
இரவு நேர பயணத்தை தவிர்க்கலாமே!
உறவினர் வீட்டிற்கு சென்று, நானும், மனைவியும், இரவு, 9:00 மணிக்கு காரில் திரும்பினோம். அந்த ஊரிலிருந்து நெடுஞ்சாலையை அடைய, 8 கி.மீ., துாரம் இருந்தது. அதிகம் போக்குவரத்து இல்லாத சாலையில் வந்த போது, சாலையின் இடது ஓரம், யாரோ ஒருவர் விழுந்து கிடந்து, கையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது.
அந்த ஆளைக் கடந்ததும், வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்.
'ஆள் அரவமில்லா இந்த ரோட்டுல, நமக்கு எதுக்கு வம்பு; வண்டியை நிறுத்த வேண்டாம், கிளம்புங்கள்...' என்றாள், மனைவி.
'மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவனுக்கு தெரிஞ்சவங்க யாருன்னு கேட்டு, விஷயத்தை சொல்லிட்டு நாம கிளம்பிடலாம்...' என்று, வண்டியை பின்னோக்கி செலுத்தினேன்.
ஏறக்குறைய அந்த ஆளை நெருங்கிய நேரம், ஓரத்திலிருந்து இரண்டு, மூன்று பேர் வருவதை கவனித்து, 'வண்டியை நிறுத்தாதீங்க. வேகமா ஓட்டுங்க...' என்று கத்தினாள், மனைவி.
சுதாரித்து, சட்டென, 'கியரை' மாற்றி வேகமாக கிளப்பினேன். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச துாரம் சென்ற பிறகு, சில கற்கள் சாலையில் விழும் சத்தம் கேட்டது. நல்லவேளை, கார் மேல் விழவில்லை.
மரண பயத்தில் வண்டியை விரட்ட, 10 நிமிடத்தில் நெடுஞ்சாலையை அடைந்த பிறகே, நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
ஒரு ஆள், விழுந்து கிடப்பது போல், 'செட் - அப்' செய்து, வழிப்பறி செய்வது அந்த சாலையில் அவ்வப்போது நடப்பதை, பின்பு தெரிந்து கொண்டேன்.
போக்குவரத்து குறைவாக உள்ள கிராமத்து சாலையில், இரவு நேர பயணத்தை தவிர்த்திடுங்கள். ஒருவேளை நிர்ப்பந்தம் காரணமாக பயணிக்க நேர்ந்தால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தாதீர்கள்!
- பூவை சுபாவாணன், கோயம்புத்துார்.
மரம் கொடுத்த நெகிழ்ச்சி!
நண்பனின் இல்ல வளைகாப்பு விழாவுக்கு சென்றிருந்தேன். விழாவுக்கு வந்தவர்களிடம் நண்பனின் தந்தை, 'இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் மகள் திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு, மரக்கன்று பரிசாக கொடுத்தேன். இப்போது, மகளின் வளைகாப்பு விழாவிற்கு அழைக்க, உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருந்தேன்.
'பல உறவினர்கள், 'உங்க மகள் திருமணத்தின் போது, நீங்க கொடுத்த மரக்கன்றை, நன்றாக பராமரித்து மரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறோம்...' என, சந்தோஷமாக கூறினர். அந்த வார்த்தைகளை கேட்டு, மனம் நிறைந்து போனது.
'நான் வேறு பரிசு கொடுத்திருந்தால், அது இந்த அளவுக்கு பயன்பட்டு இருக்குமா என தெரியவில்லை. மரம் வளர்ப்பது மண்ணுக்கு நாம் செய்யும் மரியாதை என கருதுகிறேன்...' என, நெஞ்சம் நெகிழ பேசினார்.
பரிசு கொடுப்பது முக்கியமல்ல, என்ன பரிசு கொடுக்கிறோம், அது எப்படி பயன்படுகிறது என்பது தானே முக்கியம்.
எ.கே. சஞ்சீவிநாதன், ஈரோடு.
'செகண்ட் ஹேண்ட்' வண்டி வாங்கப் போகிறீர்களா?
