அமைதியாகவும் இருந்தார்.

விசாரித்ததில், அவர், தோழியின் வீடு அருகில் இருப்பவர் என்றும், சமீபத்தில் தான் அவரின் கணவர், விபத்தில் இறந்ததும் தெரிய வந்தது. பூஜையின் போதும், ஆரத்தி போன்ற மங்கள சடங்குகளின் போதும், தோழி வலுக்கட்டாயமாக, அந்த பெண்ணையும் கலந்துகொள்ள வைத்ததை பார்த்து, உறவினர்கள் முகத்தை சுளித்து, ஆட்சேபணை செய்தனர்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தோழி, விசேஷம் முடியும் வரை, அப்பெண்ணை முன்னிறுத்தி, கவனித்து அனுப்பி வைத்தார்.

அப்பெண் சென்றதும், தோழியின் அம்மா, 'நீ செய்தது, சரியில்லை... புருஷன் இல்லாதவளுக்கு, இத்தனை மரியாதை தந்திருக்க வேண்டாம்...' என்றார்.

'அம்மா... இத்தனை நாள், வீடு கட்ட, வேண்டிய உதவிகள் செய்தது, அப்பெண் தான்... அப்போது தேவைப்பட்டவள், அவள் கணவன் இறந்ததும், தேவையில்லையா... இது தான், மனிதாபிமானமா... புருஷன் இறந்தால், பெண்களை ஒதுக்கி வைப்பது நியாயமே இல்லை...

'நமக்கும், நாளைக்கு இதே நிலைமை ஏற்பட்டால், என்ன செய்வீங்க... இதை ஏன் எல்லா பெண்களும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க... ஒதுக்காம இருந்ததால, எவ்வளவு சந்தோஷமா வாழ்த்திட்டு போனாங்க தெரியுமா... இனியாவது மாறுங்க...' என்றார், தோழி.

கணவனை இழந்து விட்டால், சுமங்கலி அந்தஸ்தை பெண்கள் இழப்பதாக கருதி, அவர்களை விசேஷங்களில் ஒதுக்கி வைக்கும் வழக்கத்தை சக பெண்கள் நினைத்தால் மாற்ற முடியும்.

'நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்...' என, அந்த தோழியை பாராட்டி வந்தேன்.

- சுபா தியாகராஜன், சேலம்.

மாற்று யோசனை!



நண்பர் ஒருவர், சிக்கன் கடை நடத்தி வந்தார். நஷ்டத்தில் இயங்குவதாகவும், வாடகை கொடுக்க சிரமப்படுவதாகவும் கேள்விப்பட்டு, ஒருநாள் காலை, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி, என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அவர் வீட்டுக்கு வெளியே, சிறிய டிபன் கடை ஒன்றை துவக்கி, நண்பர், 'சப்ளை' செய்ய, நான்கைந்து பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவியோ, ஆவி பறக்க இட்லியை வேக வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

நானும், இட்லி கேட்க, இலையில் சட்னி, சாம்பார் ஊற்றியவாரே, 'கொரோனா வைரஸ் பீதியால், கோழிக்கறி வாங்க யாரும் வருவதில்லை. வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றேன்.

'வீட்டுக்காரி தான், 'டிபன் கடை வைக்கலாம்...' என்றாள். அவள் கொடுத்த தைரியத்தில், கடன் வாங்கி, இட்லி, தோசை, பூரி மற்றும் வடை தயார் செய்து, விற்பனையை துவக்கினோம். தரமும், ருசியும் நன்றாக இருக்கவே, பலரும் தேடி வந்து சாப்பிடுகின்றனர்.

'காலை, 11:00 மணிக்கெல்லாம் வியாபாரம் முடிந்து விடும். மீதி நேரத்தை வீணடிக்க விரும்பாமல், 'வெயில் காலம் ஆரம்பித்து விட்டது; கூழ் வியாபாரம் செய்தாலென்ன...' என்று, யோசனை கூறினாள், மனைவி. அதுவும் நன்றாக போகிறது. வாங்கிய கடனை முழுவதுமாக அடைத்து விட்டேன்...' என்றார், நண்பர்.

சிக்கலான நேரத்தில், தக்கதொரு முடிவெடுத்து, முழு ஈடுபாட்டுடன் உழைத்து, வெற்றிக்கொடி நாட்டிய தம்பதியரை, மனதார வாழ்த்தி, விடைபெற்றேன்.

பாலா சரவணன், சென்னை.






      Dinamalar
      Follow us