தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுமை முயற்சி!

எங்கள் ஊரில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர், புதுமையான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள், அவர்களின் குடும்பத்திலிருந்து, பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய, 'வாட்ஸ் ஆப்' குழுவை துவக்கியுள்ளனர்.

படிக்கும் இடத்திலும், பணி இடங்களிலும், ஆண்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி, வெட்கப்படாமல் வெளிப்படையாக, அக்குழுவில் பகிர்ந்து கொள்கின்றனர்.

குழுவில் இணைந்திருக்கும் மன நல ஆலோசகர், மாதர் சங்க தலைவி மற்றும் காவல்துறை பெண் அதிகாரி மூலம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை கற்றுக் கொள்கின்றனர்.

வரம்பு மீறி, தொல்லை தருபவர்கள் மீது, தயக்கமின்றி புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கவும் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால், ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதியாக இருக்கின்றனர்.

தோழியரே... உங்கள் ஊரிலும், இப்படியொரு குழுவை உருவாக்கி, 'வாட்ஸ் ஆப்'பை பயனுள்ளதாக மாற்றி, பெண்களுக்கு உதவலாமே!

ஆர். பிரேமா, மதுரை.

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு...

'கொரோனா' தொற்று பரவிக் கொண்டிருந்த, ஊரடங்கு காலத்தில், பொழுது போக்குக்காக நாம் கண்டு ரசித்த, 'ப்ராங்க் வீடியோ' எனப்படும், குறும்பு வீடியோக்கள், இப்போது பெரும் தலைவலியாக மாறி வருகிறது.

'டிவி' சேனலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த குறும்பு வீடியோக்கள், இப்போது,

'யூ டியூப்' சேனல்களில் அதிக அளவில் பெருகியுள்ளது.

சின்ன சின்ன கேலி மற்றும் குறும்புகள் என, நகைச்சுவையோடு வந்த இவ்வகை வீடியோக்கள், இப்போது, ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம், 'ஐ லவ் யூ' சொல்லி அதிர வைப்பது; முன்பின் அறியாதவரின் வீட்டுக்குள் நுழைந்து, 'உன் பொண்ணை எனக்கு தான் கட்டி வைக்கணும்' என வெறுப்பேற்றி, அவர்களது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வது...

அறிமுகம் இல்லாத பெண்களிடம், அதிக உரிமை எடுத்து, கையைத் தொட்டுப் பேசி, அவர்களை நிலைகுலையச் செய்து அழ வைப்பது போன்றவை, மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது.

அதிலும், சமீபத்தில் நான் கண்ட வீடியோவில், நடு ரோட்டில் இரு இளைஞர்களுக்குள் துவங்கும் சண்டையானது முற்றி, துப்பாக்கியை எடுத்து ஒருவரையொருவர் சுட்டுக் கொல்வது போல உள்ளது.

இந்த வீடியோவில், துப்பாக்கி குண்டு வெடிப்பதை, 'ப்ளுடூத் ஸ்பீக்கர்' மூலம், அதிக ஒலியுடன், நிஜ துப்பாக்கி வெடிப்பது போல செய்திருப்பதால், அருகில் நிற்போர், பதறியடித்து ஓடுவதை காண முடிந்தது. பயந்த சுபாவமுள்ளவர்களோ, இதய பலகீனமுள்ளவர்களோ அருகில் இருந்தால், நிச்சயம் பாதிப்படைவர்.

இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதால், பலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, வழியில், யாரும் அடிபட்டுக் கிடந்தால் கூட, 'இதுவும், 'ப்ராங்க்'காக இருக்குமோ, நாமும் ஏமாந்து அவமானப்பட்டு விடுவோமோ...' என, உதவ பயந்து, விலகி விடுகின்றனர்.

எனவே, காமெடி என்ற பெயரில், தனி நபர் சுதந்திரத்தில், அத்துமீறி மூக்கை நுழைக்கும் இதுபோன்ற குறும்பு வீடியோக்களை, அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும்.

ப. ராஜகோபால், மன்னார்குடி.

இவர்களையும் அழைத்து போங்க...

நண்பர் ஒருவரின் மகன், தனியார் பள்ளியில் படித்து வருகிறான். பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இரண்டு நாள் கல்வி சுற்றுலாவுக்கு வழியனுப்பி வைக்க, நண்பருடன் நானும் சென்றிருந்தேன். 50 மாணவர்களுடன், ஐந்து ஆசிரியர்களும் சுற்றுலா சென்றனர்.

அங்கு, இரண்டு இளைஞர்கள் வித்தியாசமான உடையில், பெரிய லக்கேஜுடன் காணப்பட்டனர்.

பேரிடர்கால மீட்பு படையினர் அல்லது பேரிடர் மீட்பு பணி பயிற்சி பெற்றவர்கள் என்பதை உணர்த்தியது, அவர்களது தோற்றம்.

அவ்விருவர் பற்றியும், கல்வி சுற்றுலா ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டேன்.

'இவ்விருவரும், நீங்கள் நினைத்தது போல, மீட்பு படையை சேர்ந்தவர்கள் தான். மலைப் பகுதி மற்றும் நீர் நிலை பகுதிக்கு செல்லும்போது, ஆபத்து ஏற்பட்டால், காப்பாற்றி விடுவர்; முதல் உதவியும் செய்வர். இரண்டு நாட்களுக்கான ஊதியம் வழங்குவோம்...' என்றார், ஒருங்கிணைப்பாளர்.

மாணவ - மாணவியரை சுற்றுலா அழைத்து செல்லும்போது, பாதுகாப்பு கருதி, பள்ளி, கல்லுாரி நிர்வாகம், மீட்பு படை பயிற்சி பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்ல ஆர்வம் காட்ட வேண்டும். சுற்றுலா விபத்துகள், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.

இவர்களை அழைத்துச் செல்வது செலவு என, கருதக்கூடாது; முன்னெச்சரிக்கை நடவடிக்கையே.

கல்வி நிறுவனங்கள், இதை கவனத்தில் கொள்ளலாமே!

எஸ். ராமு, திண்டுக்கல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us