PUBLISHED ON : ஜூன் 21, 2020

விபரீதம் ஏற்படாமல் இருக்க...
சமையல், 'காஸ்' தீர்ந்து விடவே, பதிவு செய்திருந்தோம். ஐந்தாறு நாட்களில் சிலிண்டர் வந்தது. எப்போதும், காலி சிலிண்டரை வராண்டாவில் வைத்திருப்போம். எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரில், 'காஸ் லீக்' ஆகிறதா என, சோதனை செய்த பின், காலி சிலிண்டரை எடுத்துச் செல்வார், 'டெலிவரி' பாய்.
சம்பவத்தன்று, இரு சக்கர வாகனத்தில், வெளியே சென்று வந்த, என் கணவர், வராண்டாவில், சிலிண்டர் அருகே வாகனத்தை நிறுத்தினார். இதை கவனித்த, 'டெலிவரி பாய்' என்னையும், கணவரையும் அழைத்து அறிவுறுத்தினார்.
'வெளியே சென்று, வீட்டினுள் வண்டியை நிறுத்தும்போது, அதன், 'இன்ஜின்' மற்றும் 'சைலன்சர்' சூடாக இருக்கும். பெட்ரோல் ஒழுகி, விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
'எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தினால், 'காஸ் லீக்' ஆகி, எதிர்பாரா விபரீதத்தில், சிலிண்டர் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, 'காம்பவுண்ட்டு'க்கு வெளியே வண்டியை நிறுத்தி, 'இன்ஜின்' மற்றும் 'சைலன்சர்' சூடு ஆறியதும், உள்ளே எடுத்து வந்து நிறுத்தலாம்...' என்றார்.
விபரீதத்தை தவிர்க்க, இவ்வளவு பொறுப்புடன் புத்தி கூறிய அந்நபரை, மனதார பாராட்டினோம். இதை படிப்பவர்களும் கவனமாக இருக்கவும்.
என். லதா, சென்னை.
வருமுன் காப்போம்!
'கொரோனா' ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால், திருட்டில் ஈடுபடுவோருக்கு, பேருந்து பயணம் அட்சய பாத்திரமாக இருக்கிறது.
குறிப்பாக, பணிக்கு பேருந்தில் செல்லும் பெண்கள் என்றால், குற்றவாளிகளுக்கு பெரும் சாதகம். பொருள் இழப்பிலிருந்து தப்பிக்க, சில, 'டிப்ஸ்' இதோ:
வீட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு, பஸ்சில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து பயணிப்பது நல்லது. இடம் கிடைக்காவிடில், படிக்கட்டு அருகே நிற்காமல், மத்திய பகுதியில் நிற்க வேண்டும். நின்று பயணிப்பவர்களே, திருடர்களின் இலக்கு.
யாரையும் நம்பி, பையை கொடுக்க கூடாது. பொது இடங்களில், அடிக்கடி, 'பர்சை' திறக்க கூடாது.
வீட்டிலிருந்து புறப்படும் முன், அன்றைய செலவுக்கு தேவையான தொகையை மட்டுமே, 'பர்சில்' எடுத்துச் செல்ல வேண்டும். களவு போனாலும் சிறிய அளவே இழக்க வேண்டியிருக்கும்.
தங்க நகைகளை தவிர்த்து, 'கவரிங்' நகைகள் அணியலாம்.
நின்று பயணம் செய்யும்போது, சக பயணியிடம் நீண்ட நேரம் பேசுவதை தவிர்க்கவும். அடிக்கடி பொருள் உள்ள பையின் மேல் பார்வை இருக்கட்டும்.
'ஹேண்ட் பேக்'கை பக்கவாட்டில் தொங்க விடுவதை தவிர்த்து, முன்பக்கம், மார்போடு அணைத்தவாறு முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது!
ஆர். நிர்மலா, சென்னை.
இலவச இசை பயிற்சி!
சமீபத்தில், ஊரடங்கால், திருமணம் மற்றும் கோவில் விசேஷம் போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதில்லை. இதனால், தவில், மிருதங்கம் வாசிக்கும் இசைக் கலைஞர் ஒருவர், தன் வீட்டினருகே வசிக்கும் சிறுவர்களிடம், 'ஆர்வம் இருந்தால், இலவசமாக இசைக் கருவிகளை வாசிக்க கற்று தருகிறேன்...' என்று கூறினார்.
விளையாட்டாக, முதலில் ஓரிரு சிறுவர்கள் வந்து கற்றுக்கொள்ள முயற்சித்து, இசையால் ஈர்க்கப்பட்டு, முழுமையாக கற்றுக் கொண்டனர். அவர்களை பார்த்து, மேலும் சில சிறுவர்களும் பயிற்சிக்கு வந்தனர்.
தனக்கு தெரிந்த இசை தொழிலை, இலவசமாக கற்று தருவதற்கும் பெரிய மனசு வேண்டும். அப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்ட, இசைக் கலைஞரை, அப்பகுதி மக்கள், மனதார பாராட்டினர்; தங்களால் இயன்ற பொருள் உதவியும் செய்தனர்.
தனக்கு போட்டியாக யாராவது வந்து விட்டால், தன் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று நினைக்காமல், தனக்கு தெரிந்த வித்தையை மற்றவருக்கு கற்றுத்தர, எல்லா கலைஞர்களும் முன் வந்தால், எந்த கலைக்கும் அழிவு ஏற்படாது.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
பிழைக்க தெரிந்த பெண்மணி!
சமீபத்தில், உறவினர் வீட்டிற்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த தெருவில், நடுத்தர வயது பெண்மணி ஒருவர், தள்ளுவண்டியில் எதையோ வைத்து கூவி கூவி விற்பனை செய்தபடி சென்றார்.
அவரிடமிருந்து, ஒரு துணி பையில் எதையோ வாங்கி வந்தார், உறவினர்.
'ஏதாவது தின்பண்டமா...' என்று கேட்டதற்கு, 'இல்லை...' என்றவர், அதுபற்றி அவரே விளக்கினார்...
'அந்த பெண்மணி, அருகில் உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர்; கணவனை இழந்தவர்; இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 20 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.
'அந்த ஆடுகளின் புழுக்கைகளை எடை போட்டு, துணி பைகளில் சேகரித்து, தள்ளுவண்டியில் எடுத்து வந்து, கிலோ ஒன்றுக்கு, 50 ரூபாய் என்று, வாரம் இருமுறை விற்பனை செய்து வருகிறார்.
'என்னை போல, மாடி தோட்டம், வீட்டு தோட்டம் போட்டிருப்போர், அவரிடம், ஆட்டு புழுக்கைகளை வாங்கி, இயற்கை உரமாக பயன்படுத்தி பலன் பெறுகிறோம்...' என்றார்.
காசு இல்லை என்று சோம்பிக் கிடக்காமல், உழைப்பில் உயர்வு காணும் அப்பெண்ணை பாராட்டினேன்.
கே. கல்யாணி, விக்கிரவாண்டி.
