
'நம்மூரில், நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் காசி, நேபாளம் சுற்றுலான்னு விளம்பரம் செய்றாங்க... அதுக்கு போய் வரக் கூட, நம்மில் பலரிடம் பணம் இல்ல. ரஷ்யக்காரன் என்னடான்னா... 100 கோடி ரூபாய் கட்டணம் வாங்கி, பயணியை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புகிறான்; சுற்றினாலும் மார்கோ போலோ போல சுற்றினால் சரித்திரத்திற்காவது பயன்படும்...' என்றார் குப்பண்ணா.
'மார்கோ போலோவா... அது நம்மூர் பிராந்தி, விஸ்கி அயிட்டம் இல்லே... என்றேன்.
'கப்பல் பயணியான மார்கோ போலோ எப்போதும் தண்ணியிலேயே, அதாவது, கடலிலேயே இருந்ததால், இந்த, 'தண்ணி'க்கும் அவன் பேரை வச்சுட்டாங்க போல!
'இத்தாலிக்காரனான போலோ தான், ஆசியா கண்டம் முழுவதையும் முதன் முதலாக பார்த்தவன். ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்நாட்டு மக்கள், அவர்கள் வியாபாரத் தன்மைகள் என, எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறான்.
'தமிழ்நாடு, 13ம் நூற்றாண்டில் எப்படி இருந்ததுங்கிறத அவன் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டிருக்கிறான். படிச்சா ரொம்ப வேடிக்கையா இருக்கு. சில நம்ப முடியாமலும் இருக்கு. தமிழகத்தை அவன், 'மாபார்'ன்னு குறிப்பிட்டிருக்கிறான்...' என்றார் குப்பண்ணா.
'ஒரு வேளை மலபாரை, அதாவது, கேரளாவை தான் அப்படி குறிப்பிட்டு இருக்காரோ என்னவோ...' என்றேன்.
'இல்லையே... அதை மலபார்ன்னு தனியாக குறிச்சுருக்கான். சிலோனை, சைலான் என்றும், நம் முத்து வியாபாரம் மற்றும் முத்துக் குளித்தலைப் பற்றியும் விவரித்திருக்கிறான்.
'அதில ஒன்று, படிக்க ஆச்சரியமாயிருக்கிறது. கிடைக்கிற முத்தில், பத்தில் ஒரு பங்கு, ராஜாவைச் சேருமாம்...'
'இதுல ஆச்சரியமென்ன இருக்கு... நிலத்திலே விளைவதில், இத்தனையில் ஒரு பங்குன்னு ராஜாவுக்கு தருவதில்லயா?' என்றேன்.
'சரிதான்; ஆனா, கிடைக்கிற முத்தில், 20ல் ஒரு பங்கு மந்திரவாதிகளுக்குத் தந்துடணுமாம்...'
'மந்திரவாதிகளா... அவங்க எங்கேயிருந்து வந்து முளைத்தனர்?' என்றேன்.
'முத்தெடுக்க மூழ்குகிறவர்கள் மீன்கள் கடித்து விடாமல் இருப்பதற்காக, மீன்களோட வாயை மந்திரம் போட்டுக் கட்டி விடுவார்களாம், அந்த மந்திரவாதிகள்; அதற்காகத்தான் அந்தச் சன்மானம்.
'அதே மாதிரி, இரவு நேரத்தில், திருட்டுத்தனமாக யாராவது கடலில் மூழ்கி முத்தெடுத்து விடாமலிருப்பதற்காக, இரவில் மீன்கள் வாயை மந்திரக் கட்டிலிருந்து எடுத்து விடுவராம். திருட வருவோரை கடிப்பதற்காக...' என்று கூறி விளக்கினார் குப்பண்ணா.
நல்ல கூத்து தான் என்று நினைத்து கொண்டேன்!
பந்திக்கு முந்து, படைக்கு பிந்துன்னு ஒரு பழமொழி இருக்கே... வீரத்திற்கு பெயர் போன தமிழகத்தில், இப்படி ஒரு பழமொழி இருக்க முடியுமா... புறநானூறு என்ற வீர காவியம் எழுந்த நாட்டிலா, இப்படி ஒரு பழிச்சொல் எனக் கேட்டேன் குப்பண்ணாவிடம்.
'நீ சின்னப் பையன்ங்கறதாலே இப்போதான் உனக்கு இந்த உணர்வு வந்திருக்கு. எனக்கு, 30 வருஷத்துக்கு முன்னாலயே இந்த உணர்வு இருந்தது. மதுரைக்கார அன்பர் ஒருவர் தான் இக்குழப்பத்தை தீர்த்து வைத்தார்.
'அந்த அன்பர், இப்பழமொழி வழங்கக் காரணம் என்னவென்று சிந்தித்து, பல அன்பர்களிடம் கேட்டிருக்கார். 'பந்திக்கு முந்து; படைக்கு பிந்து, அதாவது, முதல் பந்தியிலேயே சாப்பிட உட்கார்ந்து விடு; முதல் பந்தியில் சாப்பிடுவோருக்கு படைப்பதற்கு (பரிமாறுவதற்கு) பிந்து. ஏனென்றால், சோறு, கறி, காய்களை பரிமாறுவதில் ஈடுபட்டு விட்டால், பின், நீ உட்கார்ந்து சாப்பிட மனம் கொள்ளாது...' என்று விளக்கம் கூறி இருக்கின்றனர்.
