PUBLISHED ON : ஜூலை 17, 2011

தோழி செய்த, 'பிரா' தானம்!
தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள், ஒரு பிளாஸ்டிக் பையில், நிறைய ப்ராக்களை மடித்து வைத்திருந்தாள். எல்லாமே பயன்படுத்தப்பட்ட, பழைய ப்ராக்கள். எதற்காக, இவற்றை தனியாக எடுத்து வைத்திருக்கிறாள் என குழம்பிய நான், அவளிடம் கேட்டேன். 'எல்லாமே நான் பயன்படுத்தி, எலாஸ்டிக் லூசான ப்ராக்கள். அவற்றை வேலைக்காரிக்கு கொடுப்பதற்காக, தனியே எடுத்து வைத்திருக்கிறேன். அவள் காசு கொடுத்து ப்ரா வாங்குவதில்லை. பெரும்பாலான நாட்கள், ப்ரா அணியாமல், வெறும் ஜாக்கெட்டுடன் வேலைக்கு வந்து விடுகிறாள்.
'அதுபோன்ற சமயங்களில், அவள் குனிந்து, நிமிரும் போது, பார்ப்பதற்கு சற்று விரசமாக இருக்கிறது. அதனாலேயே, நான் உபயோகித்து கழிக்கும் ப்ராக்களை, அவளுக்கு இலவசமாகக் கொடுத்து விடுகிறேன்...' என்றாள். இதைக் கேட்டதும், எனக்கு அருவருப்பாக இருந்தது. 'உபயோகித்த புடவையை கொடுப்பது கூட பரவாயில்லை; ஆனால், இதுபோல பயன்படுத்திய உள்ளாடைகளை வேலைக்காரிக்குத் தருவது, சுகாதாரமானதோ, ஆரோக்கியமானதோ அல்ல...' என எடுத்துக் கூறி, 'இதற்குப் பதில், மலிவு விலை உள்ளாடைகளை வாங்கி, புதிதாகவே வேலைக்காரிக்குக் கொடு...' என, அறிவுறுத்தினேன். என் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தோழியும், அதை ஏற்றுக் கொண்டாள்.
வாசகிகளே... உபயோகித்த உள்ளாடைகளை, வேலைக்காரிக்குக் கொடுக்கும் பழக்கம் உங்களுக்கும் இருந்தால், உடனே விட்டு விடுங்கள்.
— எல்.ஆரோக்கியமேரி, புதுச்சேரி.
உறவைப் பிரித்த பணம்!
எட்டு ஆண்டுகளுக்கு முன், என் மைத்துனரின் பெயரில், காலி மனை ஒன்று இருந்தது. வியாபாரத்திற்காக, அதை விற்று, பணமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அச்சமயம், 'சொத்தை யாருக்கோ விற்பதை விட, மச்சான் உங்களுக்கு விற்பது எனக்கு திருப்தியாக இருக்கும். உங்களுக்கு வசதி இருந்தால், என் மனையை நீங்களே வாங்கிக்கோங்களேன்...' என்று, என்னிடம் முறையிட்டார்.
என் கையில் ரொக்கம் இருந்ததால், நில தரகர் மூலம், அன்றைய நாளில், மனை மதிப்பை அறிந்து, அதை விட சென்ட் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் கூடுதலாக கொடுத்து, கிரையம் செய்து கொண்டேன். அதற்கு பின், நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதை அனைவரும் அறிவர். அதாவது, அந்த காலி மனை இன்றைய நிலையில், பத்து மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதை தாங்கி கொள்ள முடியாமல், 'அநியாயமாய் என் சொத்தை அடிமாட்டு விலைக்கு மச்சான் வாங்கிட்டார்...' என்று, கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் சொல்லித் திரிகிறார் என் மைத்துனர். இதனால், பகை உருவாகி, என் குடும்பத்திற்கும், அவர் குடும்பத்திற்கும் போக்குவரத்து அடியோடு நின்று விட்டது.
மனையின் மதிப்பு உயர்ந்ததற்கு நானா பொறுப்பு? இதுவே, அதன் மதிப்பு குறைந்திருந்தால், 'அன்று கூடுதல் விலைக்கு நீங்கள் விற்று விட்டீர்களே...' என்று நான் கேட்டால், அவர் மனம் எவ்வளவு சங்கடப்படும்? பணத்திற்கு, உறவுகளை பிரிக்கும் சக்தி உண்டு என்பதால், தயவு செய்து, சொந்த பந்தத்திற்குள் வியாபார சம்பந்தமான சகவாசங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
— ஜக்கி, கோவை.
மனிதாபிமான உதவி!
உறவினர் ஒருவர், தன் குடும்பத்தோடு என் வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களுடைய துணிகளை, எங்கள் வீட்டு பணிப்பெண் தினசரி துவைத்து, உலர்த்தி மற்ற பணிவிடைகளையும் செய்தாள். இந்த அதிக வேலைகளால், பணிப்பெண் கோபித்துக் கொள்ளப் போகிறாளே என்ற பயம் எங்களுக்குள் இருந்தது. இரண்டாவது நாள், பணிப் பெண்ணின் குடும்ப விவரங்களை, என் உறவினர் கேட்டறிந்தார். மறுநாள் அவளுடைய, இரண்டு குழந்தைகளுக்கும், ஆடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவைகளை வாங்கி வந்து, அவளிடம் கொடுக்க சொன்னார்.
அதை பெற்றுக் கொண்ட அவள், 'அவுங்களை இன்னும் கொஞ்ச நாட்கள் தங்கிட்டு போகச் சொல்லுங்க...' என்று சந்தோஷமாக சொன்னாள். அவர்கள் கிளம்பும் அன்று, அந்த பணிப்பெண்ணுக்கு, இரு நூறு ரூபாய் கொடுத்தவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். 'விருந்தினர்கள் வந்துட்டாங்கன்னு லீவு போடாமல், வேலை செய்த பணிப்பெண்ணை ஊக்குவிக்கணும். நாங்க இங்க வசதியா தங்கினோம்ன்னா, அதுக்கு அவங்களும் ஒரு காரணம். நம்ம பளுவை பகிர்ந்துகிட்ட அவங்களிடம், நம்ம வசதியை ஓரளவாவது பகிர்ந்துகிட்டா மனது திருப்தியா இருக்கும். அதோடு, எளியவர்களுக்கு உதவி செய்த சந்தோஷத்தையும் பெறலாம்...' என்ற அவருடைய அறிவுரை, பின்பற்றக் கூடியதாக இருந்தது. வெளியூருக்கு சென்று, உறவினர்கள் வீட்டில் தங்க நேர்ந்தால், அங்கு வேலை செய்பவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் பழக்கத்தை, நானும் ஏற்படுத்திக் கொண்டேன்.
— எஸ்.ராமன், சென்னை.
