
ஜூலை 30 ஆடித் தபசு
தவம், தபஸ் என்ற சொற்கள், தியானத்தைக் குறிப்பவை. தியானம் செய்வதன் நோக்கம், மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என்பதுதான். கடுமையான இலக்குகளை அடைய, தவம் அவசியம். அசுரர்கள் கூட தவமிருந்தே பல அபூர்வ வரங்களை பெற்றனர் என்பதை, நம் புராணங்கள் மூலம் அறிகிறோம்.
பொதுவாக, ஆண்களை விட பெண்களே அதிக வயது வரை உயிர் வாழ்வர். இதற்கு காரணம், அவர்களின் மன ஒருமைப்பாடு. இதற்காக, அவர்கள், காட்டிற்கு சென்று தவம் செய்வதில்லை; மாறாக, சமையல் கட்டில் தவம் செய்கின்றனர்.
உணவு சமைக்கும் போது கவனம் சிதறினால், ருசி கெட்டுப் போகும். மன ஒருமைப்பாட்டுடன் சமைத்தால், உப்பு, உறைப்பு, இனிப்பு எல்லாம் அளவோடு இருக்கும். ஏதோ கோபத்திலோ, வருத்தத்திலோ மனம் சிதறிய நிலையில் சமைத்தால், அன்று சாப்பாடு அவ்வளவு தான்!
இதனால் தான், சமையல் செய்வது தவமாகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண வீடுகளில் சமைப்பவர்களை, 'தபசு பிள்ளைகள்' என்று சொல்வர். வீட்டுச் சமையலுக்கே அதிக கவனம் வேண்டுமென்றால், திருமண சமையலில் எந்தளவுக்கு கவனம் செலுத்த வேண்டும். இதனால் தான், இவர்கள், தபசு பிள்ளைகள் ஆயினர்.
ஒருகாலத்தில், சிவனை வணங்குவோர் திருமாலையும், திருமாலை வணங்குவோர் சிவனையும் வணங்குவதில்லை. இதனால், அரியும், சிவனும் ஒன்றாகக் காட்சியளிக்க வேண்டும் என ஆசைப்பட்ட பார்வதி தேவி, தன் விருப்பத்தை சிவனிடம் வெளியிட்டாள். அவள் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த சிவபெருமான், 'பூலோகம் சென்று தவமிருந்து வா; உன் எண்ணம் சாத்தியமாகும்...' என்று சொல்லவே, இங்கு வந்து தவமிருந்தாள் அம்பாள். அவளுக்கு சிவனும், திருமாலும் ஒரு சேர காட்சியளித்தனர். சிவனின் பாகம் சங்கரன் என்றும், திருமாலின் பாகம் நாராயணன் என்றும் இருவரும் ஒருசேர, சங்கர நாராயணர் என்று அழைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில், சிவன், அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியில், காலை பூஜையில், திருமாலுக்குரிய துளசி தீர்த்தமும், மற்ற நேரங்களில் விபூதியும் தருவர். சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகள் அணிவிக்கப்படும். ஆடித் தபசு விழாவன்று மட்டும், அம்பாளுக்கு காட்சி தர, உற்சவர் சங்கர நாராயணர் வெளியே வருவார்.
சந்திரன் போல பொலிவான முகம் கொண்டவள் பார்வதிதேவி. அவள், இங்கு தவம் செய்தபோது, பசுவின் வடிவில் தேவலோக மாதர்கள் உடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்றும், ஆவுடையம்மை என்றும் பெயர் பெற்றாள். 'ஆ' என்றாலும், 'கோ' என்றாலும், பசு என்று பொருள்படும். இவ்வுலக உயிர்களை பசுக்களுக்கு ஒப்பிடலாம். ஆவுடையம்மை என்றால், உயிர்களுக்கு சொந்தக்காரி என்று பொருள்.
திங்கள் கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடையும், வெள்ளிக் கிழமைகளில் தங்கப்பாவாடையும் அணிவிப்பர். அம்பாள் சன்னிதி முன்மண்டபத்தில், 'ஆக்ஞா சக்ரம்' என்னும் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால், மனக்குழப்பம் நீங்கி, சிறந்த மனநிலை உண்டாகும்.
ஆடித் தபசு அன்று மாலையில், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணர் காட்சி தரும் திருக்கோலத்தைக் காணுங்கள்; இனிய மனநிலையைப் பெறுங்கள்.
தி.செல்லப்பா

