PUBLISHED ON : ஜூன் 06, 2021

தெய்வங்களுக்கு ஒரு தலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, ஐந்து தலை, ஆறு தலை என, தலைகள் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். ஆனால், பாதங்கள் இரண்டு தான் இருக்கும்.
முருகனுக்கு ஆறு முகம் என்றாலும், அவரது திருவடிகள் இரண்டு தான். ஆனால், மூன்று முகத்துடன், மூன்று பாதங்களும் கொண்ட ஜுர தேவர், வித்தியாசமானவர்.
படைப்பைக் கவனிக்கும் பிரம்மாவின் உதவியாளர்களை, பிரஜாபதிகள் என்பர். இவர்களில் ஒருவர் தட்சன். தன் தவ பலத்தால், சிவனின் மனைவி பார்வதி தேவியையே மகளாகப் பெற்றான். அவளுக்கு, தாட்சாயணி என, பெயர் சூட்டினான். அவளை, சிவனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
காலப்போக்கில், மாமனார், மருமகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மருமகனை அவமானப்படுத்த நினைத்த தட்சன், யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான். அதற்கு மருமகனையும் - மகளையும் அழைக்கவில்லை.
இதைத் தட்டிக் கேட்க சென்றாள், தாட்சாயணி; அவளை விரட்டியடித்தான். கோபமடைந்த சிவன், வீரபத்திரர் எனும் தன் அம்சத்தை அனுப்பி, யாக குண்டத்தை அழிக்க உத்தரவிட்டார். வீரபத்திரருக்கு உதவியாக, தன் வெப்பமான உடலில் இருந்து தோன்றிய, ஜ்வரம் என்ற பூதத்தை அனுப்பினார். அது யாக குண்டத்தை தீக்கிரையாக்கி, மீண்டும் சிவனை அடைந்தது.
இருப்பினும், அதன் உக்கிரம் தணியவில்லை. இதைத் தாங்க முடியாமல் தேவர்களும், உலக மக்களும் சிரமப்பட்டனர். சிவனை சமாதானப்படுத்தி, அந்த வெப்பத்தை உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தார், பிரம்மா.
ஜ்வரத்துக்கு ஒரு வடிவத்தையும் கொடுத்த பிரம்மா, மற்றவர்களைப் போல் அல்லாமல், இவருக்கு மட்டும் மூன்று கால்களைக் கொடுத்தார். இவருக்கு, ஜுர தேவர் என, பெயர் சூட்டப்பட்டது.
ஒருவருக்கு அதிக காய்ச்சல் வந்தால், சக்தியிழந்து, கால்கள் தள்ளாடி படுத்து விடுவார். இவர்கள், ஜுர தேவருக்கு, மிளகை அரைத்து பூசினால், மீண்டும் சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
சக்தியிழந்த நோயாளிக்கு மூன்றாவது காலாக இருந்து, அவரை எழுப்பும் தெய்வம் என்பதால், இவருக்கு மூன்று கால்கள் உள்ளன. முக்கிய சிவன் கோவில்களின் தெற்கு பிரகாரத்தில், வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும், ஜுர தேவர் சிலைகள்.
இவர்களில் அதிக சக்திமிக்கதாகக் கருதப்படுபவர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரமார்த்தாண்டேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார்.
திருநெல்வேலி - பாபநாசம் சாலையில், 37 கி.மீ., துாரத்தில் உள்ளது அம்பாசமுத்திரம். இவ்வூர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஊர்க்காடு கிராமம் செல்லும் சாலையிலுள்ள கிருஷ்ணன் கோவில் அருகில், இக்கோவில் அமைந்துள்ளது.
தி. செல்லப்பா