'இது அத்தனை பொருத்தமாக அவருக்கு படவில்லை.
'காலஞ்சென்ற பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவண முதலியாரிடம் (அ.ச.ஞானசம்பந்தத்தின் தந்தையார்) அவரது ஐயத்தைக் கூறி விளக்கம் கேட்டிருக்கிறார்.
'அவர் கூறிய கருத்து: பந்திக்கு முந்து; படைக்கு பிந்து என்பது பழமொழியே அல்ல; அது ஒரு விடுகதை. பந்திக்கு முந்தும்; படைக்குப் பிந்தும்; அது என்ன? என்று கேட்பது அக்காலத்தில் வழக்கம்.
'அந்த விடுகதைக்கு விடை: வலது கை என்பதாகும். பந்தியில் சாப்பிட உட்காரும்போது, நம் வலது கைதான் முந்தி உணவை எடுக்கும்.
'வில்லேந்தி போருக்குச் செல்லும்போது, அதே வலது கை, எவ்வளவுக்கெவ்வளவு பின் செல்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அம்பானது வேகமாகச் செல்லும்.
'இந்த விடுகதையே நாளடைவில் சிதைந்து, தமிழகத்தை இழிவுப்படுத்தும் பழமொழியாக உருவெடுத்து விட்டது எனக் கூறி உள்ளார்...' என்றார் குப்பண்ணா.
திப்பு சுல்தான் காலத்தில் இருந்து, போர் என்றால் வெடி குண்டுகளை, எதிரி நாட்டின் மீது போட்டு அழிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனாலேயே, போர் என்றவுடன் வெடிகுண்டுகள் நம் நினைவுக்கு வந்துவிடும். இந்த வெடிகுண்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தது சீனர்கள் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது; ஆனால், உண்மை வேறு.
வரலாற்றை பார்க்கும்போது போரையே தொழிலாகக் கொண்டவர்களின் கவனத்தில், அவர்கள் காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, ஏனோ அவர்கள் கவனத்திற்கு வராமல் போயிருந்தது தெரிய வருகிறது.
வெடி மருந்தை ஒரு குழாயினுள் கொட்டி, போரில் அதை யார், எப்படி, முதலில் பயன்படுத்தினர் என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை.
வெடி மருந்து செய்யும் முறையை முதன் முதலில் கூறியவர், ரோஜர் பேக்கன் (1216--1292) என்பவர். இவர், பிரான்சிஸ்சன் என்ற சபையைச் சேர்ந்த துறவி. எதையும் சோதித்து அறிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.
ஒரு பொருள் எரிவதற்கு காற்று (ஆக்சிஜன்) தேவை என்று கண்டுபிடித்து சொன்னவரும் இவர் தான். கண் பார்வையை சரி செய்ய கண்ணாடியை முதன் முதலில் கண்டுபிடித்தவரும் ரோஜர் பேக்கனே! அவர், தன் காலத்து அறிவியல் துறை அனைத்தின் வினைப் பயன்களை எல்லாம், 1266ல் ஒரு நூலாக தொகுத்துள்ளார். அந்த நூலில் வெடிமருந்து செய்யும் முறையை எழுதியிருக்கிறார். அது:
ஏழு பங்கு வெடி உப்பும், ஐந்து பங்கு கரித்தூளும், அதற்கு சமமாக கந்தகமும் சேர்த்தால், அக்கலவையைக் கொண்டு பெரிய மின்னலையும், இடி முழக்கத்தையும் உண்டாக்கலாம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், நான் இப்போது கூறியிருப்பது போல புட்டுப் புட்டு எழுதவில்லை. கொடியவர் எவரும் இக்கண்டுபிடிப்பை தவறாக பயன்படுத்தி விடுவரோ என அஞ்சி, எழுத்துகளை மாற்றி அமைத்து, புதிர் போல எழுதி வைத்து விட்டார். அது பல காலம் அறியப்படாமலே இருந்தது.
போர் என்றதும் காந்திஜி, தம் சுயசரிதையில் கூறியது நினைவுக்கு வருகிறது. அதில், 'நாம் என்ன செய்த போதிலும் பிறருடைய இம்சையிலும் நமக்கு பயன் உண்டு; அதிலிருந்து தப்புவது கஷ்டம்.
'உயிர்கள் எல்லாம் ஒன்று அல்லவா? ஒருவனுடைய பிழை அனைவரையும் சார்கிறது. சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பொறுத்தது; இல்லாவிட்டால், ஒருவன் சமூகத்தில் அடங்கியவன் ஆக மாட்டான்.
'இரண்டு மனித ஜாதிகளுள் சண்டை ஆரம்பித்தால், அகிம்சாவாதியுடைய கடமை, யுத்தத்தை நிறுத்த வேண்டியது. ஆனால், அப்படிச் செய்ய சக்தி இல்லாதவன், யுத்தத்தை எதிர்த்து நிற்கும் வலிமை இல்லாதவன். தன் அரசு யுத்தத்தில் புகுவதை எதிர்ப்பதற்கு வேண்டிய தகுதியைப் பெறாதவன்.
'ஆயினும், அதிலிருந்து தானும், தன் மக்களும், உலகமும் தப்புவதற்கு வேண்டிய காரியங்களை இடைவிடாமல் செய்து கொண்டே போக வேண்டும்...' என்று கூறியுள்ளார் காந்திஜி.
இக்காலத்தில், காந்திஜி சொல்லியது போல் நடக்க முடியுமா?