PUBLISHED ON : ஏப் 07, 2019

கோடையில் தான் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். மேலும், வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, சருமம் பயங்கரமாக எரியும். அதோடு, பருக்கள், வியக்குரு போன்ற சரும பிரச்னைகளை அதிகம் சந்திக்க கூடும்.
எனவே, கோடையில் விலை குறைவாக கிடைக்கும் தர்பூசணியை, சருமத்தின் மீது பூசி, அரை மணி நேரத்துக்கு பின் கழுவினால், புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் வைத்துக் கொள்ளலாம்.
கோடையில், தர்பூசணி சாறு மற்றும் தயிர் கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால் முழுவதும் பூசி, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால், சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதுடன், முகப்பரு பிரச்னையும் இருக்காது.
பால் பவுடர் மற்றும் தர்பூசணி சாறு சேர்த்து கூழாக்கி, முகத்தில் பூசி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால், வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, கருமையும் வராது.
சரும வறட்சியை போக்க, தர்பூசணி சாறுடன் சிறிது தேன் கலந்து, முகம், கை, கால்களில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம். சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, அதிகப்படியாக உள்ள எண்ணெய் பசையை, தேன் நீக்குகிறது.
சருமத்தில் வெளிப்படும் முதுமை தோற்றத்தை தடுக்க, அவகோடா பழத்தை அரைத்து, அதில், தர்பூசணி சாறை கலந்து பூசலாம்.