
அக்கம் பக்கத்தாருடன் நட்பு பாராட்டுங்கள்!
அவசர வேலையாக, நானும், என் மனைவியும் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. காலையில், அரசு தேர்வுக்கான பயிற்சி நிலையத்திற்கு சென்ற மகள், மாலை வீடு திரும்புவதற்குள் வந்து விடலாம் என்ற திட்டத்தோடு, அவளிடம் கூறி, வீட்டை பூட்டி புறப்பட்டோம்.
சென்ற வேலை முடிய தாமதமாகியது.
வீட்டின் முன் காத்திருப்பதாக, மொபைல் போனில், மகள் தகவல் கூற, செய்வதறியாமல் பதைத்தோம்.
நல்லவேளையாக, புத்திசாலித்தனமாக செயல்பட்டு மகள், அவள் மொபைல் போனிலிருந்து எங்களை தொடர்பு கொண்டு, பக்கத்து வீட்டு பெண்மணியுடன் பேசச் செய்தாள்.
நாங்கள் வரும் வரை, மகளை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்.
அவரும், அன்போடு ஒப்புக்கொள்ள, பிறகே நிம்மதி வந்தது.
பிள்ளைகளை தனியே விட்டு வெளியூர் செல்லும் பெற்றோர், அவர்களிடம் வீட்டின் மாற்றுச் சாவியை தந்து போக வேண்டும் என்ற பாடத்தை அறிந்து கொண்டோம். ஊர் திரும்பியதும் முதல் வேலையாக, அக்கம் பக்கத்தினருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டோம்.
- த. சிவா, புதுச்சேரி.
மனம் வைத்தால்...
வீட்டுக்கு தேவையான பால், பருப்பு போன்ற அன்றாட பொருட்களை, பக்கத்தில் இருக்கும் கடையில் வாங்குவேன்.
அக்கடையை நடத்தும் முதியவரும், அவரது துணைவியாரும், இனிய சுபாவத்துடன், கேட்கும் பொருட்களை எடுத்து தருவது, 'பிரெஷ்'ஷான பொருட்களை, சரியான சில்லறைகளை, முணுமுணுப்பின்றி தருவர்.
எப்போதுமே, இனிய ஹிந்தி பாடல்கள் கடையில் ஒலித்துக் கொண்டிருக்கும். என்னுடன் தமிழில் பேசினாலும், வட மாநில வாடிக்கையாளர்களுடன் ஹிந்தியில் தான் பேசுவர்.
ஒருநாள், அவர் கையில், 'வாரமலர்' இதழை பார்த்து ஆச்சரியமடைந்து, 'ஹிந்தி மொழிக்காரரான நீங்கள், எப்படி தமிழ் படிக்கிறீர்கள்...' என்றேன்.
சிரித்தபடியே, 'நான், தமிழன் தான். இந்த பகுதியில் கடை வைத்தபோது, வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிப்பதை பார்த்தேன். ஹிந்தி தெரிந்திருந்தால் வியாபாரத்துக்கு உதவும் என்று நினைத்தேன்.
'எனவே, வானொலியில் ஹிந்தி நிகழ்ச்சிகள் கேட்பது, எங்களுக்குள் மற்றும் ஹிந்தி பேசும் வாடிக்கையாளருடன் ஹிந்தியில் பேசுவது என, என் மொழி அறிவை வளர்த்துக் கொண்டேன். இன்று, அவர்களுக்கு சமமாக, ஹிந்தியில் வெளுத்து வாங்குகிறேன்...' என்றார்.
அவரின், முயற்சியை பாராட்டி விட்டு வந்தேன்.
- சாய் ஜயந்த், சென்னை.
இப்படியும் ஒரு பரிகாரம்!
முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது.
'ஜோசியரிடம் ஜாதகத்தை கொடுத்து, திருமணம் எப்போது நடக்கும், பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்டு பார்...' எனக் கூறினர், நண்பர்கள்.
எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அவர்களின் வற்புறுத்தலுக்காக, ஜோசியரிடம் சென்றேன்.
அவர், மேலும் கீழும் கட்டத்தை பார்த்து, '1000 ரூபாய் கொடு...' என்றார்.
தலையெழுத்தே என்று கொடுத்தேன்.
'இன்னொரு நாள் வா... பரிகாரத்திற்கு, 5,000 ரூபாய் ஆகும்...' என்றார்.
'பரிகாரம் என்றால் என்ன செய்யச் சொல்வீர்கள்...' என்றேன்.
'புறாவுக்கு தாலி கட்டினால், தோஷ நிவர்த்தியாகும்...' என்றார்.
எனக்கு 'ஷாக்' ஆகி விட்டது. ஆளை விட்டால் போதும் என்று, 'ஐயா, என் கல்லுாரியிலேயே நுாற்றுக்கணக்கான புறாக்கள் இருக்கிறது. அதுங்க எல்லாத்துக்குமே தாலி கட்டிட்டா போச்சு...' என்று, விடை பெற்றேன்.
இதுவரை அறியாத நுாதன பரிகாரமான இதைச் சொல்ல, 1,000 ரூபாய் தண்டம். அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
- இளந்திரையன்,
சென்னை.