PUBLISHED ON : டிச 04, 2011

சமச்சீர் உணவு!
நெருங்கிய தோழியை சந்திக்க, அவள் வீட்டுக்கு சென்றேன். அவள், தன் மகள் எல்.கே.ஜி., படிக்கும் தனியார் பள்ளிக்கு, நிர்வாகம் வரச் சொன்னதன் பேரில் கிளம்பிக் கொண்டிருந்தாள்; அவளுடன் நானும் செல்ல நேர்ந்தது.
அங்கு தோழியிடம், 'உங்கள் பெண்ணுக்கு நேற்று மதியம் சாப்பிட என்ன உணவு கொடுத்து அனுப்பினீர்கள்?' என்று கேட்டார் நிர்வாகி. 'பூரி' என்றாள் என் தோழி. 'நாங்கள், தினப்படி என்ன உணவு கொடுத்தனுப்ப வேண்டும் என்று அட்டவணை கொடுத்துள்ளோம்; அதை, ஏன் நீங்கள் பின்பற்றவில்லை...' என, கண்டிப்புடன் கேட்டார்.
'அட்டவணைப்படி, எல்லா குழந்தைகளும், ஒரே மாதிரியான உணவான தயிர் சாதம் கொண்டு வந்த போது, உங்க பெண் மட்டும் நேற்று பூரி கொண்டு வந்து சாப்பிட்டிருக்கிறாள்; அதை, மற்ற குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்தனர். சில குழந்தைகள் பூரியை பார்த்து தானும் சாப்பிட அடம் பிடிக்கும். பெரும்பாலான குழந்தைகள், தான் சாப்பிடுவதை தவிர்த்து, மற்ற குழந்தைகள் சாப்பிடுவதைத்தான் விரும்பும்.
'இதற்காகத்தான் யூனிபார்ம் போல, அட்டவணைப்படி உணவு கொடுத்தனுப்பும்படி ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு ஏனைய பெற்றோரும் முழு ஒத்துழைப்பு தரும் போது, நீங்களும், ஒத்துழைப்பு தந்து உதவுங்கள்...' எனக் கேட்டுக் கொண்டார்.
அந்த அட்டவணையை பார்த்தேன். அதில், திங்கள் முதல், வெள்ளி வரை தயிர்சாதம், எலுமிச்சம் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, கீரை சாதம் மற்றும் இடைவேளையின் போது சாப்பிட வேக வைத்த வேர்க்கடலை, பேரிச்சம் பழம், சுண்டல், கேரட், வாழைப்பழம் என, ஐந்து நாட்கள், தினம் ஒரு வகையாக பட்டியல் இடப்பட்டிருந்தது.
இதில் தோழி சொன்ன கூடுதல் தகவல், அவள் குழந்தை வீட்டில் கீரை சாதம், கேரட் சாப்பிடவே மாட்டாளாம். பள்ளிக்கு சென்ற பின் மிச்சமின்றி சாப்பிடுகிறாளாம்.
பள்ளியின் அணுகுமுறை பெற்றோருக்கு சற்று சிரமம் என்றாலும், குழந்தைகளின் நிலையை உணர்ந்து, சமச்சீர் உணவு முறையை, மற்ற பள்ளிகளும் (ப்ரி கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி.,) கடைபிடிக்கலாமே!
— எஸ்.கமலா, புதுச்சேரி.
இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்!
சிறு விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியிருந்த எங்கள் அலுவலக உதவியாளரைப் பார்க்கச் சென்றிருந்தோம். உதவியாளர், அவரது மனைவி, மூத்த மகன், இளைய மகள் என நான்கு பேரும் காயங்களுக்கு கட்டு போட்டுக் கொண்டு படுத்திருந்தனர்.
என்ன நடந்தது என விசாரித்தேன்.
குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க கிளம்பியிருக்கின்றனர். ஆட்டோ கட்டணத்தை மிச்சப்படுத்த, தன் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது மகளையும், தனக்குப் பின் மகனையும், அதற்கடுத்து மனைவியையும் அமர வைத்து ஓட்டிச் சென்றிருக்கிறார். ஒரு திருப்பத்தில் பேலன்ஸ் தவறி பைக் சரிய, நால்வரும் கீழே விழுந்து, விபத்து ஏற்பட்டிருக்கிறது. மகளின் வலது கால், பைக் அடியில் சிக்கியதால், கடுமையான எலும்பு முறிவு. மனைவிக்கு தலையில் அடி. நண்பருக்கு பாதத்தில் காயம், இடுப்பிலும் அடி. எல்லாருக்கும் சிராய்ப்பு என, பெரும் பாதிப்பு.
எண்பது ரூபாய் ஆட்டோ கட்டணத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என கிளம்பி, எக்கச் சக்க மருத்துவ செலவு வைத்து விட்டார் அவர்.
இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய பைக்கில், இப்படி குடும்பமே பயணம் செய்வது சரிதானா?
பைக் பயணத்தின் போது, இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம்!
— எம்.ஜக்கரியா, சென்னை.
ஆசிரியரின் முன் யோசனை!
என் மாமா, சேலத்தில், பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். அவர் வயது, 80-ஐ நெருங்குகிறது. சென்னை, பெங்களூரு, சேலம், நாமக்கல், வேலூர் என்று, அவரின், ஐந்து மகன்களின் வீட்டிலும், சுழற்சி முறையில் காலம் கழிப்பவர்.
சமீபத்தில், சேலம் போஸ்ட் ஆபீசுக்கு அவர் சென்ற போது, மாரடைப்பு ஏற்பட்டு, மயக்கமாகி விழுந்து விட்டார். அங்கு இருந்தவர்கள், யார், என்னவென்று தெரியாமல், பதறிப் போய், இவர் மொபைல் போனில் உள்ள நம்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அதில், முதலில் உள்ள நம்பரே, சேலத்திலேயே வசிக்கும் அவர் மகன் வெங்கடேஷின் நம்பராக அமைந்து விட்டதால், உடனே தகவல் கிடைத்து, மருத்துவ மனை யில் சேர்த்து, பிழைத்துக் கொண்டார்.
இதில், ஆச்சரியம் என்ன வென்றால், இவர் மொபைல் போனில், 'வி' என்று ஆங்கில எழுத்தில் ஆரம்ப மாகும், 'வெங்கடேஷ்' என்ற பெயர், எப்படி முதல் பெயராக இருந்தது என்பது தான். என் மாமாவே, இதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்தார்...
'நான், அடிக்கடி வெவ்வேறு ஊருக்கு செல்பவன். எந்த ஊருக்கு போகிறேனோ, அந்த ஊரில் இருக்கும் என் மகன், மருமகள் மொபைல் நம்பர்களை முதலில் வருமாறு, 'ஆசை வெங்கடேஷ், ஆசை வசந்தி...' என, பதிவு செய்து வைப்பேன். இதனால், அவர்களின் பெயர்கள், என் மொபைல் போனின், 'கான்டாக்டில்' முதல் பெயராக வந்து விடும்.
'இதை, அந்தந்த ஊருக்கு போகும் போது, அங்கங்கே இருக்கும் மகன், மருமகள் பெயராக மாத்தி, பதிவு செய்து கொள்வேன். இதனால், என் மொபைல் போனில், முதல் கான்டாக்ட் நம்பர், அந்தந்த ஊரில் இருக்கும் மகனின் பெயராக அமையும். அப்படி செய்ததுதான், இது மாதிரி ஆபத்து வரும் போது, சமயத்திலே என்னை காப்பாற் றியது...' என்று சொன்னார்.
இதை கேட்டு, நல்ல ஆசிரியர் தான் என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஆசிரி யர் சொன்ன பாடம், எல் லாரும் பின்பற்ற வேண் டியதாக தோன்று கிறது தானே!
— எஸ்.கார்த்திகேயன், சென்னை.
