தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்ல சிந்தனை!

சமீபத்தில், புதிதாக தொழில் துவங்கிய உறவினரை சந்திக்கச் சென்றேன். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், அவர். அவரைப் போலவே ஓய்வு பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து, நகரத்தின் முக்கிய சாலையில், வாடகைக்கு இடம் பிடித்து, 'மெஸ்' ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

அவரிடம், 'பணி ஓய்வுக்கு பிறகு, வீட்டில் நிம்மதியாக பொழுதைக் கழிப்பதை விட்டு விட்டு, இப்படி சிரமப்பட வேண்டுமா?' என்றேன்.

அதற்கு, 'பணி ஓய்வு கிடைத்து விட்டது என்பதற்காக, தெம்பாக இருக்கும் உடம்புக்கு ஓய்வு தருவது தவறு. மேலும், எந்த வேலையுமின்றி சும்மாவே வீட்டில் இருப்பது நோய்களுக்கு இடம் கொடுக்கும். தினமும் பலரோடு பழக வாய்ப்புள்ள, இது போன்ற தொழிலில் ஈடுபடுவதால் மனமும், உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.

'மேலும், ஓய்வூதியம் அனைத்தையும், வட்டிக்காக வங்கியில், 'பிக்செட் டிபாசிட்' செய்வது மற்றும் 'ரிஸ்க்'கான முதலீடுகளில் ஈடுபடுவதை விடவும், ஆர்வமுள்ள ஏதேனும் தொழிலில் போட்டு, வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் உருவானது தான், இந்தத் தொழில்...' என்றார்.

அவரோடு பேசி புறப்படும் போது தான், கல்லாவின் பின்புற சுவரில் மாட்டப்பட்டிருந்த, அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான, 'வாரன் பபெட்'டின் படத்தை கவனித்தேன். அப்படத்தின் அடியில், 'பணத்தை உங்களுக்காக வேலை செய்ய பழக்குங்கள். சேமிப்பதற்காக சேமிக்காதீர்கள்; முதலீட்டிற்காக சேமியுங்கள்' என்ற, அவரது பொன்மொழியும் எழுதப்பட்டிருந்தது.

உறவினரை சந்திக்கச் சென்று, வாழ்க்கைக்கு தேவையான நல்ல சிந்தனையோடு திரும்பினேன்.

-எஸ்.விஜயன், கடலுார்.

மூத்தோரிடம் பேசினால்...

சமீபத்தில் உறவினரின் வீட்டுக்கு, மனைவியுடன் சென்றிருந்தேன்.

உறவினர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். மனைவி மட்டும் உறவினரின் வயதான அம்மாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பும் வழியில், 'உறவினர் வீட்டு பாட்டியிடம், வெகுநேரம் அப்படி என்ன பேசினாய்?' என்று, மனைவியிடம் கேட்டேன்.

'விருந்தினராக உறவினர் வீடுகளுக்கு செல்லும் பலரும், அவ்வீட்டு பெரியவர்களிடம் கலந்துரையாடுவதை தவிர்க்கின்றனர். ஆனால், மூத்தோரிடம் உரையாடுவது எவ்வளவு உபயோகமானது என்பதை மறந்து விடுகின்றனர். நாம் அவர்களுடன் பேசுவதால், முதலில், யாரும் தம்மோடு பேசுவதில்லை என்ற, மூத்த குடிமக்களின் தனிமைத் துயர் போகும்.

'அடுத்து, அனுபவமிக்கவர்களிடம் இருந்து, குடும்ப நிர்வாகம், வரவு - செலவு மேலாண்மை, கை வைத்தியம் போன்ற நமக்கு தேவையான பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. சிலசமயம், நம் பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும்...' என்றார்.

மனைவியின் சாமர்த்தியமான செயலை மெச்சினேன்.

பல அரிய அனுபவ தகவல்களின் பெட்டகமாக திகழும், மூத்தோரிடம் மனம் விட்டு பேசுங்கள். அது, அவர்களை மகிழ்விப்பதோடு, நமக்கும் பலனளிக்கும்.

- ஆர்.செந்தில்குமார், மதுரை.

நண்பரின் நல்லெண்ணம்!

எங்கள் உறவினர், வசதியானவர். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்தினார். வீட்டிலிருந்து பெண்ணை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும்போது, நாட்டுப்புற கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வை ரசித்து பார்த்தனர், ஊர் மக்கள். சிறிய திருவிழா நடப்பது போல் இருந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்டேன்.

'நாட்டுப்புற கலைகளை மறந்து வருகின்றனர், நம் மக்கள். இன்றைய தலைமுறையினரும், இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களும் வாழ வேண்டும்; நாட்டுப்புற கலையும் வளர வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாட்டை செய்தேன்...' என்றார்.

- ஏ.சையத், நெல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us