
நண்பரின் நல்லெண்ண முயற்சி!
எங்கள் பகுதியில், புத்தகம், 'கைடு' மற்றும் எழுது பொருட்கள் விற்பனையகம் வைத்திருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். 'கடையில் பகுதி நேரம் பணிபுரிய, கல்லுாரி மாணவ - மாணவியர் இருவர் தேவை; தெரிந்த ஏழை பிள்ளைகள் இருந்தால் கூறுங்கள்...' என்றார்.
பகுதி நேர பணிக்கு, கல்லுாரி மாணவ - மாணவியரை தேர்ந்தெடுக்கும் காரணம் கேட்டேன்.
'உழைத்து, ஊதியம் ஈட்டியபடியே பயிலும் அவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதோடு, குடும்பத்திற்கும் உதவ முடியும். மேலும், வீண் பொழுதுபோக்குகளில் மனதை அலைபாய விடாமல், இங்கிருக்கும் புத்தகங்களை இலவசமாகவே படித்து, அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக முடியும்.
'ஏற்கனவே, இங்கு பகுதி நேரம் பணிபுரிந்த ஆறு மாணவ - மாணவியர், அவ்வாறு படித்து, போட்டி தேர்வெழுதி, அரசு பணிக்கு சென்றுள்ளனர். அதனால் தான், கல்லுாரி மாணவ - மாணவியரை பணிக்கு அமர்த்துகிறேன்...' என்றார்.
தங்கள் தொழிலுக்கு உதவியாக ஆட்களை அமர்த்தி, அடிமை போல, வேலை வாங்குவோர் மத்தியில், வித்தியாசமானவராகவும், மனிதாபிமானியாகவும் விளங்கும் நண்பரின் செயலை மெச்சினேன்.
தெரிந்த, மாணவ - மாணவியரை அனுப்புவதாக உறுதியளித்தேன். மேலும், அவரது நல்லெண்ண முயற்சி தொடர வாழ்த்து கூறி வந்தேன்.
- சி. அருள்மொழி, கோவை.
காலி மனையில், பசுஞ்சோலைகள்...
எங்கள் தெருவில், 10 சென்ட் காலி மனை ஒன்றில், புதர் மண்டி, கருவேல மரங்கள் மட்டுமின்றி, இதர செடிகளும் இருந்தன; இதனால், விஷ பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக இருந்தது.
'காலி மனையை, வீணாக இப்படி போட்டு வைப்பதை விட, மனையின் உரிமையாளரிடம் பேசி, சுத்தப்படுத்தி, வேலி போட்டு வைக்கலாம் அல்லது காய்கறி, கீரை வகைகள், பயனுள்ள செடிகளை நடலாம்.
'அவரவர் சக்திக்கேற்ப உடல் உழைப்பால் பயிர் செய்து, வருகின்ற பலனை பங்கீட்டு அனுபவித்து கொள்வதோடு, இட உரிமையாளருக்கும் அவைகளை கொடுத்து உதவலாம். இடமும், தோட்டம் போல் காட்சியளிக்கும்; உடல் உழைப்பால் நாமும் உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும்...' என்றனர், பகுதி மக்கள். உடனே, மனையின் உரிமையாளரை அணுகினோம்.
'இந்த இடத்தில், நான் வீடு கட்டப் போவதில்லை. முதலீட்டுக்காக தான் வாங்கிப் போட்டுள்ளேன். சும்மா கிடக்கும் இடத்தை, பயனுள்ளதாய் மாற்றி அமைத்துக் கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...' என்றார்.
தற்போது, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, காய்கறி மற்றும் கீரை வகைகளை விளைவித்ததன் மூலம், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, நானும் பயன்பெறுகிறேன். வாசகர்களே... உங்கள் பகுதியில், காலி மனைகள் இருந்தால், முறைப்படி உரிமையாளரிடம் பேசி, பசுஞ்சோலைகளாக மாற்றி, நீங்களும் பயன் பெறுங்கள்!
— கே. ஜெகதீசன், கோவை.
வேலியே பயிரை மேயலாமா?
சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு, கோவையில் வசிக்கும் மகள் குடும்பத்தினரை பார்க்க, எழும்பூரில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.
இரவு, 10:00 மணிக்கு ரயில் கிளம்பியது. டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் துாங்கலாம் என்று காத்திருந்தேன். நேரம் ஆக ஆக, எங்கள் பெட்டியில் ஒவ்வொருவராக துாங்கத் துவங்கினர். நானும் பொறுமையிழந்து, விளக்கை அணைத்து, படுத்து விட்டேன்.
நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை போய் திரும்பும்போது, கண்ட காட்சி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இளம்பெண் ஒருவர், மார்பு சேலை விலகியது தெரியாமல், 'லோயர் பர்த்'தில், அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்ததை, கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தார், டி.டி.ஆர்., என்னை பார்த்ததும், சட்டென்று சுதாரித்து, 'எல்லாரும் டிக்கெட் காட்டுங்க...' என்றார்.
அகாலத்தில் எழுப்புவதால், ஆழ்ந்த துாக்கம் பறிபோவதோடு, நேரம் கடந்து, டி.டி.ஆர்., தங்கள் பணியை செய்ய முற்படுவது, வேலியே பயிரை தாண்டுவது போல் உள்ளது.
இவர்களை போன்ற, 'ஜொள் மன்னர்'களை பொறுப்புள்ள பதவியில் அமர்த்தும் முன், ரயில்வே நிர்வாகம், தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
- சி. ரகுபதி, திருவண்ணாமலை.