தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குறட்டை பிரச்னை தீர....

குறட்டை பிரச்னை தீர....

குறட்டை பிரச்னை தீர....


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயிருக்கே உலை வைக்க கூடியது, குறட்டை. உரிய சிகிச்சையளித்தால், குறட்டையிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

கடினமாக மூச்சு விடுதலை குறிப்பது தான், குறட்டை. இது முற்றினால், தூக்கத்தில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். 30லிருந்து 35 வயதிற்குள் இருப்போரில், 20 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும்; 60 வயதிற்கு மேற்பட்டோரில், 60 சதவீத ஆண்களும், 40 சதவீத பெண்களும் குறட்டை விடுகின்றனர்.

சுவாச உறுப்புகளில் ஏற்படும் பலவித குறைபாடுகளாலும், மூக்கிலிருந்து, குரல் வளை வரை உள்ள பாதை தளர்ச்சியடைந்து சுருங்குவதாலும், குறட்டை ஒலி உண்டாகிறது. மூக்கின் பின்பகுதி, மேல் அண்ணம், டான்சில் மற்றும் நாக்கு இவைகளே, இவ்வொலியை உண்டாக்க, முக்கிய காரணம்.

பருமனாக உள்ளவர்களுக்கு, அதிகமான தசை வளர்ச்சியால், சுவாச உறுப்புகளில், மூச்சுக்காற்று அடைப்பதாலும், மது மற்றும் தூக்க மாத்திரை உபயோகிப்பவருடைய சுவாச உறுப்புகளில் உள்ள தசைகள், தளர்ச்சி அடைவதாலும், காற்று சுலபமாக உள்ளே புக முடியாமல், குறட்டை ஒலியை உண்டாக்குகிறது.

சிறுவர்களிடையே டான்சில், அடினாய்டு சதைகள், சுவாச வழியில் தடங்கலை ஏற்படுத்தி, குறட்டை ஒலியை உண்டாக்குகின்றன. வயது அடைந்தோரிடையே, பல பேருக்கு டான்சில், மூக்கில் குருத்தெலும்பு வளைந்திருத்தல், நாக்கு தடித்திருத்தல், ஒடுங்கிய தாடை மற்றும் சுவாச உறுப்புகளில் தசை வளர்ச்சி போன்றவை குறட்டைக்கு காரணமாகிறது.

இதுதவிர, சாதாரணமாக, பெருத்த குறட்டை விடுவோரில் பலர், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். குறட்டை, முதிர்ச்சி அடைந்த நிலையில் மூச்சுத்திணறலால் இதயம், நுரையீரல் மற்றும் தினசரி பழக்க வழக்கங்களில், பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி, அபாயகரமான விளைவுகளை உண்டாக்குகின்றன.

தூக்கத்தில், மூச்சுத்திணறல் என்பது சுவாசத் தடையை குறிக்கும். அப்போது, மூச்சு, முழுவதுமாக நின்று விடுகிறது. அதனால், தூங்குபவர், மூச்சை, உள்ளே இழுப்பதற்காக, கை, கால் மற்றும் மற்ற உடல் உறுப்புகளை, பயங்கரமாக அசைத்து, தூக்கத்திலிருந்து விழித்து, மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, பின், தூங்குவது வழக்கம்.

இதனால், இவர்கள் ஆழ்ந்த தூக்கத்தை இழக்க நேரிடுகிறது. விட்டு விட்டு தூங்குவதால், தூக்கம் போதாமையால், எப்போதும், தூக்க கலக்கத்தில் இருப்பர்.

தூக்கத்தில், சுவாசிக்கும் போது, உடலுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வில்லை என்றால், ரத்தக் குழாய்கள் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவது சகஜம். இதனால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். இக்காரணத்தினால், இதயத்துடிப்பு சீராக இல்லாமல், தூக்கத்திலேயே பலர் மரணமடைகின்றனர். இந்தியாவில், இத்தகைய மரணம் ஆண்டுக்கு, 20 ஆயிரத்திலிருந்து, 30 ஆயிரம் பேருக்கு ஏற்படுகிறது.

கீழ்கண்ட, சில சிகிச்சை முறைகளை குறட்டைக்காரர்களே மேற்கொள்ளலாம்.

* உடற்பயிற்சி செய்து, உடல் பருமனை குறைத்து, தசைகளை, வலுவடையச் செய்வது.

* தூங்குவதற்கு, மூன்று மணி நேரத்திற்கு முன், மது அருந்த கூடாது.

* படுக்கும் முன், தூக்க மாத்திரைகள் மற்றும் தூக்கத்தை கெடுக்கக் கூடிய மற்ற மருந்து வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது.

* மல்லாந்து படுக்காமல், ஒருக்களித்து, ஒரு பக்கமாக படுக்க வேண்டும்.

* தலைப்பக்கம், தூக்கலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், பெரிய தலையணையை உபயோகிக்கக் கூடாது.

* பெருத்த குறட்டை விடுவோர், தேர்ச்சி பெற்ற காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.

* பகலில் தூங்குவோர், விட்டு விட்டு குறட்டை எழுப்புபவர் மற்றும் தூக்கத்தில் மூச்சு திணறுபவர்கள், முழு பரிசோதனை செய்வது அவசியம். இவ்வியாதியின் காரணத்தை, காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணரே, சரியாக கண்டுபிடிக்க இயலும்.

குழந்தைகளுக்கு, சுவாசத் திணறல், குறட்டை பிரச்னை இருந்தால் உடனே கவனிக்க வேண்டும். வேறு எந்த காரணமும் இல்லாத நிலையில், இவர்களுக்கு, டான்சில் மற்றும் அடினாய்டு ஆபரேஷன் செய்தால், ஆச்சரியப்படத்தக்க வகையில், இவ்வியாதி குணமடைய வாய்ப்பு உண்டு. இதன்பின், அவர்கள் ஆரோக்கியம் சீர்படும்.

எஸ்.கண்ணபிரான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us