
நாளைய தலைமுறை பாடசாலை!
பள்ளி ஆசிரியையான என் தோழியை சந்திக்க, ஒரு ஞாயிறன்று, அவளது, 'அப்பார்ட்மென்ட்'டுக்கு சென்றேன். அந்த குடியிருப்பை சேர்ந்த, 5 முதல், 10 வயதிற்குட்பட்ட, 20க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் கூடியிருந்தனர்.
'என்னடி இது... 'டியூஷன்' எடுக்கிறாயா?' என்றேன்.
'சிறு வயதில் நாம் படித்த, நீதிபோதனை வகுப்பு போன்றது...' என்றாள், தோழி.
என்ன சொல்லிக் கொடுக்கிறாள் என, கவனிக்க ஆரம்பித்தேன்.
முதலில், ஒரு நீதி கதையை சொல்லி, அதன்பின், முதலுதவி செய்வது எப்படி, சாலட் மற்றும் எலுமிச்சம் பழ ஜூஸ் தயாரிப்பது போன்றவற்றின் செயல்முறை விளக்கமளித்தாள்; 10 - 12 வயதுள்ளவர்களுக்கு, டீ போடுவது பற்றியும் சொல்லிக் கொடுத்தாள்.
இது தவிர, பொது அறிவு கேள்வி - பதில் மற்றும் இட்லி மாவு புளிப்பது எப்படி, பால் பொங்குவது ஏன், கடலில், கப்பல் மிதப்பதன் காரணம், பால் தயிராவது எப்படி போன்ற, பல அறிவியல் உண்மைகளையும் விளக்கினாள்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும், எளிமையான தலைப்புகளை கொடுத்து, இரண்டு நிமிடம் பேச கூறினாள். ஒவ்வொரு குழந்தையும், அருமையாக பேசி, கைத்தட்டல் பெற்றனர்.
ஒரு மணி நேரத்துக்குள், பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து, மனதில் பதிய வைத்த தோழியின் அணுகுமுறை ஆச்சரியமளித்தது.
குழந்தைகள் ஒவ்வொருவரும், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை என, உறவு முறை கூறி அழைத்துக் கொள்வதாகவும், பெரியவர்களிடம் மரியாதையாய் நடந்து கொள்வது, விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையும் வளர்ந்துள்ளது என்றும் கூறி, ஆச்சரியப்படுத்தினாள், தோழி.
நாளைய இந்தியா, இளம் தலைமுறையினரிடம் தான் உள்ளது என்று, அப்துல் கலாம் ஐயா கூறியுள்ளார். அதற்கேற்ப, குழந்தைகள் மனதில் நல்ல விதையை விதைக்கும் தோழியை, மனதார பாராட்டி வந்தேன்.
ஜெனோவா மனோகரன், குன்றத்துார்.
இப்படியும் விளம்பரம் செய்யலாமே...
சமீபத்தில், ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். முகூர்த்தம் முடிந்ததும், சாக்லேட் இணைத்த அட்டைகளை, இளைஞர்கள் வழங்கினர். அதில், மணமக்களை வாழ்த்தி அச்சிடப்பட்டதோடு, அவர்கள் தொழில் விவரம் மற்றும் தொலைபேசி எண் இருந்தது.
குறிப்பாக, புகைப்படக்காரர், சமையல்காரர், 'டெக்கரேட்டர், சவுண்ட் சர்வீஸ், சாமியானா' பந்தல், மெல்லிசை மற்றும் திருமண தகவல் மையம் என, பலதரப்பட்ட நபர்களின் மொபைல் எண்களும் அதில் அச்சிடப் பட்டிருந்தது.
அட்டையை படித்த அனைவரும், பாதுகாப்பாக தங்கள், 'பர்ஸ்'களில் பத்திரப்படுத்தியதை காண முடிந்தது.
அனைவரும் ஒன்று கூடி, வாழ்த்துதல்களோடு, தங்களது தொழில் விளம்பரத்தை சிறு அட்டை வாயிலாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியதை எண்ணி வியந்தேன்.
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கெட்டான்விளை, கன்னியாகுமரி.
நஞ்சை விதைக்காதீர்!
சமீபத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றேன். அங்கு, ஒரு பணக்கார குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. குடும்ப தலைவர், தன் குழந்தையிடம், 'நல்லா படிக்கணும். இல்லேன்னா, இந்த ஆளை போல, 'சர்வர்' வேலை தான் செய்ய வேண்டும்...' என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த, 'சர்வர்' முகம் வாடிப்போனது.
தன் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியது தவறில்லை. அதற்காக, 'சர்வர்' தொழிலை கேவலப்படுத்த வேண்டுமா?
எத்தனையோ பேர், 'சர்வராக' இருந்து, ஓட்டல் முதலாளியாகி உள்ளனர். படித்தவர்கள், 'சர்வர்' தொழிலை செய்வதில்லையா?
பிள்ளைகளிடம், இப்படி சொன்னால், 'சர்வர்' வேலை செய்பவர்களை மதிக்க தோன்றுமா?
பெற்றோர்களே... எந்த வேலையும் கேவலமானதல்ல; உண்மையுடனும், நேர்மையுடனும் செய்தால், எப்படிப்பட்டவர்களும் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லுங்கள். இந்த வேலை தான் சிறந்தது; இது மட்டம் என்று, பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்காதீர்கள்!
எம்.ஏ. நிவேதா, திருச்சி.