
சமூக அக்கறையுடன் வருமானம்!
பிளவுஸ் தைக்க, டெய்லர் கடைக்கு போயிருந்தேன். டெய்லரிடம், 'தம்பி, உங்க கடையில விழுந்த வெட்டுத் துணிகள் இருந்தா எனக்கு தருகிறீர்களா...' என கேட்டார், வயதான அம்மா ஒருவர்.
'எதுக்கும்மா?' என்றார், டெய்லர்.
'எங்க வீட்டுக்கு பக்கத்துல, பால் பாக்கெட் கடை ஒண்ணு இருக்கு. அவர்கள், பாலை பையில் போட்டு தருவதில்லை. நிறைய பேர், பை இல்லாம வருவாங்க. அவ்வழியே, 'வாக்கிங்' போறவங்களும், பால் பாக்கெட் வாங்கிட்டு போவாங்க.
'ஒரு பாக்கெட்டுக்கு மேல வாங்குறவங்க, பை இல்லாம சிரமப்படறாங்க. என்னிடம் இருந்த வெட்டுத் துணிகளை எல்லாம், 'ஜாயின்' பண்ணி, கொஞ்சம் பைகள் தைத்து கொடுத்தேன். மீண்டும் வந்து பை வேணும்ன்னு கேட்கறாங்க.
'உங்களிடம் வீணாகும் வெட்டு துணிகள் கிடைத்தால், தைத்துக் கொடுப்பேன். எனக்கும் வருமானம் வரும். பிளாஸ்டிக் ஒழிப்புக்கும் உதவுற மாதிரி இருக்கும்...' என்று தயங்கியபடி, தான் தைத்த பை ஒன்றை எடுத்து காண்பித்தார்.
'ரொம்ப சந்தோஷம்; இந்தாங்க...' என்று, ஒரு சாக்கு நிறைய இருந்த, 'வேஸ்ட்' துணிகளை எடுத்து கொடுத்து, 'நீங்க காட்டின அளவில் நிறைய பைகள் தைக்கலாம். வெட்டு துணிகள் நிறைய இருக்கு...' என்றார், டெய்லர்.
வயதான காலத்தில், சும்மா பொழுதை கழிக்காமல், வருமானம் பார்க்கும் அவரது சமூக அக்கறையை, டெய்லரும், நானும் பாராட்டினோம்.
- டி. தெய்வானை, திருப்பூர்.
கண்ணாடி வளையலை இப்படி கொடுக்கலாம்!
பக்கத்து வீட்டு பெண்ணிற்கு, வளைகாப்பு விழா நடைபெற்றது. குழந்தை உண்டாகியுள்ள பெண்ணிற்கு, கை நிறைய வளையல்கள் அணிவித்தனர். விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும், கண்ணாடி வளையல்கள் கொடுத்தனர். எப்படி தெரியுமா?
கண்ணாடி வளையல்களை பல அளவுகளில் வாங்கி, அளவு வரிசைப்படி நான்கு நான்கு வளையல்களாக பாலிதீன் கவர்களில் வைத்திருந்தனர். அவரவர் கை அளவுகளுக்கு ஏற்றவாறு கொடுத்ததோடு அல்லாமல், கண்ணாடி வளையல்களை வெந்நீரில் போட்டு எடுத்தால், எளிதில் உடையாது என்று, குறிப்பும் கொடுத்தனர். சிறுமியருக்கு, மெட்டல் வளையல்களை கொடுத்தனர்.
பயன்பெறத் தக்க வளையல்கள் கொடுத்ததை, பெண்கள் அனைவரும் பாராட்டினர்.
- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
மூதாட்டிகளே உஷார்!
வேலைக்கு செல்லும் வழியில், எனக்கு நன்கு தெரிந்த மூதாட்டி ஒருவரை, யதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. 'என்ன பாட்டி, இந்த பக்கம்...' என்றேன்.
தன்னுடன் வந்த நபரை சுட்டிக்காட்டி, 'இவரு, என் வீட்டுக்காரரோட ஒன்னா வேலை பார்த்தவராம். என் வீட்டுக்காரர் பெயரில், பி.எப்., பணம் இருக்காம். நேர்ல வந்து கையெழுத்துப் போட்டு வாங்கிக்க சொன்னாங்களாம். ஆபீசுக்கு அழைச்சிட்டு போறாரு...' என்றார்.
'உங்க வீட்டுக்காரர் வேலை பார்த்த ஆபீஸ் இங்க கிடையாதே. அதுவுமில்லாம, உங்க வீட்டுக்காரர் வேலை பார்த்த ஆபீஸ்ல, இ.எஸ்.ஐ., - பி.எப்., போன்ற சலுகைகள் ஏதும் கிடையாதே...' என்றேன். உடனே சுதாரித்த அந்த நபர், நைசாக நழுவினான்.
பாட்டியிடம், 'பார்த்தீங்களா, 'பார்ட்டி' கம்பி நீட்டிடுச்சு. உங்க கழுத்துல, காதுல இருக்கிற நகையை, 'ஆட்டைய' போட, பொய் சொல்லி, உங்களை அழைச்சிட்டு போறான். இது தெரியாம, நீங்களும் ஊர், பேர் தெரியாதவனை நம்பி போறீங்களே...' என்றேன்.
உண்மை அறிந்த பாட்டி, நெகிழ்ச்சியுடன், 'நான் எவ்ளோ பெரிய சதி வலையில் மாட்ட இருந்தேம்மா. கடவுள் மாதிரி வந்து என்னையும், என் நகைகளையும் காப்பாற்றிட்டே...' என்றார்.
வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளே, எப்போதும் விழிப்புடனும், ஜாக்கிரதையாகவும் இருங்கள்.
- பி. அனுமந்த்ரா, கோவூர், சென்னை.

