PUBLISHED ON : டிச 19, 2010

ஒரு சமயம், இங்கிலாந்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. இயேசு கிறிஸ்து, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியளித்ததை பொருளாகக் கொண்டு, கட்டுரை எழுத வேண்டுமென்று ஏற்பாடு. போட்டியில் பலர் கலந்து கொண்டனர். ஜான்பன்யன் என்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர், அப் போது சிறுவனாக இருந்தார்; அவரும், அதில் கலந்து கொண்டார். எல்லாரும் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளினர்.
ஆனால், பன்யன் மட்டும், ஒன்றுமே எழுதாமல், ஏதோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். கடைசி வரையிலும், ஒரு எழுத்து கூட தாளில் பதிவாகவில்லை. 'இன்னும் இரண்டு நிமிடம் உண்டு, அதன் பிறகு யாரும் எழுதக் கூடாது...' என்று அறிவித்தனர். அப்போது தான், அவருக்கு எழுத வேண்டுமென்று தோன்றியது.
உடனே, 'தண்ணீர் தன் நாதனைக் கண்டு நாணத்தால் சிவந்தது...' என, ஒரு கவிதை வரியைத் தாளிலே எழுதி கொடுத்தார். அவருக்கு தான் பரிசு கிடைத்தது. அந்த கவிதை வரி, எத்தனையோ செய்திகளை, உணர்ச்சி களைச் சொல்லாமல், சொல்லி விட்டது. அதனால்தான், நாம் கவிதைக்கு அத்தனை உயர்வு கொடுக்கிறோம்.
— பெ.தூரன் ஒரு கட்டுரையில்...
அப்போது, (1970ல்) இருபது பைசா பித்தளைக் காசு ஒன்று, வட்ட வடிவில் புழக்கத்தில் இருந்தது. எட்டணா அகலத்திற்கு இருக்கும். ஒரு படக் கம்பெனி, 'அன்புக்கு ஓர் அண்ணன்!' என்ற படம் தயாரித்தது. தி.மு.க., பிரமுகர் நீல நாராயணன் அதன் தயாரிப்பாளர். பாட்டெழுத கவிஞர் கண்ணதாசனை அணுகி, அவரது வீட்டிற்கு வந்தனர், மேற்படி கம்பெனியைச் சேர்ந்த இருவர்.
இருவரும், தயாரிப்பாளர் சார்பாக கவிஞரிடம் பேசிவிட்டு, அவரிடம் அட்வான்சாக, 20 பைசா நாணயம் ஒன்றைத் தந்து விட்டு சென்றனர்.
'சரிதான்... ஏதோ ராசிக்காக, இருபது பைசா நாணயத்தை அட்வான்சாக தந்தனர் போலும்!' என்று நினைத்துக் கொண்ட கவிஞரும், ஒன்றும் கேட்காமல், வாங்கிக் கொண்டார்.
இசையமைப்பாளர் விஸ்வநாதனுக்கு போன் செய்து, 'தம்பி... உன்னை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்ய, எனக்கு வேண்டியவர்கள் இப்போது வருவர். 20 பைசா அட்வான்ஸ் தருவர். அவர்களுக்கு அதுதான் ராசி போலிருக்கிறது. ஒன்றும் பேரம் பேசாமல் வாங்கி வைத்துக் கொள்!' என்றார். சற்று நேரத்தில், தயாரிப்பு நிர்வாகியும், பட இயக்குனரும், எம்.எஸ்.வி.,யைச் சந்தித்து பேசிவிட்டு, அவரிடம் ஒரு சவரன் (பவுன்) கொடுத்திருக் கின்றனர். உடனே எம்.எஸ்.வி., 'என்ன... கவிஞருக்கு 20 பைசா அட்வான்ஸ் கொடுத்தீர்களாமே!' என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார்.
(20 பைசா காசும், சவரன் நாணயமும் ஒரே மாதிரி இருக்கும். இரண் டையும் பைக்குள் வைத்திருந்த அவர்களில் ஒருவர், தவறுதலாக, 20 பைசா காசை, சவரன் என்று நினைத்து கவிஞரிடம் கொடுத் திருக்கிறார்.)
உடனே, இருவரும் கவிஞரிடம் வந்து, நடந்த தவறைச் சொல்லி, சவரனை தந்துவிட்டுச் சென்றனர்.
— ஒரு பழைய சினிமா இதழிலிருந்து...
மேடையில் ஈ.வெ.ரா., பேசத் துவங்கும் முன், பெயர் சூட்டுவதற்காக குழந்தைகளைக் கொடுத்தால், இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு பெயர் வைப்பார். ஒருமுறை, அப்படி கொண்டு வந்து கொடுத்த ஒருவரின் குழந்தையை, வழக்கம் போல் ஓரிரு நிமிடம் பார்த்து, 'சித்தார்த்தன் என்று பெயர் சூட்டுகிறேன்...' என்றார் ஈ.வெ.ரா.,
குழந்தையின் தந்தை பதற்றத்துடன், 'அய்யா... இதற்கு முன் பிறந்த என் பையனுக்கும், இதே பெயர் தான் வெச்சீங்க... இதற்கும் அதே வா....' என்றார்.
'அப்படியா?' என்ற ஈ.வெ.ரா., அவரை உற்றுப் பார்த்துவிட்டு, இது எத்தனையாவது குழந்தை?' என்று கேட்டார். வந்தவர் கூச்சத்தோடு, 'இது நான்காவது...' என்றார். குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி பிரசாரம் செய்து வரும் ஈ.வெ.ரா.,வுக்கு கோபம் வந்து விட்டது. 'போ, போ... உனக்கெதுக்கு கறுப்புச் சட்டை...' எனக் கூறி, குழந்தையைக் கோபத்துடன் திருப்பிக் கொடுத்து விட்டார். எல்லாரும் சமாதானம் செய்த பின்னர், 'பத்து ரூபாய் கொடு... இது உனக்கு அபராதம்!' என்று சொல்லி, பிறகு, 'காமராஜ்' என்று பெயர் சூட்டினார்.
— திருச்சி செல்வேந்திரன் ஒரு கட்டுரையில்...
