
வாழ்வில் உயர, மதிப்பெண் தேவையில்லை!
கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம், 'நம் ஊரில், சுயதொழில் செய்து, முன்னேற்றம் அடைந்தவர்கள் யாராவது உங்களுக்கு தெரியுமா... ஆனால், அவர்கள் கல்லுாரி படிப்பை முடித்திருக்க கூடாது...' என்றார்.
'ஏன்...' என்று கேட்டேன்.
'கல்லுாரி படிப்பை முடித்து செல்லும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களையோ, கூடுதல் தகுதிகளையோ பெறுவதில்லை. படிப்பில் ஈடுபாடு இல்லாமை, குடும்ப பிரச்னை, ஆசிரியருடன் முரண்பாடு போன்ற பல காரணங்களால், சில மாணவர்கள், படிப்பில் பின்தங்கி விடுகின்றனர்.
'நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மேற்படிப்புக்கு செல்கின்றனர் அல்லது தனியார் நிறுவனங்கள் நடத்தும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் தேர்வில் வெற்றி பெற்று, வேலைக்கு செல்கின்றனர்.
'ஆனால், வெறும், 'பாஸ் மார்க்' மட்டும் வாங்கும் மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என்று அறியாமல், அவநம்பிக்கையிலும், பயத்திலும், கல்லுாரியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
'கல்லுாரி படிப்பை சிறப்பாக முடிக்காதவரும், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் சிலரை அணுகி, கல்லுாரிக்கு வரவழைத்து, அவர்களின் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள சொல்லலாம்; அது அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமே என்று தோன்றியது. அதனால் தான், உங்களிடம் கேட்டேன்...' என்றார்.
'எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து சொல்கிறேன்...' என்றேன்.
படிப்பில் சராசரியாக விளங்கும் மாணவர்களும், வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும், என் நண்பரை மனதார பாராட்டினேன்.
— தி. உத்தண்டராமன், விருதுநகர்.
முயன்றால் முடியும்!
எங்கள் வீட்டு அருகில், புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில், சித்தாள் வேலை செய்யும், 50 - 55 வயது பெண்மணி, தினமும், டி.வி.எஸ்., 50 ஓட்டி வருவதை, ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அதுபற்றி அவரிடம் கேட்க, 'புருஷன், சாராயம் குடித்தே, போயி சேர்ந்துட்டாரு. மூன்று பிள்ளைகள படிக்க வைக்கவும், வயித்து பொழப்புக்கும், சித்தாளா வேலை செய்யுறேன்.
'வெவ்வேறு ஏரியாவுக்கு போக, சிரமமா இருந்ததால, மெதுவா வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். யாரையும் எதிர்பார்க்காம, நேரத்துக்கு வேலைக்கு போக, வர முடியுது. இதனாலயே நிறைய கான்ட்ராக்டருங்க, மேஸ்திரி எல்லாம் என்னை வேலைக்கு கூப்பிடுவாங்க...' என்றார்.
குடியின் கோர முகத்துக்கு, கணவனை இழந்தாலும், 50 வயதுக்கு மேல், தன்னம்பிக்கையோடு வண்டி ஓட்ட பழகிக்கொண்ட அந்த அம்மாவை மனதார பாராட்டி, வணங்கி வந்தேன்.
வி.சுபா, சென்னை.
சென்னையில் வாழ ஆயிரம் வழியுண்டு!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வாழ வழியின்றி, சொந்த கிராமத்தை விட்டு, சென்னைக்கு வந்தேன். சென்னை, கொத்தவால் சாவடியில், கை வண்டி இழுக்கும் தொழிலை ஆரம்பித்தேன். படிப்படியாக முன்னேறி, இன்று, சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஓட்டி வருகிறேன்.
சென்னையில், உழைத்து சம்பாதித்த பணத்தில் தான், தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
என் பெற்றோரை, அவர்களது கடைசி காலம் வரை, வசதியாக வைத்து, காப்பாற்றினேன்.
மகனையும், மகளையும் இன்ஜினியராகவும், பள்ளி ஆசிரியராகவும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.
என்னைப் போல், பிழைக்க வழியின்றி, சொந்த ஊரை விட்டு வந்தவர்கள் பலரும், இங்கு வந்த பின், எந்த குறையுமின்றி வாழ்வதை நான் அறிவேன்.
சொந்த ஊரில் எங்களை ஒரு காலத்தில், ஏளனம் செய்தவர்கள், இன்று, மரியாதையுடன் பார்க்கின்றனர்.
சென்னையில் ஏற்பட்ட பஞ்சம், வெள்ளம், புயல், கலவரம் அனைத்தையும் எதிர்கொண்டு சமாளித்து வந்துள்ளேன். அந்த அனுபவங்களை, பேரக் குழந்தைகளுக்கு, கதை கதையாய் சொல்வதில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?
சமீபத்திய, 'கொரோனா' பற்றியும் எதிர் காலத்தில் பேசி மகிழ்வோம் என்பதில் சந்தேகமில்லை.
என்னையும், என் போன்றோரையும் கவுரவமாக வாழ வைக்கும் சென்னைக்கு, என்ன கைமாறு செய்ய போகிறோமோ!
என் காலத்திற்குள், சக ஆட்டோ நண்பர்களுடன் சேர்ந்து, நகரம் முழுக்க, ௧,௦௦௦ மரங்களையாவது நட்டு, பராமரிக்க உறுதி எடுத்துள்ளோம்.
சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள், யாரும் சோடை போனதில்லை என்று, அந்த மரங்கள் சாட்சியாக நிற்கும் அல்லவா!
பி. முருகேசன், சென்னை.