தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அட்சதையை அன்புடன் தூவலாமே!

நம் ஊர் கல்யாணங்களில், தாலி கட்டி முடித்ததும், கூடியிருப்பவர்கள் பொறுமையின்றி அட்சதையை தூக்கி எறிவதைப் பார்த்திருக்கிறோம். அவற்றில், மிகக்குறைந்த அளவே, மணமக்கள் மீது விழும். பாக்கியெல்லாம், முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மீது விழும் அல்லது கண்ட இடத்தில் விழுந்து, எல்லாரது கால்களிலும் மிதிபடும். கல்யாணங்களில், தூவப்படும் அட்சதைக்கு, நிறைய அர்த்த முண்டு. தூக்கி எறிவது முறையல்ல; அவற்றை முறைப்படி மணமக்கள் தலையில் தூவி, ஆசிர்வதித்தால், அதற்குண்டான மதிப்பே தனிதான்.

நம்மூரில் இப்படியிருக்க, ஐதராபாத்தில் நடந்த கல்யாணங் களைப் பார்த்து, நான் பரவசப்பட்டதுண்டு. 2,000 - 3,000 என, மக்கள் அலை மோதிய கல்யாணங்களில் கூட, மக்கள் வரிசையில் நின்று, மணமேடையில் ஏறி, மணமக்கள் தலை மீது அட்சதையைத் தூவி வாழ்த்துகின்றனர். ஒரு கல்யாணத்தில், வரிசையில் நின்று, மண மேடை ஏறி, அட்சதையைத் தூவ, எனக்குத் கிட்டதட்ட, நாற்பது நிமிடங்களா கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இருந்தாலும், யாரும் அவசரப்பட்டு, அட்சதையைத் தரையில் இறைப்பதை நான் பார்க்கவில்லை. 'எங்க வீட்டுக்காரரும், கச்சேரிக்குப் போனார்...' என்ற மாதிரி இல்லாமல், புது மணமக்களுக்கு முறைப்படி அட்சதையைத் தூவி, நம் அன்பான ஆசிகளைத் தெரிவிக்கலாமே!

— ஆழ்வார் கண்ணன், ஐதராபாத்.

மருத்துவமனையில் வாழும் மகான்!

என் உறவினரை நலம் விசாரிக்க, அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கே, ஒவ்வொரு நோயாளிக்கும் ஒருவர் வீதம், பணிவிடைகளை செய்து கொண்டிருந்தனர். ஆனால், இரு முதியவர்களை மட்டும், ஒருவரே ஓடி, ஓடி கவனித்துக் கொண்டார். ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தான், உடல் நிலை சரியில்லையோ என நினைத்து, 'இந்த பெரியவர்களை பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லையா?' என கேட்டதற்கு, அவர் கூறிய பதில், என்னை திகைக்க வைத்தது. 'இங்கே நானும் ஒரு நோயாளிதான். இவர்களை வீட்டுக்கு பாரம் எனக் கருதி, அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, செத்தார்களா, பிழைத்தார்களா என்று கூட பார்க்கவில்லை. நான், இவர்களுக்கு மகனாக நினைத்து உதவி வருகிறேன். எனக்கு என்று யாரும் இல்லை. இவர்களே என் உறவினர்கள்...' எனக் கூறினார்.

வயதான காலத்தில், வீட்டுக்கு பாரம் என எண்ணாமல், அவர்களையும் அன்போடு கவனியுங்கள். கொழுந்து இலை, பழுத்த இலையை பார்த்து சிரிக்கக் கூடாது.

— பெ.சத்தியவதி, திண்டுக்கல்.

பிரமாதமான, 'பாலிசி!'

வெளிநாட்டில் வசிக்கும் என் தாய்மாமன், ஒரு வார விஜயமாக, இந்தியாவுக்கு வர இருப்பதாகத் தகவல் அனுப்பி இருந்தார்; ஆனால், எந்த பிளைட்டில், எந்த நேரத்தில் சென்னை வருவார் என்று விபரம் இல்லை. மாமா குடும்பத்தை வரவேற்று உபசரிக்க, வீட்டை தயார் படுத்தி, காத்திருந்தோம். குறிப்பிட்ட நாளில், மாமாவும், அவர் குடும்பமும் வந்திறங்க, 'லக்கேஜ்' மிஸ்சிங். நாங்கள், குழப்பத்தோடு பார்க்க, அவரோ தெளிவாக, 'என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? சொந்தங்களும் விட்டுடக் கூடாது; எங்களால அவங்களுக்கு சங்கடமும் வந்துடக் கூடாது. பரபரப்பான இப்போதைய கால கட்டத்துல, ஒரு வீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு, ஒரு வாரம் டேரா போடறதுங்கறது எல்லாம் சரிபட்டு வராது. ரெண்டு பேருக்கும் தர்ம சங்கடம். வந்தோமா, பார்த்தோமா, பேசினோமா, ஒரு வாய் காபியோ, இல்லை ஒரு வேளை சாப்பாடோ சாப்பிட்டோமான்னு நலம் விசாரிச்சிட்டு போயிட்டே இருக்கணும்; அதுதான், ரெண்டு பேருக்கும் நல்லது. எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊர்ல இருக்கும் ஓட்டல்ல தங்கி, சொந்தக்காரங்களை சந்திக்கறதை ஒரு பாலிசியாவே வெச்சிருக்கேன்...' என்று கூறி, பிரமிக்க வைத்தார். உண்மையிலேயே, இது பிரமாதமான பாலிசி தானே!

— தாமஸ் கிருபாகரன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us