தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முன்னோர் அருள் கிடைக்க!

முன்னோர் அருள் கிடைக்க!

முன்னோர் அருள் கிடைக்க!


PUBLISHED ON : ஜூலை 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 26 - ஆடி அமாவாசை

சூரியனுடைய ஒளிக்கிரணங்கள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனி பெயர் உண்டு. இதில், 'அமா' என்ற பெயர் கொண்ட கிரணத்தில், சந்திரன் வந்து தங்கும் காலத்தையே, அமாவாசை என்பர்.

மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில் தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை. ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம் முன்னோர்கள் பிதுர்லோகத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க பூமிக்கு வருகின்றனர். நாம் அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, திருப்திப்படுத்த வேண்டும்.

இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து, கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம். அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது. இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல் மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று!

இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, ராமாயண காலத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கே ஏற்பட்டுள்ளது. அவர் தன் சந்தேகத்தை, ராமனிடம் கேட்டார்...

'ராமா... மறைந்த பெற்றோருக்கு, இங்கே கொடுக்கிற பிண்டப் பிரதானம் அங்கே போய்ச் சேர்கிறதாம்... இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதை இங்கிருந்து அங்கு கொண்டு போய் சேர்ப்பது யார்?' என்று, ஏளனமாக கேட்க, ராமனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது.

ராமர், தன் வாழ்வில் எதற்குமே கோபப்பட்டதில்லை. தன் மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட, அவர் அந்தளவு கோபமடையவில்லை என்பது, 'இன்று போய் நாளை வா' என, அவனுக்கு கருணை காட்டியதிலிருந்து புரிகிறது. ஆனால், ஜாபாலி இவ்வாறு கேட்டதும், அவருக்கு கோபம் வந்து, 'மகா தபஸ்வியான நீர் இப்படி கேட்கலாமா? முன்னோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பித்ரு தேவதைகளைப் போய் சேரும் என்பதை, வேதங்களே ஒப்புக்கொள்கின்றன. வேதமே நமக்கு பிரமாணம்; அதுவே சத்தியம். வேதம் சொல்வதில் உமக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா?' என்று, கேட்டார்.

ஆக, ராமபிரானாலேயே வலியுறுத்தப்பட்டது பிதுர் கடன் செய்வது. அமாவாசையன்று பிதுர்தேவதைகள் மூலம், நாம் அன்புடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் அளிக்கும் பிண்டம், நம் முன்னோர்களை போய்ச் சேர்கிறது. இவ்வாறு உணவு பெறும் நம் முன்னோர், 'நாம் நல்ல பிள்ளையைப் பெற்றோம்; நம் வம்சத்தவன் வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்வதைக் கேட்டு, தர்மத்தைக் கடைபிடிக்கிறான்' என, நம்மை வாழ்த்துவர்.

அந்த வாழ்த்து, நம் குலத்தை, வாழையடி வாழையாகத் தழைக்கச் செய்யும். நமக்கு ஆபத்து வரும் காலத்தில், அரண்போல் நின்று காப்பாற்றும். இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய செல்வத்தைத் தரும்.

அது மட்டுமல்ல... பிதுர் தேவதைகளை ஆராதித்தால், விஷ்ணுவையே ஆராதிப்பதற்கு சமம் என்ற கருத்தும் உண்டு. இதனால், அந்த லட்சுமி நாராயணனின் திவ்ய அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.

ஆடி அமாவாசையன்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் ஆசியைப் பெறுங்கள்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us