PUBLISHED ON : ஏப் 16, 2023

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கலாமா?
எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா நடந்தது. அங்கு வைத்திருந்த, 'பிளக்ஸ் போர்டில்' 10 வயது சிறுவன், கசாப்பு கடைக்காரர் பயன்படுத்தும் அரிவாளுடன், ரத்தம் சொட்ட சொட்ட, சட்டை மற்றும் முகம் முழுவதும் ரத்தம் தோய்த்து இருப்பது போல, ரவுடியின் தோரணையில், 'போஸ்' கொடுத்திருந்தான்.
குழந்தையின் பிஞ்சு நெஞ்சில், இதுபோன்ற நஞ்சை விதைக்க, பெற்றோருக்கு எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை. பிஞ்சில் பழுக்கிற பழம் இனிக்காது என்பதை அனைவரும் அறிவர். அச்சிறுவனின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும், இந்த செயல் தவறாகவோ, செய்யக் கூடாத செயலை செய்த குற்ற உணர்வோ இல்லாதது, எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து கேட்டேன். 'இதிலென்ன இருக்கிறது. எங்கள் ஊரில் இதெல்லாம் சகஜம். இவ்வாறு, 'பிளக்ஸ் போர்டு' வைப்பது, 'கெத்து' மற்றும் 'மாஸ்' ஆக இருக்கும். இப்படி வைத்தால் தானே நீங்க எல்லாரும் பார்க்கிறீர்கள்...' என்றார். இதை கேட்டதும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இப்படி வளர்ப்பது, பிற்காலத்தில் குழந்தைகளை எங்கே கொண்டு போய் நிறுத்துமோ என்ற அச்சமே மனதில் மேலோங்கியது. இதுபோன்ற, 'பிளக்ஸ் போர்டு'களை வைத்து, பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்காமல், இளம் தலைமுறையினரை நல்வழிபடுத்த முயலுங்கள், பெற்றோரே!
ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி.
பாட்டியின் புத்திசாலித்தனம்!
வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பம், எங்கள் தெருவில் உள்ள வீட்டில் குடியேறினர். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி, அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளை அமர வைத்து, கதை, பாட்டு சொல்லி அசத்தினார்.
பாட்டியின் கதை மற்றும் பாட்டில் மயங்கிய பல குழந்தைகள், 'கதை கேட்க, பாட்டி வீட்டுக்கு போகணும்...' என்று, அடம் பிடித்தனர். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் என, சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டால், வைத்தியம் செய்து குணப்படுத்துவார். குழந்தைகள், மலஜலம் கழித்து விட்டால், முகம் சுளிக்காமல் அவரே சுத்தம் செய்வார்.
மழலை செல்வங்களை பராமரிக்கும் அத்தனை தகுதிகளுடன் இருந்த பாட்டி, தன் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன், முழு நேர தொழிலாக இதை மாற்றிக் கொண்டார். வீட்டில் பெரியவர்கள் இல்லாத குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவியர் பலரும், தங்கள் குழந்தைகளை, பாட்டியிடம் விட்டு விட்டு, நிம்மதியாக வேலைக்கு செல்ல துவங்கினர்.
இதற்கிடையே, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி விடும் பணிக்கு யாராவது அழைத்தால், அதையும் செய்வார், பாட்டி. வயதான காலத்தில், எவரையும் சார்ந்து வாழாமல், தன் திறமையால் உழைத்து வரும் பாட்டி, வித்தியாசமான வராகவும், வழிகாட்டியாகவும் திகழ்வதாக கூறுகின்றனர், அக்குடும்பத்தினர்.
- பாலா சரவணன், சென்னை.
நூதன திருட்டு!
'சமீபத்தில், அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த பைக்கை காணாமல் திணறி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தேன்...' என்றார், நண்பர். உடனே, 'ரயில் நிலைய இரு சக்கர பார்க்கிங்கில் உன் பைக் இருக்கிறதா என, நிதானமாக தேடிப்பார்...' என்றேன், நான்.
பார்க்கிங்கில் உள்ள ஆயிரக்கணக்கான பைக்குகளுக்கு இடையே தேட, அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதை மொபைலில் படம் பிடித்து, காவல்நிலைய அதிகாரிகளிடம் காட்டினார்.
பைக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று, விசாரித்து, இரண்டு நாளில் நண்பரிடம் ஒப்படைத்தனர், போலீசார். இரு சக்கர வாகன திருடர்கள், அருகில் இருக்கும் ரயில்வே பார்க்கிங்கில், திருட்டு வாகனத்தை நிறுத்தி, 'திரும்பி வர ஒரு வாரம் ஆகும்...' என்று கூறிச் செல்வர். ஒரு வாரத்துக்கு பின், பரபரப்பு ஓய்ந்த பின், வண்டியை எடுத்துச் சென்று விடுவர்.
வாகனங்கள் திருட்டு போனால், முதலில் தேட வேண்டிய இடம், அந்த ஏரியாவில் உள்ள பார்க்கிங் பகுதியை தான். வாகன திருடர்கள், இப்படியெல்லாம் நுாதனமாக சிந்திப்பர். நாம தான், உஷாரா இருக்கணும்!
— டி. வெற்றிச்செல்வன், கோவை.
