தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனிமையே, போ போ...

ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை நடத்துகிறார், என் தோழர்.

அங்கு, உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி என கிடைத்தாலும், அவர்களின் தனிமை, பெரும் சவாலாகவே இருந்தது.

தனிமையால், அவர்களது கசப்பான கடந்த கால நினைவுகளை அசைப் போட்டதில், மனநிலையும், உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதை மாற்ற நினைத்த தோழர், முதியவர்களை அணுகி, அவர்களின் விருப்பத்துடன், அவரவருக்கு தெரிந்த கைத்தொழிலை அறிந்து, அதில் ஈடுபட வைத்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உதாரணமாக, தையல் தொழில், பனை ஓலை விசிறி செய்தல், கூடை முடைதல், பழங்கால சமையல் கற்பித்தல், பூ மாலை கட்டுதல், கம்பங் கூழ், கேழ்வரகு கூழ் தயாரித்து விற்பனை, மசாலா பொருட்கள் தயார் செய்தல், காய்கறி தோட்டம் அமைத்தல் என, பல வகையான கைத்தொழில்களை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செய்து வருகின்றனர், முதியவர்கள்.

இதனால், அவர்கள், தற்சமயம் தனிமையிலிருந்து விடுபட்டு, சுறுசுறுப்புடனும், மன நிம்மதியுடனும் காணப்படுகின்றனர்.

உறவினர்களால் கைவிடப்பட்டு, தன் மீதே சுய மதிப்பு குறைந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு, பிறரை சார்ந்திருந்த முதியவர்களை, தன் சொந்த காலில் நிற்க வைத்த தோழரை பாராட்டி வந்தேன்.

- கே. கணேஷ், கடலுார்.

தொழில் தர்மத்தை மீறலாமா?

சமீபத்தில், மாலை வேளையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த என், 5 வயது மகனின் காலில் அடிப்பட்டது. அதற்காக, மருந்து வாங்க, 'மெடிக்கல் ஷாப்' சென்றேன்.

'கொரோனா' இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தமிழக அரசு, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனால், மளிகைக் கடை உட்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

மருந்தகம் செயல்படலாம் என்பதால், அது திறந்திருந்தது. நான், அங்கு சென்ற போது, சிலர், பிஸ்கட், சோப், முட்டை போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த நபரிடம் விசாரித்தபோது, 'ஞாயிறு ஊரடங்கு என்பதால், 'மெடிக்கல் ஷாப்'பில், மளிகை வியாபாரம் நல்லா நடக்குதுங்க... விலையும் கொஞ்சம் கூட்டி விற்பதால், அதிக லாபம் கிடைக்குது...' என்றார்.

'இந்த கொரோனா காலத்திலும், எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க...' என நொந்தபடியே, வீட்டிற்கு திரும்பினேன்.

- சி.கலாதம்பி, பட்டுக்கோட்டை.

உழைக்க தயாரா?

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிபெண், வேலைக்கு வர முடியவில்லை என்று, இளம் வயது பெண்ணை வேலைக்கு அனுப்பியிருந்தாள். அப்பெண், திருத்தமாக உடை அணிந்து வந்திருந்தாள்.

'நீ, படித்திருக்கிறாயா...' என்று கேட்டேன்.

'நான், பி.பி.ஏ., படித்திருக்கிறேன்...' என்றாள், அப்பெண்.

ஆச்சரியத்துடன், 'ஏன்மா இந்த வேலைக்கு வந்திருக்கிறாய்...' என்று கேட்டேன்.

'இதற்கு முன், ரத்தப் பரிசோதனை செய்யும், 'லேப்'பில் இருந்தேன். இப்போ, 'கொரோனா'வால், 'லேபரட்டரி'யை மூடி விட்டனர். அங்கு, நாள் பூரா வேலை செய்தால், மாதம், 10 ஆயிரம் ரூபாய் தான் கொடுப்பர். இப்போது, நான்கு வீடுகளில் வேலை செய்கிறேன். மாதம், 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

'மேலும், இதில் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டாம்; ஓய்வும் கிடைக்கிறது. படிப்பு என்பது அறிவு வளர்ச்சிக்கு. ஆனால், உழைத்தால் தான் காசு கிடைக்கிறது. எந்த வேலை செய்தால் என்னம்மா... 'திருடக் கூடாது; பொய் சொல்லக் கூடாது; பிச்சை எடுக்க கூடாது'ன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க.

'படித்ததால், நாட்டு நடப்பு தெரிகிறது. என் மகனுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடிகிறது. படிப்புக்கும், உழைப்புக்கும் சம்பந்தமில்லை. படித்தவர்களுக்கெல்லாம் அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால், நடக்குமா... உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் அவ்வளவு தான்...' என்று சொல்லி, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அவளை நினைத்து, எனக்கு பெருமையாக இருந்தது.

மரகதம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us