PUBLISHED ON : ஜூலை 10, 2011

தண்ணீரில் தவித்த தோழி!
தோழியின் குடும்பத்தினரும், என் குடும்பத்தினரும் சேர்ந்து, 'தீம் பார்க்' ஒன்றில் விடுமுறையைக் கழிக்கச் சென்றோம். ராட்சஷ ராட்டினம், அதிவிரைவு தொடர்வண்டி, பிரமாண்ட ஊஞ்சல் போன்ற விளையாட்டுகளை முடித்து, நீச்சல் குளம், செயற்கை அருவி, நீர்சறுக்கு போன்ற தண்ணீர் விளையாட்டுப் பகுதிக்கு வந்தோம்.
தண்ணீரைக் கண்ட உற்சாகத்தில், எல்லாரும் அதில் இறங்கினோம். நனைந்த பிறகு தான், தோழியை கவனித்தேன். வெண்ணிற காட்டன் துணியில், டிசைன் போட்ட சுடிதார் அணிந்திருந்த அவளது உடை முழுவதும் நனைந்து, உடலோடு ஒட்டி, அவள் அணிந்திருந்த உள்ளாடைகள் அப்பட்டமாகத் தெரிந்தது.
அங்கிருந்த, 'ஜொள்'ளன்களின் பார்வை, இந்தக் கவர்ச்சிக் காட்சியை மேய, அதை உணர்ந்த தோழி, கூனிக் குறுகிப் போனாள். துப்பட்டாவும் நனைந்து உடலோடு ஒட்டி, அவளால் போர்த்தி மறைக்கவும் முடியவில்லை.
தண்ணீர் விளையாட்டு எதையும், 'என்ஜாய்' பண்ண இயலாமல், கழுத்தளவு தண்ணீரிலேயே கடைசி வரை அமிழ்ந்து இருந்துவிட்டு, வெளியேறினாள் தோழி.
தண்ணீர் விளையாட்டு, அருவி போன்ற வற்றிற்குச் செல்லும் பெண்கள், திக்கான துணியிலான வண்ண உடை அணிந்து செல்வது, இது போன்ற சங்கடங்களை தவிர்க்க உதவும்.
—எம்.சில்வியா சாமுவேல், மதுரை.
ஆபாச ஒளிபரப்புகள் வேண்டாமே!
இப்போதெல்லாம் பொது இடங்களில், குறிப்பாக, மருத்துவமனைகளின் வரவேற் பறையில், அதிகமாக நாம், 'டிவி'யை பார்க்க முடிகிறது. அவைகளில், இசை சேனல்கள் மட்டும் அதிகம் ஒளிபரப்புகின்றனர். இம்மாதிரி இடங்களில், பொதுமக்கள் தம் குழந்தைகளுடன் அதிக நேரம் அமர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பல பாடல்களில், ஆபாசமான உடையும், நடன அசைவுகளும் வருகின்றன. இது, அங்கு இருக்கும் சிலரை தவிர, அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு பதிலாக, எல்லாரையும் கவரும் விதமாக, நகைச்சுவை மற்றும், 'கார்ட்டூன்' சேனல்களை வைக்கலாம். 'வாய் விட்டு சிரித்தால், நோயும் விட்டுப் போகும்!' அனைவரும் இதை பின்பற்றலாமே!
— பொ.சுமதி, கோவை.
சபாஷ் சரியான சூடு!
சமீபத்தில், என் உறவுக்கார பெண், தன் தாயிடம், 'என் மாமியார், 'தொண, தொண'ன்னு, தன் பிறந்த வீட்டு மற்றும் புகுந்த வீட்டு கதைகளைச் சொல்லி, சொல்லியே போரடிக்கிறார்...' என, அலுத்துக் கொண்டாள். உடனே, அந்தப் பெண்ணின் தாயார், 'டிவி' சீரியல் ஒண்ணு விடாமல் பார்க்கிறீயே... அது மட்டும் போரடிக்காதா? ஒரே கதையை பல தலைப்புகளில், பல வருடங்களாக ஜவ்வா இழுக்கிறான். அதை மட்டும் ஆர்வமாக உட்கார்ந்து பார்க்கிற...
'மாமியார் பழைய கதையைச் சொல்லும் போது, நிறைய அனுபவங்களும், அவர்கள் சந்தித்த வெற்றி, தோல்விகளும், அதை சமாளித்த விதமும், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை நமக்கு விளக்கும் ஒரு அனுபவப் பாடம்...' என, அழகாக எடுத்துக் கூறினார். மாமியார் பற்றி சொன்னவுடன், மகளுக்கு சாதகமாக பேசுவார் என நினைத்தேன். விதிவிலக்காக, மகளின் சீரியல் பார்க்கும் படலத்தை விட, மாமியாரின் புராணம் ஒன்றும் தப்பல்ல என்பதை உணர்த்தினார் இந்த தாய்.
பெண்களே... சீரியலில் ஒரு மாதம், 'கரன்ட் கட்' ஆகியும் கூட, அடுத்த மாதம் பார்க்கும் போது, கதை, கடுகளவு கூட நகராமல் போகிறது. அந்தக் கதையை விட, உங்கள் மாமியார் கூறும் அனுபவக் கதை, அறுவை அல்ல என்பதை, சீரியல் பார்க்கும் பெண்கள் உணர வேண்டும்.
— பி.ஜெனிபா, சென்னை.
