
இது, 'சிக்கிம்' சிக்கல்!
பணி நிமித்தமாக சிக்கிம் மாநிலத்திலுள்ள கேங்டாக் சென்று திரும்பிய போது, அலுவலக சகா ஒருவர், பான்பராக் போட்டு, சிகரெட்டும் புகைத்துக் கொண்டிருந்தார். 'என்னடா இது புது பழக்கம்; சிகரெட் மட்டும்தானா பிடிப்பே?' என, வினவினேன்.
'வயிற்றெரிச்சலை ஏன் மாப்ளே கேக்குறே? பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாதுங்கறதை அங்கே ரொம்ப சின்சியரா, 'பாலோ' பண்றாங்கப்பா. அப்படி புகை பிடிக்கிறவங்களைப் பிடிச்சு, அபராதம் வசூலிக்க தனி ஸ்குவாடே தெருவுல சுத்திக்கிட்டு இருக்கு.
'பைன் எவ்ளோ தெரியுமா? அம்பதோ, நூறோ இல்லை; 5,000 ரூபாய். டூரிஸ்ட்டுன்னோ, வெளியூர் ஆசாமின்னோ கருணையே காட்டுறதில்லை...' என்றான் சோகமாக. 'அது சரி... நல்ல விஷயம்தானே!' என்றேன்.
'நல்லா சொன்னே போ... அங்க லோக்கல் ஆசாமிங்க இதை எப்படி சமாளிக் குறாங்கன்னு பார்த்தேன். எல்லாரும், 'பான்பராக்' போட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் போட்டுக்கிட்டு சமாளிச்சேன்; இப்போ நிறுத்த முடியலை. பான்பராக் போட்டு, சிகரெட்டும் பிடிக்குறேன்...' என்றான் பரிதாபமாக.
விதிகளை இறுக்க வேண்டிய இடத்தில் இறுக்கி, தளர்த்த வேண்டிய இடத்தில் தளர்த்தாவிட்டால், விபரீதத்தில்தான் வந்து முடியும் என்பதை, நண்பனின் அனுபவம் உணர்த்தியது.
— ஆர்.கோதண்டம், சென்னை.
செய்யும் தொழிலே தெய்வம்!
பட்டப்படிப்பை முடித்த நான், சுய தொழிலாக, சிகை அலங்கரிக்கும், சலூன் ஒன்றை நடத்தி வருகிறேன். ஒரு நாள் காதில் மொபைல் போனோடு கடைக்கு வந்த ஒருவர், 'ஹேர்கட்டிங்' என்று சைகையாலேயே கேட்டார். கைவேலை முடியும் வரை காத்திருக்குமாறு, நானும் சைகையிலேயே கூறினேன்; காத்திருந்தார்.
கைவேலை முடிந்து, அவருக்கு முடி திருத்த ஆயத்தமான போதும், அவரது மொபைல் பேச்சு நீடித்துக் கொண்டிருந்தது. நான் அடுத்த கஸ்டமரை கவனிக்கலானேன். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறு வாடிக்கையாளர்களை நான் பணி முடித்து அனுப்பியும், அவர் காதிலிருந்த மொபைல் போன், ஒரு மி.மீ., கூட விலகவே இல்லை.
அதற்குள் காலம், இரண்டு மணி நேரத்தை முழுங்கி இருந்தது. ஒரு வழியாக மொபைல் பேச்சை முடித்து, ஆவேசமாக எழுந்து வந்து, 'ஏன்யா... நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டிருக்கேன். எனக்கு முடி வெட்டாம, யார் யாருக்கோ முடி வெட்டிட்டிருக்கே?' என்று எகிறினார்.
'சாரி சார்... நான் செய்யுற தொழிலை தெய்வமா மதிக்கிறவன். உங்களுக்கு முடி வெட்டணும்ன்னா, நான், ஆறு கஸ்டமரை இழந்து இருக்கணும்; அதைவிட, உங்க ஒரு கஸ்டமரை இழந்தா பரவாயில்லை. என்னால், உங்களுக்கு முடி வெட்ட முடியாது. வேற சலூன்ல வெட்டிக்குங்க. அங்க போகும் போது கூட, ஞாபகமா மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டுப் போங்க...' எனக் கூறி, வழியனுப்பி வைத்தேன்.பந்தா பார்ட்டிகள் திருந்துவரா?
— த.மணிவண்ணன், மந்தைவெளி.
வயதானவர்கள் செய்யக் கூடாத காரியமா?
என் பிள்ளை, மருமகள், குழந்தைகள் அலுவலகம், பள்ளி சென்ற பிறகு, நான் வேலைகளை எல்லாம் முடித்து, ஓய்வாக இருக்கும் மதிய நேரம், செய்தித் தாளில் வெளிவரும், சுடேகு, எண் விளையாட்டு என்று போடுவேன். மறுநாள் அதன் விடையைச் சரி பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. வாரமலர் இதழில் வரும் குறுக்கெழுத்தையும் போடுவேன். போட்டிக்கு அனுப்புவதில்லை என்றாலும், நான் போடும் விடைகள் சரியாகவே இருக்கும்.
தவிர, வார, மாத புத்தகங்கள், ஆன்மிக புத்தகங்கள் படிப்பேன். சில மாதங்களுக்கு முன், உறவுப் பெண் ஒருவர், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.
நான், சுடேகு போடுவதைப் பார்த்து, 'உன் மாமியாருக்கு என்ன சிறுவயசுக்காரின்னு நினைப்பா? பெரிய மேதாவியாட்டம், சுடேகு போட்டுக்கொண்டிருக்கிறாளே...' என, என் மருமகளிடம் இன்னும் ஏதேதோ சொல்லி, வார்த்தையால் சாடியிருக்கிறாள்.
வயதானவர்கள் இதையெல் லாம் போடக் கூடாது என்று எதாவது சட்டமா அல்லது செய்யக் கூடாத காரியமா? அன்றாட வேலைகளை முடித்து, ஓய்வாக இருக்கும் போது, இதைச் செய் கிறேன். இதில், யாருக்கு என்ன இடைஞ்சல்? அப்பெண் மணி சொன்னது, எனக்கு மன வேதனையைத் தந்தது.
சுடேகு, எண் விளையாட்டு என்பது, மூளைக்கு வேலை தரும் புதிர் விளையாட்டு, இந்த வயதில் இதைப் போட்டுப் பார்ப்பது, என் போன்ற வயதானவர்களின் ஞாபக சக்திக்கு ஒரு பயிற்சி.
தயவு செய்து, என் போன் றோர், இதுபோன்று ஏதாவது செய்தால், ஊக்கப்படுத்த வேண் டாம்; இகழாமல் இருந்தால் போதும்.
— ஆர்.சந்திரா, புதுச்சேரி.