PUBLISHED ON : ஜூலை 03, 2011

தோழி செய்ய சொன்ன பூஜை ஏற்பாடு!
சென்னையில் வசிக்கும் என் தோழியிடமிருந்து, போன் வந்தது. தன் மகள், இந்த ஆண்டு, பிளஸ் 2 செல்வதாகவும், அவள், அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, என் மகளுக்கு செய்த பூஜையை, அவளது மகளுக்கு செய்ய வேண்டும் என்றும், அதற்கு எவ்வளவு செலவானாலும், பராவாயில்லை என்றும் கூறினாள். என் மகளின் படிப்புக்காக, எந்த ஒரு பூஜையோ, யாகமோ நான் செய்யவில்லை என்பதால், குழம்பி, அவளிடமே விவரம் கேட்டேன்.
'உன் பொண்ணு, சரியாவே படிக்காமல் இருந்ததாகவும், வாரிய பூஜைக்குப் பிறகு நன்றாக படித்து, 1,086 மார்க் எடுத்திருப்பதாகவும் கூறினாயே...' என, என் தோழி சொல்லவும், குபீரென சிரித்து விட்டேன்; ஏனென்றால், அது, வாரிய பூஜை அல்ல; வாரியல் பூஜை!
என் பொண்ணு, சரியாகப் படிக்காமல், மொபைல் போன், 'டிவி' என்று பொழுதை கழித்ததால், துடைப்பத்தால், நாலு சாத்து சாத்தி, படிக்க வைத்தேன். இதைத்தான், ஒருமுறை சென்னையிலிருந்து, போன் செய்த என் தோழியிடம், எங்கள் ஊர் நெல்லை சொல் வழக்கில், 'ஏளா... இவ எப்ப பாரு போனுல பழக்கம் உட்டுகிட்டு படிக்கதே இல்ல. ஒருநா நல்லா வாரிய பூசை போட்டேன். அதோட, போன தூக்கிப் போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சா... இப்ப, 1,086 மார்க் எடுத்திருக்கால்லா...' என்று கூறினேன்; அதை, ஏதோ ஆன்மிகப் பூஜை என நினைத்து விட்டாள் தோழி!
நான் விவரத்தைச் சொல்லவும், தோழி சிரித்து விட்டாள். சொல் வழக்கால் ஏற்பட்ட தமாஷைப் பார்த்தீர்களா?
குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் துடைப்பத்தை, 'வாரியல்' என்பர்.
— ஆர். இசக்கியம்மாள், தென்காசி.
காசு கொடுத்து சூனியம் வைத்துக் கொள்வரா!
சமீபத்தில், உறவினர் ஒருவரின் இல்லத் திருமணத் திற்கு சென்றேன். வரவேற் பவர்கள் நாகரிகம் கருதி, ஆளுக்கு ஒரு கைக்குட்டை கொடுத்தனர். அதில், மண மகன், மணமகளின் பெயர் கள் அட்டகாசமாக அச்சடிக்கப் பட்டிருந்தன.
ஆனால், முகம் துடைப்பதற்கு மட்டுமே பயன்படும் கைக்குட்டையில், மண மக்களின் பெயர் இருப்பது அருவருப்பாக தோன்றியது.
இதை அடுத்து, உணவுக் கூடத்துக்கு வந்தால், அங்கு அப்பளம் முதல், 'வாட்டர் கப்' வரை, மணமக்களின் பெயர் களை முத்திரை பதித்துள்ள னர். அப்பளம் நொறுக்கப் படப் போகிறது... 'கப்'கள் குப்பைக் கூடைக்கு செல்லப் போகின்றன. இதில், இவர் களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை. பணம் செலவழித்து, அசிங்கத்தை தேடிக் கொள்பவர்கள், வரும் காலங்களில் மணமக்கள், அனைவரின் மனங்களில் நிலைக்க, டைரி, புத்தகம், மரக்கன்று போன்றவற்றை கொடுத்தால், நன்றாக இருக்கும். செய்வரா?
— குரு.ஜெயராம் ராஜா, விருதுநகர்.
'சீ'தனம்!
சமீபத்தில், திருமணமான, என் சிநேகிதியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவரும், மனைவியும் தங்களுக்கு சீதனமாய் வந்த சாமான்களை, பரணில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
'பரவாயில்லையே... ஏகப்பட்ட பொருட்கள் சீர்வரிசையாக வந்துள்ளதே...' என்றதற்கு, அவளும் பெருமையோடு, 'ஆமாம்... என் அம்மாவுக்கு வந்தது. அதனோட கூடுதலாகவே வாங்கி எனக்கும் கொடுத்துள்ளனர்...' என்றாள்.
'இவ்வளவு சாமான்களையும், எப்போது பயன்படுத்துவீர்கள்?' எனக் கேட்டதற்கு, 'இதையெல்லாம் எப்போதும் பயன்படுத்த மாட்டோம். வாங்கிய காலத்திலிருந்தே, மூன்றாண்டுக்கு ஒருமுறை, கீழே இறக்கி, கழுவி, துடைத்து பரணிலேயே வைத்து விடுவோம்...' என்றாள்.
கேட்கவே வியப்பாக இருந்தது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் அறை சாமான்களை விடுத்து, அத்யாவசியம், அவசியம் இல்லாத, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, ஏன் வீணடிக்க வேண்டும்? இடத்தை அடைத்து, பொருட்கள் இருப்பதில் யாருக்கு லாபம்?
நாம் பயன்படுத்தாத பொருளை, பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதும் நமக்கு சுமைதானே! அதற்கு பதிலாக, நமக்கு எதிர்காலத்தில் தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுத்து, கணிசமான பணத்தை, மகள்களின் பெயரில், வங்கியில் போட்டால், வரும் காலங்களில் வளமோடு வாழலாம் என்று, தாய்மார்கள் எண்ணி செயல்பட வேண்டும்.
இப்படி செய்வதால், களவு பயமும் இல்லை; வீடும் சுத்தமாக, சுகாதாரமாக இருக்கும்; சிந்திப்பரா?
— ஜெ.சரஸ்வதி, விருதுநகர்.
