
தக்கார், தகவிலர்!
சமீபத்தில், நான் வேலை செய்யும் மயானத்துக்கு, தகனம் செய்ய, கோடீஸ்வரர் ஒருவரின் சவம், வேனில் கொண்டு வரப்பட்டது. உடன் இறந்தவரின் இரண்டு மகன்களைத் தவிர, வேறு ஈ, காக்கா இல்லை. அதிலும் ஒரு மகன், வேனை விட்டுக் கீழே இறங்கவே இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, நூற்றுக்கணக்கானோர் சூழ, பிரமாண்டமான பல்லக்கில், ஒருவரின் சவம் கொண்டு வரப்பட்டது. அக்கூட்டத்தில் ஒருவரிடம், 'யாருப்பா இது... கட்சிக்காரரா?' என்று கேட்டேன்.
'அதெல்லாம் இல்ல... எங்களுடன் பிளாட்பாரத்தில் கடை போட்டு வியாபாரம் பார்த்தவர்; திடீர்ன்னு இறந்துட்டாரு. அதான், கடைகளுக்கு இன்று லீவு விட்டு, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, அடக்கம் செய்ய வந்திருக்கோம். எங்களோட ஒண்ணு மண்ணாப் பழகி, வியாபாரம் செய்தவர்; இனிமே பார்க்கவா போறோம்... பழகின பழக்கத்துக்கு இது கூட செய்யலேன்னா எப்படி?' என்றார் அவர்.
கோடீஸ்வரரையும், பிளாட்பாரக் கடை வியாபாரியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். 'தக்கார், தகவிலர்' எனத் துவங்கும் திருக்குறள் தான் ஞாபகத்துக்கு வந்தது.
— மாநகர மயானமொன்றில் பணிபுரியும், கல்வியறிவு இல்லாத சிவஞானம் என்பவர் சொல்லக் கேட்டு எழுதியவர், கே.கார்த்திகேயன், சென்னை.
கண்டுபிடிப்பாரா?
கார் முதல், மொபைல் போன் வரை, எல்லா உபகரணங்களும், நேரடி மின்சார தொடர்பு இல்லாமல், பேட்டரி மூலம் இயங்குகின்றன; ஆனால், இஸ்திரி பெட்டி மட்டும், நேரடி மின்சார தொடர்பு மூலம் இயங்கும் வகையில் உள்ளது.
இஸ்திரி பெட்டி மின்சாரத்தால் இயங்கும் போது, மின் கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட் போன்ற காரணங்களால், பெட்டியை உபயோகிப்பவர், மின் தாக்குதலில் சிக்கும் அபாயம் உள்ளது. இஸ்திரி போடும் போது, பல முறை எனக்கும், 'ஷாக்' அடித்துள்ளது.
புதிது, புதிதாக எதை, எதையோ கண்டுபிடிப்பவர்கள், பேட்டரி மூலம் சார்ஜ் செய்து, இஸ்திரி போடும்படி, இஸ்திரி பெட்டியை கண்டுபிடிக்க முன் வருவரா?
— ஜெயா அய்யர், சென்னை.
ஞாயிறு சிறுவர் நூலகம்!
கடந்த வாரம் ஞாயிறன்று, ஓய்வு பெற்ற தமிழாசிரியரான என் நண்பரைப் பார்க்கச் சென்றேன். அவர் வீட்டின் முன்பகுதியில் மாணவர்களோடு சேர்ந்து, அவரும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
விசாரித்த போது, 'ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் படிப்பதற்காக, ஒரு நூலகம் ஏற்படுத்தியுள்ளேன். இதனால், மாணவர்கள், 'டிவி' பார்ப்பது குறைவதோடு, புத்தகங்களைப் படித்து அறிவு பெறுவர்...' என்றார்.
இது மாதிரி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் செய்தால், மாணவ - மாணவியருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைவர்; நேரமும் உபயோகமாக செலவாகும்!
— ஆர்.நாராயணசாமி, கோவை.
தலைக்கவசமா, கொலையின் அம்சமா?
ஒருநாள், டிராபிக் நிறைந்த ரோட்டில், பைக்கில் சென்று கொண்டிருந் தேன். எனக்கு முன்னும், பின்னும் ஏராளமான வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து வந்தன.
திடீரென எனக்கு முன்னால் சென்ற பைக்கிலிருந்து, ஹெல்மெட் ஒன்று, ரோட்டில் விழுந்து உருண்டோடியது. முன்பே கவனித்த நான், உஷாராகி ஓரமாக ஓட்டி தப்பித்தேன். கவனிக்காத பலர், கன்ட்ரோல் பண்ண முடியாமல் தடுமாறினர்.
அப்போது ஒரு பைக், ஹெல்மெட்டின் மீது ஏறி, தடுமாறி கீழே விழ, பின்னால் வந்த கார் பைக்கின் மீது ஏறி, பைக்கையும், ஓட்டியவரையும் பதம் பார்த்தது. வேகம் சீராக இருந்ததால், பைக் பலத்த சேதமானாலும், உயிர் தப்பியது.
ஹெல்மெட்டை தவற விட்டவரோ, ஒரு பந்தா பேர்வழி போல... அவர், ஹெல்மெட்டை தலையில் மாட்டாமல், பெட்ரோல் டாங்க் மீது வைத்து ஓட்டியதால் வந்த விளைவு தான் இது.
ஹெல்மெட் என்பது, உயிர் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சாதனம். இதை, பலர் தலையில் மாட்டாமல், பெட்ரோல் டாங்க் மீதும், கண்ணாடி ஸ்டாண்டிலும் மாட்டியபடி செல்கின்றனர். இவ்வாறு செய்வதால், ரோட்டில் செல்லும் மற்றவர்கள் மாட்டிக் கொண்டு அவதிப்படுகின்றனர்.
தயவு செய்து அடுத்தவரின் உயிரோடு விளையாடாதீர்கள்.
— வே.விநாயகமூர்த்தி, சென்னை.