இரு சக்கர வாகனம் வாங்க விரும்பினார், நண்பர். தனக்குத் தெரிந்தவரிடம், மிக குறைந்த விலையில் இரு சக்கர வாகனம் ஒன்று இருப்பதை அறிந்து, அவரை தொடர்பு கொண்டார். அவர், 20 ஆயிரம் ரூபாய் பெற்று, தன் இரு சக்கர வாகனத்தை, விற்று விட்டார்.
மிகக் குறைந்த விலையில் இரு சக்கர வாகனம் வாங்கிய மகிழ்ச்சியில் இருந்தார், நண்பர். சில நாட்களுக்கு பின், வண்டியை ஆர்.டி.ஓ., ஆபிசில் பெயர் மாற்றம் செய்ய, ஆர்.சி., புத்தகத்தை எடுத்துச் சென்றபோது, அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
'செகண்ட் ஹேண்டில்' நண்பர் வாங்கிய வண்டி, பலமுறை, வாகன விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அபராத தொகை மட்டும், 20 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது.
அபராத தொகையை உடனே கட்டினால் தான், பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று கூறி விட்டனர், ஆர்.டி.ஓ., ஆபிசில்.
வண்டியை விற்றவர் வேறு ஊருக்குப் போய் விட்டார். அவருடன் போனில் பேசிய போது, 'வியாபாரம் முடிந்து விட்டது. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை...' என்று, கூறி விட்டார்.
வேறு வழியின்றி, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி, வண்டியை தனதாக்கிக் கொண்டார், நண்பர்.'செகண்ட் ஹேண்ட்' வாகனம் வாங்குபவர்கள், அபராதம் எதாவது பாக்கி இருக்கிறதா என்று, 'எம்பரீவேகன்' போன்ற, 'ஆப்'களிலாவது சரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், காலணா சுமைக்கு, எட்டணா சுமைக்கூலி தர வேண்டியிருக்கும்.
- பா. சிவானந்தம், திருச்சி.
பணமா, பாதுகாப்பா?
நானும், நண்பர்கள் சிலரும், டிராவல்ஸ் மூலம் கார், 'புக்' செய்து, சுற்றுலா கிளம்பினோம். எதிர்பார்த்தபடியே திறமையான டிரைவர் அமைய, எங்கள் பயணம் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தது.
முதல் நாள் இரவு, நண்பர்கள் அனைவரும் தங்க, ஹோட்டலில் அறை, 'புக்' செய்தோம். எங்களுடன் வந்த டிரைவர் ஓய்வெடுக்க, ஹோட்டலில் ஏதாவது வசதி இருக்குமா என விசாரித்ததில், இல்லை என்றனர்.
உடனே, 'சிங்கிள்' அறை ஒன்றை, 'புக்' செய்து, சாவியை டிரைவரிடம் கொடுத்து, 'நன்றாக ஓய்வெடுங்கள். எதாவது தேவையிருந்தால், என்னை அழையுங்கள்...' என்றார், நண்பர். 'ஏன்டா... டிரைவர், ரெகுலரா, 'டூர்' வர்றவர் தானே... அவருக்கு காரில் படுத்து, 'ரெஸ்ட்' எடுத்தே பழக்கம் இருக்கும். அவருக்குன்னு தனியா அறை, 'புக்' பண்ணிட்டியே...' என்றேன்.
'ஹோட்டல் அறைக்கு, 500 ரூபா செலவாகி இருக்குமா... டிரைவர் நல்லா துாங்கி ஓய்வெடுத்தா தானே, கவனமா வண்டியை ஓட்டுவார்; நம் உயிருக்கும் பாதுகாப்பு. இந்த மாதிரி விஷயங்களில், பணம் செலவாகுதேன்னு பார்க்கக் கூடாது. நாம பாதுகாப்பா பயணம் பண்றோமேன்னு சந்தோஷப்படணும்...' என்றார், நண்பர்.
இதுவும் சரிதான் என்று, நண்பனை பாராட்டினேன்.
கோபி சம்பத், சேலம்.