
முயற்சி இருந்தால் சாதிக்கலாம்!
சொந்தமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த, என் தங்கையின் கணவர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்டார். கல்லுாரி இறுதி ஆண்டு படிக்கும் மகள், 10ம் வகுப்பு படிக்கும் மகன், மருத்துவம் மற்றும் வீட்டு செலவு என, அனைத்தையும் சமாளிக்க முடியாமல், குடும்பமே கவலையில் மூழ்கியது. கொடுத்து உதவும் நிலையில், உறவுகளுக்கும் வசதியில்லை.
இரண்டு நாட்கள், அப்பாவின் நண்பர்கள் உதவியுடன், ஆட்டோ ஓட்ட பழகினாள், மூத்த மகள். மூன்றாம் நாள், தானே ஆட்டோ ஓட்டி, வருமானம் ஈட்ட துவங்கி விட்டாள். பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று, பெற்றோர்களிடம், 'பெண் பிள்ளைகளுக்கு பெண் ஓட்டுனர்' என்று, 'நோட்டீஸ்' கொடுத்து, அவர்களை தன் வசம் இழுத்தாள்.
பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல், தன்னைப் போல கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்தாள். வங்கியில் கடன் பெற்று, ஐந்து ஆட்டோக்களை வாங்கி, பள்ளி சவாரியை ஓட்ட வைத்தாள்.
பெண் ஓட்டுனர்களுக்கு சம்பளம் கொடுப்பதுடன், ஆட்டோ வாங்கிய மாத தவணையையும் செலுத்தி வருகிறாள். அவளுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. கல்லுாரி பேராசிரியர்களின் துணையோடு, 'ஆன்லைனில்' சிறப்பு வகுப்பு மூலம் பயின்று. நல்ல மதிப்பெண் பெற்று, கல்லுாரி படிப்பையும் முடித்தாள்.
வளாக நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்று, நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டாள். வங்கியின் மூலம் கடன் பெற்று, தான் வேலை செய்யும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்ல தேவையான கார்களை வாங்கினாள். நம்பிக்கையான மூன்று பெண் ஓட்டுனர்களை பணியமர்த்தி, தற்போது வானளாவ உயர்ந்து நிற்கிறாள்.
கணவர் படுத்து விட்டார், பெண் பிள்ளையை கட்டி கொடுத்து விடலாம் என்று இல்லாமல், மகளின் முயற்சிக்கு உறுதுணையாக நின்ற என் சகோதரியை நினைத்து, பெருமை படாத நாட்களே இல்லை.
உழைத்து சம்பாதிக்கும் எந்த வேலையும் கேவலமானது இல்லை என்பதை, மனதில் கொள்ளுங்கள் பெண்களே!
- ஜே.பரத் குமார், கோவை.
மனங்களை நேசிப்போம்!
என் வீட்டருகே உள்ள தோழியின் வீட்டிலிருந்து, காலை நேரத்தில் பள்ளி செல்லும் அவளது எட்டு வயது மகளின் அலறல் சத்தத்தோடு, அழுகுரல் கேட்டது. விசாரித்ததில், பள்ளி செல்லும்போது, தந்தையின் அறிவுரைப்படி, தன் நெற்றியில் பொட்டு வைத்துள்ளாள், அச்சிறுமி.
இதைக் கண்ட என் தோழி, உடனே பொட்டை அழித்ததோடு, 'இனி, பொட்டு வைப்பாயா...' என, மகளை திட்டி, கன்னத்தில் அறைந்துள்ளார். தோழியும், அவளது கணவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
மகளின் எதிரிலேயே மதச்சடங்கு சம்பந்தமாக சண்டையிட்டுக் கொள்வது சரியா? தங்களின் மத வேறுபாட்டை மகள் முன் காட்டாமல், தனியாக மனம் விட்டு பேசியிருந்தால் மகிழ்ச்சி கிடைத்திருக்கும். இந்த மன நிலையில், பள்ளி செல்லும் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் வருமா?
எல்லா மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றே. மதங்கள் வேறுபடலாம். ஆனால், மனங்கள் ஒன்றுபட்டால் இல்வாழ்வு இனிதாகும். எந்த குழந்தையும் பிறக்கும்போதே நெற்றியில் திருநீரோடும், கழுத்தில் சிலுவையோடும் பிறப்பதில்லை. சிந்தித்து செயல்பட வேண்டும்.
— மா. செண்பகம், மதுரை.
சந்தோஷ வாழ்வு!
மனைவியை இழந்த என் நண்பர், மருமகளுக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார். 70 வயதுக்கு மேல் அமைதியாக, சந்தோஷமாக வாழ்வது எப்படி என்பதை, கடந்த ஒரு வாரத்தில் அவர் மூலம் கற்றுக் கொண்டேன்.
காலை, 6:00 மணிக்கு எழுந்து, மொபைல் போனில், விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டவாறு, 'வாக்கிங்' சென்று, வீட்டிற்கு தேவையான பால் வாங்கி வருவார். மருமகள் துாங்கி எழ தாமதமானால், பால் காய்ச்சி காபி குடிப்பார். 8:30க்கு குளித்து, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, வரும் வழியில் உள்ள கடையில், இட்லி சாப்பிட்டு, வீட்டிற்கு தேவையான காய்கறி, கீரையை வாங்கி வருவார்.
பின், மருமகளுக்கு துணையாக காய்கறி நறுக்கி கொடுத்து, பேப்பர் படிப்பார். அதன்பின், வார இதழ்களுக்கு துணுக்கு, கட்டுரை எழுதி, 11:00 மணிக்கு தபாலில் அனுப்பிய பின், மதியம் சாப்பிட்டு குட்டி துாக்கம் போடுவார்.
இரவு, 7:00 மணிக்கு, அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு, 'தினம் ஒரு திருக்குறள்' சொல்லி, விளக்கவுரை வகுப்பு நடத்துவார். 'டிவி' சீரியல்களை பார்க்க மாட்டார். சொற்பொழிவு, பஜனை என்றால் தவறாமல் போவார். அவரை பார்த்து, பணி ஓய்வுபெற்ற நானும், அவைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளேன்.
- எம்.டி. கிருஷ்ணன், சென்னை.